உசுப்பேத்துதல்,

நல்லா உருவேற்றிவிடுவது,

பப்பாசி மரத்தில ஏற்றிவிடுவது,

முருங்கை மரத்தில் ஏற்றிவிடுவது…

                                                           இப்படி சில வசனங்கள் எம் வாழ்வில் நடைபெறுவது உண்டு. யாராவது எம்மை தமது சொல் வல்லமையினால் உசுப்பேத்தி விட, நாமும் பிறகு என்ன நடக்கப்போகின்றது என்று தெரியாமல், வீராப்புடன் வெகுண்டெழுந்து… பின்னர் வசமாக மாட்டிய சம்பவங்கள் ஏராளம் ஏராளம்…

சிறுவயதில் நான் சிவகுருவித்தியாசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு வெளியே உள்ள பாளடைந்த தண்ணியில்லாத கிணற்றினுள் உன்னால் குதிக்கமுடியுமா என நண்பர்கள் உசுப்பேத்த…

நானும் வீராப்புடன் குதித்துவிட்டு – பின்பு மேலே ஏறமுடியாமல் தவித்து… பின்னர் அந்த வளியாலே வந்த பெரியவர் தன் வேட்டியை அவித்து, கிணற்றினுள் விட்டு…. அதைபிடித்து ஏறி வந்த என்னை “நீ பள்ளிகூடத்திற்கு படிக்கவந்தனியா அல்லது குரங்கு வித்தை காட்டவந்தனியா?” எனக் கூறி முதுகில் ஒரு அப்ளாஸ் விட்டது…

பின்னர் 8ம் வகுப்பில்- வாகீசன் கலாசாலையில் இரவு பாடம் முடித்துவிட்டு திரும்பி சைக்கிளில் நண்பன் சந்திரகுமாரும் டபிள்ஸ்ல் வரும்போது முன்னால் சைக்கிளில் போன என் நண்பன் தெய்வனுக்கு பளார் என்று முதுகிலே ஒரு அப்பளாஸ் வைத்துவிட்டு முந்திக்கொண்டு ஓட…

தெய்வனும் கடுப்புடன் விரட்ட… இவர் எங்கே எங்களை பிடிக்கின்றது, இருட்டாக இருக்கின்ற கம்பர் மலை தோட்டத்திற்குள் சைக்கிளை விடடா என சந்திரகுமார் உசுப்பேத்த…

ஒருபுறம் புகையிலைசெடியும் மறுபுறம் முளகாய்ச்செடியும் உள்ள றேட்டை குத்துமதிப்பாய் கண்டுபிடித்து பின்னால் விரட்டிவரும் தெய்வனுக்கு கண்மூடித்தனமாய் ஓட்டம் காட்ட…

திடீரென்று எம் சைக்கிளின் முன் சக்கரம் எதிலொ இடித்து நானும் சந்திரகுமாரும் நிலைகுலைந்து சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு – தோட்டத்து பள்ளத்தினுள் உள்ள ஆளமான-தோட்டத்துக்கு நீர் இறைக்கும் கட்டு இல்லாத கிணத்திற்கு ஒரு அடி அருகே போய் குப்புற விழவும், நாய் ஒன்று மரண ஓலத்துடன் கத்த … அட நாங்கள் தெருவிலே படுத்திருந்த நாய் ஒன்றின் மீது சைக்கிளை ஏற்றியது அப்போதுதான் தெரிந்தது !

பின்பு உடல் எலாம் சிராய்ப்புடன் ரத்தம் வழிய வழிய வீட்டுக்கு போய் அம்மாவிடம் வாங்கிக்கட்டியது வேறுகதை…!

இதைவிட இன்னும் ஒன்று- என் வகுப்பில் படிக்கும் நண்பன் ஒருவன் அடுத்த வகுப்பில் படிக்கும் மாணவியை விரும்ப, புராணங்களையும் இதிகாசங்களளயும் அப்படி இப்படி என சொல்லி  உசுப்பேத்தி விட, நானும் காதலுக்கு தூது போவதுதான் உலகில் மிகப்பெரிய புனிதமான சேவை என நினனத்து தூது போக…

அடுத்த நாள் அத்த மாணவியின் அண்ணன் PRINCPIAL லிடம் வர…

சம்பத்தப்பட்ட மாணவன், மற்றும் உசுப்பேத்திய மற்றய இரு மாணவர்கள் மூவருக்கும் TC கொடுத்து வெளியேற்றிய அதிபர் திரு கோ.செல்வவினாயகம் அவர்கள் என்னை மட்டும் தொடர்ந்து படிக்க அனுமதி அளிதார். என் அதிபருக்கு இன்றும் நான் நன்றி கூறுகின்றேன்.

உசுப்பேத்தும் வசனங்களான – ” நீங்கள் செய்யாமல் வேறுயார் செய்வது, எங்கே முடிஞ்சா செய் பார்க்கல்லாம், நீ தானே சிங்கனாச்சே, உன்னன விட்டால்  வேறு யாரும் இல்லை, இதுக்கு இனெருத்தன் பிறக்கனும்டா … இப்படி இன்னும் பல வசனங்களை குடும்பத்திலும், வேலை இடங்களிலும், நண்பர்கள் உறவினர் மத்தியிலும் வரும்.

இதுபோல்  உசுப்பேத்தும் வார்த்தைகளுக்கு மயங்காமல் இருப்பதுதான் எம் குடும்பத்திற்கும், எமக்கும் நல்லது.

நண்பர்களிடையே, உறவுகளிடையே பிரிவும் – உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கும் இழப்பு உண்டாகும் என்பதை அனுபவப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

நண்பர்களின் உசுப்பேத்தலினால் தன் வீரத்தைக்காட்டும் ஒருவரின் நிலையை பாருங்கள் !