சென்னையைச் சேர்ந்த ஜெ. ராமச்சந்திரன். அண்ணாசாலை பங்காரு நாயக்கன் தெருவில் வசிக்கும் இவர், அடிப்படையில் ஒரு வக்கீல்.

படம்

ஆனால் அறிவியல் மீது கொண்ட காதலால், ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். சட்டப்படிப்புடன், `ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்’, ஆஸ்திரேலியாவில் `நாட்டிக்கல் சயின்சஸ்’ முடித்து, `லைசன்ஸ்டு நேவிகேட்டர்- ரேடியோ ஆபரேசன்ஸ்’ என்ற தகுதியைப் பெற்றுள்ள ராமச்சந்திரன், சூரிய ஒளியில் இயங்கும் சைக்கிள், சூரிய சக்தி மோட்டார் சைக்கிள், தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனம், குடிநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்குமë கருவி போன்றவற்றைத் தயாரித்துள்ளார்.

அவற்றுடன், இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் `பேஸ் மேக்கர்’ கருவிக்கு பேட்டரிக்குப் பதில் அவரவர் சிறுநீரகத்தில் இருந்தே மின்சாரம் தயாரிக்கும் முறையையும் கண்டுபிடித்துள்ளார்.

இந்த நவீன கண்டுபிடிப்புகளின் வரிசையில் ராமச்சந்திரனின் புதிய கண்டுபிடிப்பு, நாம் சாதாரணமாக அணியும் தொப்பியில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி தகடு (போட்டோவோல்டைக் பேனல்) மூலம் மின்சாரம் தயாரித்து, `செல்போன்’ சார்ஜ் செய்வது.

தனது இந்த கண்டுபிடிப்பு பற்றி ராமச்சந்திரன் கூறியதாவது:

“நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எரி சக் தித் தேவைக் காக மரபுசாரா எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய நிலையில் இன்றைய உலகம் உள்ளது.

தினந்தோறும் வீணாகிக் கொண்டிருக்கும் பேரளவு சூரிய சக்தியில் மிக மிகக் குறைந்த சதவீதத்தையே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். காரணம், சூரிய சக்தி பேனல்கள் பெரிய அளவு இடத்தை அடைத்துக்கொள்ளும்; எப்போதும் அவற்றின் மீது வெயìல் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போன்ற வரையறைகள்தான்.

நான் தற்போது, தொப்பியில் பொருத்தப்பட்ட சிறிய சோலார் பேனல் மூலம், செல்போன்கள், வாக்கிடாக்கிகள் போன்றவற்றை `சார்ஜ்’ செய்வதற்கான கருவியை `சோலார் கேப் ஆக்டிவ் சார்ஜிங் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பத்தினë மூலம் உருவாக்கியுள்ளேன்.

ராணுவத்துக்கான ஒரு `புராஜெக்ட்’ முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது (இவரது 3 `புராஜெக்ட்’களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்- டி.ஆர்.டி.ஓ. ஏற்றுக் கொண்டிருக்கிறது) எதேச்சையாக இந்தக் கருவியைக் கண்டுபிடித்தேன்.

இதன் சிறப்பம்சம், நீங்களë எப்போதும் வெயிலில் நின்று கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்கள் வெயிலில் நின்று, `சார்ஜ்’ ஆகத் தொடங்கியதும் நீங்கள் நிழலில் நின்றுகொள்ளலாம்.

வெயிலில் நின்று பணிபுரியும் பாதுகாப்பு ஏஜென்சியினர், போக்குவரத்துப் போலீசார் போன்றோர் தங்கள் தொப்பியில் `சோலார் பேனலை’ பொருத்தி, இந்தக் கருவியின் மூலம் சூரிய ஒளி சக்தியால் தங்கள் வாக்கிடாக்கியை சார்ஜ் செய்துகொள்ளலாம். தவிர, இக்கருவி மூலம் சிறிய பென்டார்ச் பேட்டரிகள், காமிரா செல்கள், சிறிய டிரான்சிஸ்டர் பேட்டரிகள் போன்றவற்றையும் `சார்ஜ்’ செய்து கொள்ளலாம்.

சாதாரணமாக, தொப்பியில் பொருத்தப்பட்டுள்ள `சோலார் பேனல்’ மற்றவர்களுக்குத் தெரியாது. நாம் வெளியே செல்லும்போது இந்தத் தொப்பியை அணிந்தபடி செல்போன் அல்லது வேறு `பேட்டரி’யை சார்ஜ் செய்தபடி செல்லலாம். வீட்டில் இருக்கும்போதும், சிறிதுநேரம் சூரிய ஒளியில் காட்டிவிட்டு ஜன்னலோரம் வைத்துவிட்டால் போதும். அதுவே `சார்ஜ்’ செய்யும்.

மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், வெளியிடங்களில் சுற்றுபவர்கள் `சார்ஜ்’ தீர்ந்துவிடும் என்பதால் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவோடு செல்போன் பேச்சை வைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கும், உடனடியாக செல்போன் `சார்ஜ்’ செய்துகொள்ள முடியாத இடங்களில், தொலைதூரப் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கும் எனது கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தற்போது தங்களுடன் செல்போன்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் `சார்ஜ்’ செய்துகொள்ள இந்தக் கருவி உபயோகமாக இருக்கும். இது முழுக்க முழுக்க `வாட்டர் புரூப்’ செய்யப்பட்டது என்பதால் மழைநீராலோ, கடல்நீராலோ பாதிப்பு ஏற்படாது. தற்போது ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் படகுகள் கவிழ்ந்தால் அதை அறிவதற்கான கருவிகளை (`எமர்ஜென்சி பொசிசன் இன்டிகேட்டிங் ரேடியோ பீக்கன்’) தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் செல்போன் தொடர்பிருந்தாலோ, ஒருவேளை விபத்தில் படகு பாதிக்கப்பட்டால் அது கவிழ்வதற்கு முன்பே அதைப் பற்றி உடனடியாக அறியலாம்.

நான் உருவாக்கியுள்ள சூரிய சக்திக் கருவியை வர்த்தக ரீதியில் 500 ரூபாய்க்கும் குறைவான செலவில் தயாரிக்க முடியும். தற்போது காவல் துறை நவீனமயமாக்கலில் இறங்கியுள்ள தமிழக அரசு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்று முடிகëகிறார் இந்த வழக்கறிஞர் விஞ்ஞானி.