மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை எதனால் எழுகிறது எனப் பார்க்கத்தான் இந்தப் பதிவு.

மண்வாசனைக்கு முக்கியமான காரணம் ஒரு பாக்டீரியாதான். Actinomycetes என்ற வகையைச் சார்ந்த இந்த நுண்ணுயிரிகள் மண் ஈரப்பதமாக வளர்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நிலமானது காய்ந்து போகும் பொழுது ‘ஸ்போர்ஸ்’ எனப்படும் விதைகளை வெளியிடுகின்றன. மழை பொழியும் பொழுது இந்த விதைகள் மழை நீரின் வேகத்தால் நிலத்தை விட்டு எழும்பி காற்றில் கலக்கின்றன. இந்த விதைகள் ஒரு விதமான மண் வாசம் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த வாசம் தரவல்ல ரசாயனத்தின் பெயர் Geosmins. அப்படி காற்றில் கலந்த இந்த ரசாயனங்களை நாம் சுவாசிக்க நம்மால் மண் வாசனையை உணர முடிகின்றது. இதன் காரணமாகத்தான் வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் பொழுது இவ்வாசம் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பொழுது இவ்வாசனை அதிகம் இருப்பதில்லை. இவ்வகை பாக்டீரியாக்கள் உலகெங்கும் பரவி இருப்பதால் நம்மால் எங்கு மழை பெய்தாலும் இவ்வாசனையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.

மூன்றாவதாக ஒரு காரணி சொல்லலாம் என்றால் அது மழை பெய்யும் இடத்தில் வளரும் தாவரங்கள்தான். இத்தாவரங்களில் இருந்து வெளியேறும் நறுமண எண்ணைகள் (பூக்களின் வழியாக, கிளைகள் உடைக்கப்படும் பொழுது என பல வகைகளில் இந்த தாவர எண்ணைகள் காற்றில் கலக்கப்படுகின்றன.) காற்றினில் கலந்து பின் அங்கு இருக்கும் பாறைகள் போன்றவற்றில் சேர்கின்றன. இப்பாறைகள் மீது மழைநீர் படும் பொழுது, இந்த எண்ணெய்கள் அத்தண்ணீரில் கலந்து அதன் மூலமும் இந்நறுமணங்கள் கமழ கூடிய வாய்ப்புகள் வருகின்றன. முதலில் கூறிய நுண்ணுயிரிகள் மூலம் வரும் மணம் போன்று இதுவும் இனிதான மணமாகவே இருக்கும்.

இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?