பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. “அஸ்ரொயிட் 2007 ரியு24′ எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது.2027 ஆம் ஆண்டில் மாபெரும் எரிகல் ஒன்று பூமியின் மிக அருகே கடந்து செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பூமியைக் கடக்கவுள்ள இந்த எரிகல், பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், தொலைநோக்கியின் உதவி கொண்டு இந்த எரிகல்லைப் பார்வையிட முடியும் எனக் கூறுகின்றனர். இந்த எரிகல், முதன் முதலாக அரிஸோனா பல்கலைக்கழகத்தின் கேடலினா வானியல் ஆராய்ச்சிக் குழுவாலேயே கண்டறியப்பட்டது.

இதற்கு முன் 2004 ஆம் ஆண்டு 31 ஆம் திகதி எரிகல்லொன்று பூமியை 6500 கிலோ மீற்றர் தூரத்தில் கடந்தது. மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் பூமியைக் கடந்த “”2007 டபிள்யு டி 5” எனும் எரிகல், எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தை 26000 கிலோமீற்றர் தொலைவில் கடக்கவுள்ளது. இந்த எரிகல் செவ்வாய்க் கிரகத்தில் மோதவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.