மேலே உள்ள வீடியோவை பார்த்தீர்கள்தானே? மேற்கொண்டு படியுங்கள் கீழே…

சென்னை நரக… sorry, ‘நகர’வாசிகளிடம் மாதவன் கேட்கிறார்,

மாதவன்நீங்க உங்க வீட்டில் சிட்டுக்குருவியை கடைசியா பார்த்து எத்தனை நாளாகிறது, தவளையின் கத்தலை கேட்டு எத்தனை நாளாகிறது?……….. சிட்டுக்குருவியெல்லாம் எங்கே போச்சு? அது தொலைஞ்சு போனதுக்கு காரணம் என்ன? சாப்பிட புழு இல்லாம போனது தானே காரணம்? ஏன் புழு இல்லாம போச்சு?….. நம்ம கார்லஇருந்தும் பைக்லேயிருந்தும் வெளிவரும் நச்சுப்புகை தானே இதுக்கெல்லாம் காரணம்? நாமெல்லாம் பொறுப்பில்லாம பூமியோட வளத்தை சூறையாடியதால கடந்த 50 வருஷத்தில் மட்டும் பூமியோட climate ஒரேயடியா மாறிப்போச்சு! எங்கே பார்த்தாலும் புயல், வெள்ளம், அப்படியில்லேன்னா அதிகமான வெப்பம், பஞ்சம்.

மேலும் சொல்கிறார்…

சென்னையில இப்போவெல்லாம் குளிர்காலம்கிறதே இல்லாம போச்சு (அது எப்போ தான் இருந்திருக்கு D ) கன்னாபின்னான்னு மழை பெயுது, ஆனாலும் தண்ணீர் பஞ்சம்! கோடைக் காலங்களில அதிகப்படியான வெப்பம். இப்படியே போனா எதிர்காலத்தில் ரோட்டிலேயே தோசை, ஆம்லெட் எல்லாம் சுட்டுக்கலாம். ஆனா அதை சாப்பிட நாம இருப்போமாங்கறது தான் பிரச்சனையே!!

இதை படிக்கும்போது இரண்டு வருஷம் முன்னாடி பில் க்ளின்டன் சொன்னது ஞாபகத்துக்கு வருது. சர்வதேச பெருந்தலைகள் கலந்துக்கற சுற்றுச்சூழல் கருத்தரங்கங்களில நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அமெரிக்கா (புஷ்) மதிக்காம இருக்கறத பார்த்து கடுப்படைஞ்ச கிளின்டன், “இதே ரேஞ்சில் போனா அடுத்த கருத்தரங்கம் நடத்தும் போது நிலமெல்லாம் மூழ்கிப்போய், எங்காவது படகுல மேல நின்னு தான் நாமெல்லாம் பேச வேண்டியிருக்கும்” என்று அலுத்துக்கொண்டார்.

மாதவன் மேலும் சொல்றார் கேளுங்க,

உலகத்தில் வாழும் நாம் எல்லோருமே இதுக்கு பொறுப்பெடுத்துக்கலைன்னா மனித இனத்தை யாராலும் காப்பாத்த முடியாது. நம் வாழ்க்கை முறையில் நாம் செய்துகொள்ளும் சின்ன சின்ன மாற்றங்களும் பெரிய அளவில் உதவும். முடிஞ்ச வரைக்கும் ஏசி பயன்படுத்தாதீங்க, மின்சாரத்தை சேமியுங்க, பிளேன்ல போறதுக்கு பதிலா ரயில்ல போங்க, முடிஞ்ச வரைக்கும் (பஸ், ரயில், ஷேர் ஆட்டோ மாதிரியான) பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துங்க.

கடைசியா முத்தாய்ப்பா சொல்றார்…

சுற்றுச்சூழல் ஆர்வம், சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்க நம்மாலான முயற்சி செய்வது, சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்துகொள்வது, இதெல்லாம் சமூக சேவை இல்லை, காலத்தின் தேவை. நம் இனத்தை காப்பாற்றிக்கொள்ள, உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருவருமே சுற்றுச்சூழல் ஆர்வலராவது இப்போது மிகவும் அவசியம்.

இதெல்லாம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாதவன் சொன்னதாக ஹிண்டுவில் படித்தது. மேலே சொன்னதெல்லாம் யார் சொல்கிறார், என்ன மேடையில் சொல்லப்பட்டது என்பது முக்கியமில்லை, சொல்லப்படும் விஷயம் தான் கவனிக்க வேண்டியது.

நம்முடைய அற்ப ஆசைகளை தீர்த்துக்கொள்ள நுகர்வோர் கலாசாரம் (consumerism) என்ற பெயரில் நம் பூமியின் வளங்களை கடந்த 50 வருடங்களில் சூறையாடி சுற்றுச்சூழலை கெடுத்து அடுத்த தலைமுறையினர் வாழ வழியில்லாம் பண்ணியது உண்மை, புவி வெப்பமடைதல் (global warming), அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எல்லாம் உண்மை, இதையெல்லாம் யாரும் மறுக்க முடியாது. இதெல்லாம் மாதவன் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. தினமும் செய்திகளை பார்த்தாலே தெரியும், உலகில் உள்ள எந்த மூலையிலாவது புயல், மழை, வெள்ளம்… ‘இத்தனை மக்கள் வீடுகளை இழந்தார்கள்’ என்பது போன்ற செய்திகள் வாடிக்கையாகிவிட்டது. “நாங்க நினைச்சதை விட ரொம்ப வேகமாவே துருவ பனிக் கட்டிகள் (polar ice caps) உருகி வருகிறது” இது புவி வெப்பமடைதலை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் வருஷா வருஷம் தவறாமல் சொல்லும் டயலாக்.

முதலில் புவி வெப்பமடைதலே கட்டுக்கதை என்றார்கள், அப்புறம் இதெல்லாம் உண்மை என்பதை ஒப்புக்கொண்டு 100 வருஷத்துக்குள் பனியெல்லாம் உருகி கடலோரப் பகுதிகள் மூழ்கும் என்றார்கள், இப்போ ‘நாங்க நினைச்சதை விட வேகமாவே உருகிட்டு வருது’ என்கிறார்கள். 2013இல் உலகம் அழியும் என்பது சில மதங்களின் நம்பிக்கை. இவர்களின் நம்பிக்கையை விட விஞ்ஞானிகளின் கணக்கு ஒன்றும் துல்லியமானது இல்லை போலிருக்கிறது.

புவி வெப்பமடைதலும் அபாயங்களும் எந்த அளவுக்கு உண்மையோ, அதே போல் நாம் எல்லோரும் ஒருசேர பொறுப்பை ஏற்றுக்கொண்டு நம்மாலானதை செய்தால் மனித இனத்தை அழிவிலிருந்து காக்க வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. சென்னையில் குளிர்காலம் இல்லையென்று மாதவன் சொன்னாலும், இந்த நவம்பர் மாதம் சென்னையில் நல்ல மிதமான தட்ப வெப்பம் தான் நிகழ்கிறது. அப்போதும் கூட பல வீடுகளில் இருபத்துநான்கு மணிநேரமும் ஏசி ஓடுகிறது…. இதை என்னவென்று சொல்வது? பல ஊர்களில் தெரு விளக்குகள் கிடையாது என மக்கள் குறைபட்டுக்கொள்வது தெரிந்தது தான், ஆனால் எங்கள் ஊரில் பகலில் கூட தெருவிளக்கு எரியும் தெரியுமில்ல? அரசாங்கத்துக்கும் மின்வாரியத்துக்கும் எங்கள் மேல் அவ்வளவு அக்கறை! அதே போல் எனக்குத் தெரிந்த ஒருவருடைய தொழில் கொஞ்சம் சரியாகப் போகவில்லை, தொழில் முறையை கொஞ்சம் ஆராய்ந்து தேவையான மாற்றங்களை செய்துகொள்ள வேண்டியது தானே? அதைச் செய்யாமால் நேராகப் போய் வாஸ்து expertஐ பார்த்திருக்கிறார். அவர் வீட்டின் முன் இருந்த தென்னை மரம் தான் அவருடை தொழில் வீழ்ச்சிக்கு காரணம் என்று ‘எக்ஸ்பர்ட்’ சொல்ல, அடுத்த நாளே அந்த மரம் சாய்க்கப்பட்டது, நன்றாக காய்த்துக்கொண்டிருந்த மரம் அது, அது வளர்வதற்கு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும், எத்தனை உயிர் சக்தி அதை வளர்த்திருக்கும். அதையா இப்படி ஒரே நாளில் சாய்ப்பது? இது போன்ற முட்டாள்தனமான காரியங்கள் செய்யாமல் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டாலே நாம் பெரிய புண்ணியம் செய்தவர்களாகிறோம்.

நம் வாழ்க்கை முறைகளில் சின்னச்சின்ன செய்து கொண்டாலே நல்ல துவக்கம். முடிந்த வரை நம் கார் பைக்குகளில் செல்லாமல் பஸ், ரயில், ஷேர் ஆட்டோ பயன்படுத்தலாம். முடிந்தால் சைக்கிளிலேயே செல்லலாம், உடம்புக்கும் நல்லது.

மின்சாரத்தை அதிகமாக குடிக்கும் குண்டு பல்புக்கு ஒரு டாட்டா காட்டிவிட்டு CFL விளக்குகளை பயன்படுத்தலாம்.

CFL விளக்குகள் மின்சாரத்தை சேமிக்கும், பில் கட்டணமும் குறையும், சுற்றுச்சூழலுக்கும் ஓரளவு நல்லது. வீட்டுக்கு ஒரு மரமாவது வைத்து வளர்க்கலாம். இப்போதெல்லாம் சந்த பொந்துகளில் இருக்கும் சிறிய மரம் செடிகொடிகளைக் கூட வெட்டிப்போட்டு விட்டு, அதற்கு பதிலாக அங்கே கான்கிரீட் வளர்த்து, அதை இரண்டு, நான்கு, எட்டு போர்ஷன்களாக பிரித்து ‘அப்பார்ட்மென்ட்’ ஆக்கி விடுகிறார்கள், சட்டத்துக்கு புறம்பாக வரைமுறையில்லாமல் ஏரிப்படுகளிலெல்லாம் போய் வீடு கட்டிவிட்டு, பிறகு மழை பெய்யும் போது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக டிவி செய்திகளில் தோன்றி குறை சொல்கிறார்கள்! புத்திசாலித்தனமாக சிந்தித்து, வழிமுறைகள் வகுத்து, சட்டதிட்டங்களை சரியாக பின்பற்றினால் தானே நமக்கும் நல்லது, மரங்களும் செழித்து வளரும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது, மனித குலத்துக்கே நல்லது.

மாதவன் சொல்வது போல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் செயல்படுவது ஒன்றும் சமூக சேவை இல்லை, அது பொது நலம் இல்லை, நம்மை நாமே காத்துக்கொள்ள நாம் எடுக்கும் சுயநல நடவடிக்கை தான். இப்போது நம்மில் பலர், “என்னுடைய ஒரு கால் முறிஞ்சா கூட பரவாயில்ல, பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கால் முறியனும்” என்பது போன்ற மனநிலையில் வாழ்வது முட்டாள்தனமான சுயநலம். “முதல்ல அவனை நிறுத்தச் சொல்லு… அப்புறம் நான் நிறுத்தறேன்” என்பது போன்ற மனப்போக்கு இனிமேல் உதவாது! ‘அனைவரின் நன்மையே தனக்கும் நன்மை’, ‘இயற்கையுடன் இசைந்து வாழும் வாழ்க்கையே நிறைவான வாழக்கை’ என்பது போன்ற உண்மைகளை உணர்ந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களை செய்தலே புத்திசாலித்தனமான சுயநலம். அப்படிப்பட்ட புத்திசாலித்தனமான சுயநலம் தான் இன்றைய அவசரத் தேவை.