சனி, ஜூன் 14th, 2008


10 வேடங்களில் கமல் நடிக்க 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்
மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி
ஜப்பானிய கராத்தே மாஸ்டர்
பஞ்சாபி கஜல் பாடகன்
நியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்
கத்தி துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்
எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்
நவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்
இழுத்து இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி

– என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம் ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய் என்று சோழ மன்னன் எச்சரிக்க கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க என்ன நடக்குமோ ஏது ஆகுமோ? என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும் கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும் கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்… காட்சியமைப்பும் கமலின் நடிப்பும் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.

தமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் – அட்வென்சர் – சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்!

பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம்இ விழி அசைவுகள் உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.

அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும் துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்!

முகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை சாமர்த்தியம்.

கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள் சுனாமி அதிவேக கார் துரத்தல்கள் சோழர்கால காட்சிகள் அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.

தரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.
– குமுதம் விமர்சன குழு –

தசாவதாரத்தின் வலைப்பக்கம்

http://www.dasavathaaram.com/

http://www.dasavatharam.info/

 

உசுப்பேத்துதல்,

நல்லா உருவேற்றிவிடுவது,

பப்பாசி மரத்தில ஏற்றிவிடுவது,

முருங்கை மரத்தில் ஏற்றிவிடுவது…

                                                           இப்படி சில வசனங்கள் எம் வாழ்வில் நடைபெறுவது உண்டு. யாராவது எம்மை தமது சொல் வல்லமையினால் உசுப்பேத்தி விட, நாமும் பிறகு என்ன நடக்கப்போகின்றது என்று தெரியாமல், வீராப்புடன் வெகுண்டெழுந்து… பின்னர் வசமாக மாட்டிய சம்பவங்கள் ஏராளம் ஏராளம்…

சிறுவயதில் நான் சிவகுருவித்தியாசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு வெளியே உள்ள பாளடைந்த தண்ணியில்லாத கிணற்றினுள் உன்னால் குதிக்கமுடியுமா என நண்பர்கள் உசுப்பேத்த…

நானும் வீராப்புடன் குதித்துவிட்டு – பின்பு மேலே ஏறமுடியாமல் தவித்து… பின்னர் அந்த வளியாலே வந்த பெரியவர் தன் வேட்டியை அவித்து, கிணற்றினுள் விட்டு…. அதைபிடித்து ஏறி வந்த என்னை “நீ பள்ளிகூடத்திற்கு படிக்கவந்தனியா அல்லது குரங்கு வித்தை காட்டவந்தனியா?” எனக் கூறி முதுகில் ஒரு அப்ளாஸ் விட்டது…

பின்னர் 8ம் வகுப்பில்- வாகீசன் கலாசாலையில் இரவு பாடம் முடித்துவிட்டு திரும்பி சைக்கிளில் நண்பன் சந்திரகுமாரும் டபிள்ஸ்ல் வரும்போது முன்னால் சைக்கிளில் போன என் நண்பன் தெய்வனுக்கு பளார் என்று முதுகிலே ஒரு அப்பளாஸ் வைத்துவிட்டு முந்திக்கொண்டு ஓட…

தெய்வனும் கடுப்புடன் விரட்ட… இவர் எங்கே எங்களை பிடிக்கின்றது, இருட்டாக இருக்கின்ற கம்பர் மலை தோட்டத்திற்குள் சைக்கிளை விடடா என சந்திரகுமார் உசுப்பேத்த…

ஒருபுறம் புகையிலைசெடியும் மறுபுறம் முளகாய்ச்செடியும் உள்ள றேட்டை குத்துமதிப்பாய் கண்டுபிடித்து பின்னால் விரட்டிவரும் தெய்வனுக்கு கண்மூடித்தனமாய் ஓட்டம் காட்ட…

திடீரென்று எம் சைக்கிளின் முன் சக்கரம் எதிலொ இடித்து நானும் சந்திரகுமாரும் நிலைகுலைந்து சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு – தோட்டத்து பள்ளத்தினுள் உள்ள ஆளமான-தோட்டத்துக்கு நீர் இறைக்கும் கட்டு இல்லாத கிணத்திற்கு ஒரு அடி அருகே போய் குப்புற விழவும், நாய் ஒன்று மரண ஓலத்துடன் கத்த … அட நாங்கள் தெருவிலே படுத்திருந்த நாய் ஒன்றின் மீது சைக்கிளை ஏற்றியது அப்போதுதான் தெரிந்தது !

பின்பு உடல் எலாம் சிராய்ப்புடன் ரத்தம் வழிய வழிய வீட்டுக்கு போய் அம்மாவிடம் வாங்கிக்கட்டியது வேறுகதை…!

இதைவிட இன்னும் ஒன்று- என் வகுப்பில் படிக்கும் நண்பன் ஒருவன் அடுத்த வகுப்பில் படிக்கும் மாணவியை விரும்ப, புராணங்களையும் இதிகாசங்களளயும் அப்படி இப்படி என சொல்லி  உசுப்பேத்தி விட, நானும் காதலுக்கு தூது போவதுதான் உலகில் மிகப்பெரிய புனிதமான சேவை என நினனத்து தூது போக…

அடுத்த நாள் அத்த மாணவியின் அண்ணன் PRINCPIAL லிடம் வர…

சம்பத்தப்பட்ட மாணவன், மற்றும் உசுப்பேத்திய மற்றய இரு மாணவர்கள் மூவருக்கும் TC கொடுத்து வெளியேற்றிய அதிபர் திரு கோ.செல்வவினாயகம் அவர்கள் என்னை மட்டும் தொடர்ந்து படிக்க அனுமதி அளிதார். என் அதிபருக்கு இன்றும் நான் நன்றி கூறுகின்றேன்.

உசுப்பேத்தும் வசனங்களான – ” நீங்கள் செய்யாமல் வேறுயார் செய்வது, எங்கே முடிஞ்சா செய் பார்க்கல்லாம், நீ தானே சிங்கனாச்சே, உன்னன விட்டால்  வேறு யாரும் இல்லை, இதுக்கு இனெருத்தன் பிறக்கனும்டா … இப்படி இன்னும் பல வசனங்களை குடும்பத்திலும், வேலை இடங்களிலும், நண்பர்கள் உறவினர் மத்தியிலும் வரும்.

இதுபோல்  உசுப்பேத்தும் வார்த்தைகளுக்கு மயங்காமல் இருப்பதுதான் எம் குடும்பத்திற்கும், எமக்கும் நல்லது.

நண்பர்களிடையே, உறவுகளிடையே பிரிவும் – உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கும் இழப்பு உண்டாகும் என்பதை அனுபவப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

நண்பர்களின் உசுப்பேத்தலினால் தன் வீரத்தைக்காட்டும் ஒருவரின் நிலையை பாருங்கள் !