கிரீன்விச்சிலுள்ள கடிகாரம்

2008 ஆம் ஆண்டு நிறைவாக முடிவுக்கு வரும் போது, இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட நீண்டு இருந்தது என்பதற்கு அறிவியல் ரீதியாக ஒரு பகுத்தறிவு விளக்கம் இருக்கிறது.

இந்த ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதம் ஒரு முழுநாள் கூடுதலாக கிடைத்தது மட்டுமல்ல, இந்த ஆண்டு லீப் நொடி என்றழைக்கப்படும் ஒரு நொடியும் கூடுதலாக கிடைக்கப் போகிறது.

ஆண்டின் இறுதி நாளான இன்று புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னர் இந்த ஒரு நொடி கூடுதலாக இருக்கும். இவ்வாறான இரட்டை அனுகூலம் 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஏற்படுகிறது.

இதன் மூலம் அறிவியலாளர்கள் நிம்மதியாக பெருமூச்சு விடமுடியும். ஏனென்றால் அணு கடிகார நேரத்துடன் புவி ஒருங்கிணைந்து இருக்கும். இதன் மூலம் நேரத்தை எந்த அளவுக்கு துல்லியமாக காக்க முடியுமோ அந்த அளவுக்கு துல்லியமாக காக்க முடியும்.

எதற்காக ஒரு நொடி கூடுதல்?

அணு கடிகாரம்

புவியின் தற்போதைய சுழற்சி முன்னர் இருந்ததைவிட சீராக மிகவும் மெதுவாக குறைந்து வருவதால், இந்த சிறிய மாற்றம் தேவைப்படுகிறது. புவியின் சுழற்சி வேகம் இவ்வாறு குறைந்தது வருவதற்கு காரணம் புவி வெப்பமடைதலும் கடல் அலைகளின் அசைவுகளும் இயக்கமும் காரணம்.

உலகளவில் கணினி சர்வர்கள், மொபைல் தொலைபேசி சேவைகளை வழங்குபவர்கள், விண்ணில் ஒரு நிலையில் இருந்து செயல்படும் செயற்கை கோள் கருவிகள் ஆகியவை அணு கடிகாரங்களை ஆதாரமாகக் கொண்டுதான் தமது நேரங்களை சரி செய்கின்றன.

எனவே இந்த ஆண்டு முடிவுக்கு வந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கும் தருணத்தில், 2008 ஆம் ஆண்டில் ஒரு நொடி கூடுதலாக இருந்ததை நினைவு கூறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமே.