சினிமா


யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து…

 பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் எப்படி பணமுதலைகளைப் பந்தாடுகிறார் என்பதே கந்தசாமி.

ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன் பட வரிசையில் மற்றுமொரு படம்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததே படத்தின் ப்ளஸும், மைனஸுமாகிவிட்டது. ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானை சேவலாய்ப் பறந்து வந்து பந்தாடும்போதிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை விக்ரம் உழைத்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு முறை சேவல் கெட்டப் போடும்போதும் நடை, கண்கள், முகத்தை ஆட்டுவது என்று துவங்கி கொக் கொக் கொக் கொக் என்று குரல் குடுத்து, க-ந்-த-சா-மி என்று எதிரிகளை துவம்சம் செய்யும்போதும், சி.பி.ஐ. ஆஃபீஸராக மிடுக்குடன் நடமாடும்போதும் விக்ரம் ஜொலிக்கிறார்.

ஸ்ரேயா – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரேயா! அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது! அதுவும் அலேக்ரா பாடலில் கிட்டத்தட்ட ஷில்பா ஷெட்டிக்கு போட்டிபோடுகிறது அவரது ஹிப் மூவ்மெண்ட்ஸ்!

 

பாடல் காட்சிகளில் ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் போகும் உதடு, விக்ரமை கிறங்கடிக்க கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கிறது! ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை! ஸ்ரேயாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்!

வடிவேலு கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதுதான் படத்தின் ஒரு சில நித்திரை நிமிடங்களைக் கடக்க உதவுகிறது என்பது நிஜம்! குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி! மற்றவை சுமார்.

டைட்டில் போடும்போது கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் என்று ஒட்டு மொத்தமாகப் போடாமல் கதை – சுசி கணேசன், இசை – தேவி ஸ்ரீபிரசாத், திரைக்கதை –சுசி கணேசன்.. இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார். படத்திலும் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்து சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஏதோ செய்கிறார். வேறு இடங்களில் இயக்குனர் ஒன்றும் ஸ்பெஷலாகத் தெரிவதில்லை.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது திரையில் பார்க்கும்போது மைனஸாகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாச்சு என்பது போன்றவொரு சலிப்பு வருகிறது.

கிராபிக்ஸ் வேலைகள் பிரமாதம். படத்தின் பல இடங்களில் ஒருவித யெல்லோ டோனிலேயே எடுத்திருப்பது சில நேரங்களில் கண்ணுக்கு எரிச்சலைத் தருகிறது.

க்ளைமாக்ஸ் – மிகப் புதுமையான இதுவரை யாருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி……

என்று சொல்லலாமென்று ஆசைதான். ம்ஹ்ம்! அதே ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன்……

கந்தசாமி – ஒருதடவை பார்க்கலாம்..

ஓர் உண்மையான, உன்னதமான காதல், சம்பந்தப்பட்டவர் இறந்த பின்னும் வாழும், வாழ்விக்கப்படும் என்பதை சொல்லி வந்திருக்கும் படம்தான் பொக்கிஷம்.

கொல்கத்தா துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரியும் சேரனுக்கும், நாகப்பட்டினம்- நாகூரை சேர்ந்த இலக்கியம் படிக்கும் இஸ்லாமிய பெண் பத்மப்ரியாவுக்கும் இடையே சென்னையில் உள்ள மருத்துவமனையில் மலரும் 1970ம் வருடத்திய நட்பு, பின் மெல்ல மெல்ல காதலாக கசிந்து உருகுவதும், ஜாதி, மதம் கடந்து பின் அது கை கூடியதா? இல்லையா? என்பதும்தான் ‌பொக்கிஷம் படத்தின் மொத்த கதையும்!. இதை எத்தனை வித்தியாசமாக சொல்ல முடியுமோ, அத்தனை வித்தியாசமாக சொல்லி இருக்கும் சேரன், விறுவிறுப்பு காட்டாமல் வித்தியாசத்தை மட்டுமே காட்டியிருப்பதும், படத்தின் பாதி நேரம் கடிதமாக எழுதி தள்ளுவதும், மவுத்ஆர்கன் வாசித்தபடி பயணமாக செய்வதும் சற்றே வருத்தம்!


சேரன் லெனின் எனும் பாத்திரத்தில் விஜயகுமாரின் பொறுப்பான பிள்ளைகளில் ஒருவராகவும், பத்மப்ரியாவின் நண்பர் – கம் காதலராகவும் அழகாக வித்தியாசம் காட்டி அசத்தலாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சிவாஜி காலத்து நடிப்பை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே மாதிரி, அடிக்கடி மவுத்ஆர்கனும் கையுமாக.. என்னதான் 1970 காதல் என்றாலும் கமல் – மோகன் மாதிரி நமக்கு ஒத்து வருமா? என்பதையும் யோசித்திருக்கலாம் இயக்குனர் சேரன்!

இலக்கியம் படிக்கும் இஸ்லாமிய பெண் நதீராவாக பத்மப்ரியா, நாகூர் நதீராவாகவே வாழ்ந்திருக்கிறார். ஓல்டு கெட்-அப்பில் உடம்பிலும் இன்னும் சற்றே முதுமையை காட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். எனினும் பத்மப்ரியாவிற்கு விருதுகள் நிச்சயம்.

லெனின் – சேரனின் அப்பா தாமோதரனாக விஜயகுமார், மகனாக மகேஷாக ஆர்யன் ராஜேஷ் இந்த இருவரும் படத்தில் வரும் எண்ணற்ற பாத்திரங்களில் குறிப்பிட்து சொல்ல வேண்டியவர்கள். இந்த இருவரைப் போன்றே நதீரா – பத்மப்ரியாவின் அம்மாவாக வரும் ஹேமாவும் பிரமாதம். அதிலும் அப்பாவின் காதல் கடிதங்களை படித்து விட்டு அவரது காதலியை தேடி மலேசியா சென்று, மீதம் அப்பா அனுப்பாமல் விட்ட கடிதங்களை கொடுத்து ஆறுதல் அடையும் கமன் ஆர்யன் ராஜேஷின் கேரக்டரில் தெரிகிறார் டைரக்டர்.

1970ம் வருடத்திய அரசுபஸ், அதற்கான டிக்கெட், போஸ்டர் சீல், லெட்டர்ஸ், போஸ்ட் பாக்ஸ், சினிமா போஸ்டர்கள், கொல்கத்தா டிராம் வண்டி, குதிரை வண்டி, கூண்டு வண்டி, டாக்ஸி என ஏகமாக மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் சேரன், கொல்கத்தா பக்கத்து போர்ஷன் இளவரசுவின் மனைவி கல்பனா பேசும் டயலாக்குகளில் கோட்டை விட்டிருப்பது கொடுமை. 1970களில் ஆண்களே பேசத் தயங்கும், என்ன உங்களுக்கு அந்த மூன்று நாளா? முத்தமா, மொத்தமா?, போன்ற வசனங்கள் தேவைதானா? யோசித்திருக்கலாம் சேரன்!

சேரன்  – பத்மப்ரியாவின் நட்பு – காதலாக மாறும் என்பதையும், மதத்தை கடந்து இவர்களது காதலுக்கு பத்மப்ரியாவின் அப்பா சம்மதம் தெரிவிப்பதில் பின்னால் ஏதோ ப்ளான் இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே யூகிக்க முடிவது… உள்ளிட்ட இன்னும் சில பலவீனங்கள் இருந்தாலும் ராஜேஷ் யாதவின் ஓவிய ஒளிப்பதிவும், சபேஷ் முரளியின் காவிய இசையமைப்பும் அந்த பலவீனங்களை மறக்கடிக்க செய்யும் பெரும் பலங்கள். ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் பாலங்களும் கூட!

மொத்தத்தில் சேரனின் எழுத்திலும், இயக்கத்திலும், நடிப்பிலும் பொக்கிஷம் கோபுரத்தில் தூக்கி வைக்கும் உச்சமும் அல்ல.. குப்பையில் தூக்கிப் போடும் மிச்சமும் அல்ல…! காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனதில் ஓட்டும் பாதரசம்!

நன்றி: தினமலர்

நம்ம கமல்ஹாசன் பத்து வேடங்கள் போட்டு தசாவதாரத்தில் அசத்தினார். படத்தின் பாடல் வெளியிட்டு விழாவிற்கு ஜாக்கிச்சானை அழைத்திருந்தார்.

ஒருவர் சாகப்போகும் தரவாயில் சென்று உயில் பிளைத்தவர்களை மறு அவதாரம் எடுத்துவிட்டதாகக்கூட சொல்லல்லாம்.

அப்படிப்பார்த்தால், இந்த ஜாக்கிச்சான் சினிமாவிற்காக தனது உயிரை பலதடவை தூட்சமமாக மதித்து நடித்துள்ளார். கமல் 10 வேடங்கள் போட்டு நடித்தார், ஜாக்கிச்சான் 10 தடவைகள் உயிரை கொடுத்து நடித்தார்.

கீழேபாருங்கள் அவரின் சாகாசங்களை !

10 வேடங்களில் கமல் நடிக்க 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்
மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி
ஜப்பானிய கராத்தே மாஸ்டர்
பஞ்சாபி கஜல் பாடகன்
நியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்
கத்தி துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்
எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்
நவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்
இழுத்து இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி

- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம் ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய் என்று சோழ மன்னன் எச்சரிக்க கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க என்ன நடக்குமோ ஏது ஆகுமோ? என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும் கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும் கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்… காட்சியமைப்பும் கமலின் நடிப்பும் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.

தமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் – அட்வென்சர் – சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்!

பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம்இ விழி அசைவுகள் உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.

அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும் துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்!

முகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை சாமர்த்தியம்.

கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள் சுனாமி அதிவேக கார் துரத்தல்கள் சோழர்கால காட்சிகள் அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.

தரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.
- குமுதம் விமர்சன குழு -

தசாவதாரத்தின் வலைப்பக்கம்

http://www.dasavathaaram.com/

http://www.dasavatharam.info/