புராதன மன்னர்கள் காலங்களில் பொற்காசுகள் (தங்க காசுகள்) மற்றும் வெள்ளி காசுகள் புழங்கி வந்தன என்பார்கள்.இதுமாதிரியான பூமியின் அபூர்வ உலோகங்களில் இருந்து காசுகள் செய்ததால் அக்காசுகள் தானே தனக்கென ஒரு மதிப்பை தாங்கி உருக்காலைகளை விட்டு வெளிவந்தன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மதிப்பு நீடித்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கென அளித்த பணம் இது தானோ என்னவோ?.என்றைக்கு மனிதன் அச்சகத்தில் பணத்தை காகிதத்தில் இஷ்டத்திற்கும் அச்சடிக்க தொடங்கினானோ அன்றைக்கு வந்தது வினை.இன்று பொட்டி நிறைய பணத்துக்கு கூட ஒன்றும் வாங்க முடிவதில்லை.எங்கும் பணவீக்கம் அதாவது Inflation. பொருளாதார வீழ்வுகளிலிருந்து எழ அமெரிக்க ஐரோப்பிய சென்ட்ரல் பாங்குகள் பில்லியன் கணக்கில் டாலர்களையும் யூரோக்களையும் அச்சடிக்கின்றார்கள். ரொம்ப எளிதாய் European Central Bank pumps $500 bn into banking system-னு பேப்பர்களில் ஒரு வரி. அவ்ளோதான் செய்தி. விளைவுகள்? யாருக்கு தெரியும்.நம்மூர் “இரண்டு ரூபாய்” தாளை விட “ஒரு ரூபாய்” காசுக்கு மதிப்பு அதிகம் தெரியுமோ? அதாவது இரண்டு ரூபாய் தாளின் மதிப்பு இரண்டு ரூபாய்தான். ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஏழு ரூபாயாம்.எப்படி? அந்த ஒரு ரூபாய் காசு உலோகத்தை உருக்கி சவரபிளேடு செய்து விற்றால் அது மூலம் ஏழு ரூபாய் கைக்கு வரும். ஆனால் பேப்பர் பணம் வெறும் தாள் தான். இதுதான் உலகளாவிய அனைத்து காகித கரன்சிகளின் நிலையும் கூட.

டாலர் மதிப்பு இறங்குவதும் தங்கம் மதிப்பு ஏறுவதும் காகித கரன்சிகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதையும் தங்கத்தின் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதையும் காட்டுவதாக கூட இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு டன் கணக்கில் தங்கம் வாங்கி செயற்கையாக தட்டுப்பாட்டை வருவித்து அதன் விலையை வேண்டுமென்றே உயர்த்தி பின் டமாலென அத்தனையையும் வித்து லாபம் சம்பாதிக்க துடிக்கும் சில பெரும்புள்ளிகளின் சித்துவேலையாகவும் இருக்கலாம்.