நேயர் கார்த்திகா, “யாழ்ப்பாணத்தில் கணவணை இழந்த பெண்கள் வெள்ளைச்சேலை அணிவது, தாலியை களற்றுவது… போன்ற விடயங்களை கேட்டிருந்தார்…
பொதுவாக கணவன் இறந்த உடனேயே வெள்ளைச்சேலை அணிவது இல்லை.
பெண்ணிற்கு இதற்கெல்லாம் அந்த வேளை நேரம் இருக்குமோ தெரியவில்லை. பலரும் தன் கணவர் இறப்பார் என்றோ, தனக்கு ஒரு வெள்ளைச் சேலை தேவை என்றோ எண்ணிப்பார்ப்பதும் இல்லை. அதைவிட எப்பவும் பெண்கள் சொல்லும் ஒரு வாக்கியம் ” நான் பொட்டோடும், பூவோடும் போகவேண்டும்” என்பது. பிறகெப்படி அவர்கள் வெள்ளைச் சேலையை வாங்கி வைப்பார்கள்!?
பொதுவாக கல்யாணத்துக்கு முன்னரே உடை எடுப்பது போல் இதற்கு யாரும் முன்னரே வெள்ளைச்சேலை எடுத்து ஆயுத்தமாக வைத்தது போல் தெரியவில்லை. அப்படி முற்போக்கு சிந்தனையில் யாராவது முயற்சி செய்தாலும் உறவுகளும், சமுகமும் அப்பெண்ணை வேண்டாத பழிக்குத்தான் உற்படுத்தும்.
தனது கணவனது ஈமைக்கிரிகைகள் நடந்து அடுத்தநாளில் அல்லது சில தினங்களில் தான் இந்த வெள்ளைச்சேலை அணிவதை அவதானித்திருக்கின்றேன்.
இதுவும் அணைத்துப் பெண்களும் செய்வதும் இல்லை.
கணவன் மட்டும் உழைத்து வந்த குடும்பம் என்றால், “நாளை தன்னையும் குழந்தைகளையும் எவ்வாறு காப்பாற்றப் போகின்றேன்?” என்ற ஒரு சவாலான கேள்வி அப்போதே தோன்றிவிடும்.
ஒருவரின் வைராக்கியம், புதிதாய் அனைத்து உடைகளும் வெள்ளையில் வாங்குவதற்கு உரிய பொருளாதாரமும் வேறு சில காரணிகளும் தான் இந்த வெள்ளைச் சேலையை அப்பெண் தொடர்ந்து உடுத்துவதா என்பதை நிர்ணகிக்கின்றது. மற்றும்படி கூறைச்சேலையை கணவர் மீது போத்துவதாக இதுவரை நான் அறியவில்லை.
அடுத்தது, தாலி களட்டும் சம்பவம், இது உண்மையில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் ஒரு நிகழ்வு.
பெண்ணை கனவனது உடலை மூன்றுமுறை சுற்றி வந்தபின் அந்த கூட்டத்தில் உள்ள ஏற்கனவே விதவையான ஒருபெண்மணி, கணவனை இழந்த பெண்ணின் தாலியை கழட்டி இறந்த கணவனின் நெஞ்சினில் போடுவதற்கு உதவுவார். காரணம் பெண்ணால் அந்தச்செயலை தனித்து செய்யக்கூடிய மனநிலையில் அவர் இருக்கமாட்டார். அந்த சூழ்நிலைதான் மிகவும் ஒரு பாவமான செயலாக தோன்றும்.
பொதுவாக அக்காலத்து பெண்கள் தாலியை தொடர்ந்து அணிந்து வருபவர்களாக இருப்பார்கள். எக்காரணத்தைக் கொண்டும் கழட்டி வைக்க மாட்டார்கள். எனவே இந்த தாலியை களட்டும் சடங்கு அப்பெண்ணையும், சுற்றத்தாரையும் மிகவும் பாதித்த ஒரு நிகழ்வாகவே கானப்படுகின்றது.
ஆனல் இன்று தாலி விழாவிற்கு மட்டும் அணியும் பொருளாக மாற்றிக்கொண்டு வருகின்றனர் எம் சகோதரிகள்!!! இவர்களுக்கு தாலியை களட்டுவது என்பது எத்தகைய மன வேதனையைத்தரும் என்பது சிந்திக்கப்படக்கூடிய ஒன்று.
அடுத்தது குங்குமம். கணவன் இறந்த பரபரப்பினிலே இந்த குங்குமம் அதுபாட்டுக்கு அழிந்துபேவதைத்தான் காணக்கூடியதாக இருக்கும். தலையில் அடித்து அழும்போதும், கணவனின் உடலில் தலையை புதைத்து அழும்போதும் இந்த குங்குமம் என்னவாகும் என்பது உங்களாலேயே ஊகிக்க முடியும்.
கணவனுடன் முதல் முதல் இணையும் போதும், இறுதியாக பிரியும் போதும் இந்த குங்குமத்திற்கு இதேகதிதான்! உண்மையில் மனதை நெருட்டும் விடயம் இது!!
இவைதான் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது. ஆனால் இந்தியாவில் பெண்ணை திருமணப் பெண்போல் அலங்கரித்து, தலை நிறைய பூச்சூடி, நெத்தியில் பெரிய குங்குமம் இட்டு, கூரைச்சேலை கட்டி, கண்ணாடி வளையல்கள் அணிவித்து இறுதி கிரிகைகளின் போது அப்பெண்ணின் பொட்டை அவளது பின் கையால் அழித்து, தலையில் சூடிய பூமாலையை பிய்த்து எறிந்து, கையில் அணிவித்த கண்ணாடி வளையல்களை இருகைகளாலும் மோதி உடைத்து… அப்பப்பா….அப்பெண்ணை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.
இந்தமாதிரி விடயம் வெந்தபுண்ணில் வேலைப்பாச்சும் செயல். இவ்விடத்தில் எனக்கும் ஒரு விடைகாணாத வினா ஒன்றும் உள்ளது, ஏற்கனவே சிலர் இதுபற்றி கூறியிருக்கின்றனர்.அதாவது, தாலி கணவனால் கட்டப்பட்டது. ஆனால் இந்த பூவும், பொட்டும், வளையல்களும் ஒரு பெண் பிறந்து சிறுவயதாய் இருக்கும் போதே அவளுடைய பெற்றோரால் அவளுக்கு அளிக்கப்பட்டது. எதற்காக இதை எல்லாம் அழிக்கவேண்டும் என்பதுதான்!!!!???
“எல்லா வழக்கங்களும் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப் படுபவைதான். பின்னர் அவை திசைமாறி பொருள் மாறிப் போய் விடுகின்றன. இதுவும் அவ்வாறான ஒன்றுதான். . கணவர் போன பின்பு அவரால் அணிவிக்கப்பட்ட தாலி எதற்கு எனக் கருதி அதையும் கழற்றி வைத்தார்கள். இந்த வழக்கம் பின்னர் சடங்காக மாறியது. கட்டாயமாக்கப்பட்டது. கணவன் இழந்த பெண் இவற்றை எல்லாம் விருப்பத்துக்கு மாறாக செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை.
கணவனை இழந்த பெண்கள் விதவைக் கோலம் பூணுவது தான் இன்று பாதுகாப்பற்றது. தொல்லைகள் தொடரக் கூடும். சுமங்கலி தோற்றத்தைத் தொடர்வது மூலம் அவர்கள் சில அசெளகரியங்களைத் தவிர்க்க முடியும் என்றும் கருதுகிறேன்.
ஜூன் 19, 2009 at 3:31 மு.பகல்
நானும் உங்களிடம் திருவிளையாடல் நாகேஸ் போல் கேட்கிறேன் நீங்களும் சிவாஜி போல் பதில் தருகிறீர்கள். உங்கள் திறமை வியக்க வைக்கிரது
ஜூன் 19, 2009 at 9:55 மு.பகல்
நன்றி கார்த்திகா,
உங்கள் கேள்விகளுக்கே ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கல்லாம். காரணம் என்னை எழுத தூண்டுகின்றீர்களே…
நீங்கள் எப்படி தமிழிழ் எழுதுகின்றீர்கள்?
உங்களுக்கும் வலைப்பக்கங்களில் எழுதும் பழக்கம் உண்டா? அல்லது ஆவல் உண்டா?
முடிந்தால் ஏதாவது எழுதி அனுப்புங்கள் பரிச்சார்த்தமாக என் பக்கத்தில் பதிவிடுகின்றேன்.
ஜூன் 19, 2009 at 4:02 பிற்பகல்
நான் வலைப்பூவில் பெரிதாக எழுதுவது இல்லை, தற்செயலாக உங்களது வீடியோவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த்து அதனால் தான் உங்களிடம் கேட்டேன், அதே போல் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு எழுதி அனுப்பிகிறேன்.
இனி பதிவைப் பற்றி ஒரு குறிப்பு, நான் மரணச் சடங்கில் அவதானித்த விடயம்
கணவனை இழந்த பெண் மரணச் சடங்கின் போது
1.எப்போதுமே சாம்பல் நிறச் சீலையும், கறுப்பு நிற ரவிக்கையும் தான் அணிந்திருப்பர், இது நான் பல சடங்குகளில் பார்த்து விட்டேன்
2.அவர்கள் மரணச் சடங்கின் போது குங்குமம் பொட்டு வைப்பதில்லை, வெறும் நெற்றியுடன் தான் கலந்து கொள்கின்ரனர். நீங்கள் பார்த்த சடங்குகளில் பொட்டு வைத்து இருந்தனரா?
3. நான் பார்த்தவரை தாலிக்கொடியை மட்டும் தான் எல்லோறும் அணிவர் அதுவும் கணவன் இறந்த நாளில் போட்டு பின்னர், மரணச் சடங்கின் போது கழ ட்டி வைக்க வேண்டும் என்று கூறுகினறனர்.
4. அதை விட தாலிகொடியை விதவைப் பெண் மட்டும் கழட்டி வைப்பார் அல்லாவிடில் அவருக்கு உதவி செய்பவர்கள் சுமங்கலிப் பெண்கள் அல்லது ஏன் திருமணமாகத பெண்கள் கூடச் செய்வது உண்டு.
எனக்கு நேரில் காண ஒரு சந்தர்ப்பத்தில் தான் இப்படியான சந்தர்ப்பம் கிடைத்தது, மற்றப்படி எல்லாம் புகைபடங்களிலும் வாய் மூலமாகவும் கேட்டவை தான்.
உங்கள்து நேரடியான அனுபவங்கள் என்ன ? விவரிக்க முடியுமா ? இந்தச் சடங்கு நடை பெற்ற போது அந் வீட்டில் நிலைமை எவ்வாறு இருந்து, மனைவியின் செயற்பாடுகள் எப்படி இருந்தன
ஜூலை 19, 2009 at 7:55 மு.பகல்
என்ன பாரதி இருந்தாப் போல் எனது கேள்விகளுக்க் பதிலைக் காணோம், என்றாலும் உங்களுடைய மற்றைய பதிவுகள் நல்லா இருக்கிரது
ஜூலை 19, 2009 at 9:48 மு.பகல்
வணக்கம் கார்த்திகா,
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்துவிட்டேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
“பூமுடித்த பூங்குழலியின் பூவை பறிப்பது ஏது…?” என்னும் தலைப்பில் எழுதிய பதிவில் நீங்கள் திருப்தி அடைந்திருப்பீர்கள் என் எண்ணினேன். ஆனால் நீங்கள் பலே பேர்வளிதான்
சரி உங்கள் கேள்விகளுக்கு வரிசையாக பதிலளிக்க முயற்சிக்கின்றேன்…
1 சாம்பல் நிறச் சீலையும், கறுப்பு நிற ரவிக்கையும் பற்றியது. நான் ஒருசில இடத்தில் இதைக் கண்டிருக்கின்றேன், அத்துடன் பெரும்பாலும் வெள்ளையும், அதனுடன் ஒத்த மெல்லிய வர்ணங்களையும் அணிவதையும் அவதானித்திருக்கின்றேன். தனித்து வெள்ளைச் சேலை அணிவது ஒரு நடைமுறைச்சிக்கலும் உண்டு. சிறிது அழுக்கோ, கறையோ இலகுவில் தெரியும் தன்மை உண்டு. அதனால் அதிகமான மக்கள் சாம்பல் சேலையும், கறுப்பு ரவக்கையும் அணியும் வளக்கத்தைக் கொண்டிருக்கல்லாம்.
2 பொட்டு பற்றியது… கணவர் இறக்கும் வரை பொட்டுடன் இருந்த பெண், கணவர் இறந்ததும் உடனே அழிப்பது இல்லை என்றே நினைக்கின்றேன்.(பூமுடித்த பூங்குழலியின்…பதிவைப் பாருங்கள்)
3.தாலிக்கொடி பற்றியது. நிச்சயமாக அந்த சமயத்தில் தாலியைத்தவிர வேறு பல நகைகளை அணிவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லைத்தான். இருந்தாலும் தோடு,சங்கிலி,காப்பு போன்ற நகைகளை அணிந்திருப்பதை அவதானித்திருக்கின்றேன்.
4.தாலிக்கொடியை களட்டுவது… என்க்கு தெரியாத தகவலையும் சொல்லியிருக்கின்றீர்கள், உள்வாங்கிக்கொள்கின்றேன். நன்றி தகவலுக்கு!
இறுதியாக நேரடிச் சம்பவம் பற்றியது… அதாவது உயிருடன் இருக்கும் போது இவ்வளவு பாசம் வைத்திருந்தார்களா என்று நினைக்குமளவிற்கு இறந்தவர் பற்றி பெருமைகளையும், அன்பு வார்த்தைகளையும் சொல்லி கதறுவதை அனேகமாக எல்லா இடங்களிலும் பார்த்திருக்கின்றேன். ஜென்ம விரோதி என்று இருந்தவர்கள் எல்லாரும் கண்ணீர் விட்டு கத்றவும் கண்டிருக்கின்றேன்.
ஆத்மா என்று ஒன்று இருந்தால் சாவு வீட்டில் தனக்கு நடக்கும் இந்த இறுதிநாள் நிகச்சியை கண்டு அந்த ஆத்மா நிச்சயம் மகிழும்!!!
இந்த வேளை மனைவியின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருக்கும். உடன்பிறந்தோர், பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் சிறிதுகாலங்களில் தமது கவலைகளில் இருந்து விடுபட்டு வாழ்வில் வசந்தங்களை தேட ஆரம்பித்துவிடுவர். ஆனால் இந்த மனைவிக்கு மட்டும் இது ஆயுள் தண்டனையாகிவிடும். வினாடிகளில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நிமிட்மும், ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமு தொடரும் வருத்தம் இது.மனித நேயம், சேவைமனப்பான்மை என்று ஒன்று இருந்தால் இந்த விதவைப்பெண்களுக்கு ஒரு மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுத்தலே மிகப்பெரிய புண்ணியமாகப்போகும்.
இறுதியாக… கார்த்திகா என்னும் ஒரு நேயர் எதிர்காலத்தில் இப்படி கேள்விகள் கேட்பார் என் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அவதானித்திருப்பேன்.