பலதரப்பட்ட செய்திகள் வதந்திகள் வந்தவண்ணம் உள்ள இவ்வேளையில்,  இனி என்ன நடக்கப்போகின்றது…?

அரசாங்கம் சொல்வது போல் ‘புலிகளை அளித்து விட்டாகிவிட்டது தாம் வெற்றி பெற்று விட்டோம்’ என்னும்  கருத்தில் அவர்களுக்கே  ஆப்பு  வைக்கும்  செய்தியும் இருக்கின்றது என்பதை அரசாங்கம் உணர்ந்ததாக  தெரியவில்லை. காரணம் அடுத்த கட்டம் அவர்கள் தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வை வைக்கப் போகின்றனர் என்பது மிகப்பெரிய கேள்வி.

புலிகளைச் சாட்டி காலத்தை ஓட்டியவர்களுக்கு தற்போது அந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

புலிகள் பலமுடன் உள்ள போதே ஒரு துரும்பு உரிமையையும் கொடுக்கவிடாமல் தடுத்த சிங்கள இனவாதிகள் மத்தியில் இனி எப்படி தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வை வைக்கப்போகின்றனர்?

பேச்சுவார்த்தையின் போதே ஆக்கபூர்வமான எதையும் செய்யாத அரசு இனி என்ன செய்யப்போகின்றது என்பது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா, இங்கிலாங்கிலாந்து உட்பட யூரோப்பியன் யூனியன் முதற்கொண்டு உலக நாடுகள் அனைத்தும் காத்திரமான பார்வையை இலங்கை மீது கொண்டுள்ள இவ்வேளையில், இனி சாக்குப்போக்கு சொல்லவோ, சப்பைக்காரணங்கள் காட்டவோ  முடியாது.

செய்மதிகளால் எடுக்கப்பட்ட குண்டுகள் போட்டு அழித்த தமிழ் பாதுகாப்பு வலய படங்களுக்குக்கூட  புலிகளை சாட்டிய வேடிக்கைகளை இனி நடத்த முடியாது.

இலங்கைத்தமிழருக்கு ஒரு நல்ல நிலையை ஏற்படுத்தவே இந்தப்போர் என இந்தியாவே தன் வாயால் சொன்னது. இனி தமிழருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை கொடுக்க இந்தியா முயற்சி செய்யுமா? அப்படி முயற்சி செய்யும் பட்சத்தில் அதற்கு இலங்கை அரசு எம்மாதிரியான செயலை முன்னெடுக்கும்?

ஒருவேளை கிழக்கில் நடத்திய அரசியல் திட்டம் போல் வடக்கிலும் ஒரு பொம்மை தமிழ் அரசியல் வாதிகளை உருவாக்கி அவர்களை முதலமைச்சராக்கிவிட்டு ‘இதோ தமிழருக்கு  எல்லாம்  வழங்கிவிட்டோம்’ என்று கூறப்போகின்றார்களா?

அல்லது  ஐ.நா, அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் அனைத்தும்   ஒன்று  சேர்ந்து தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வை ஏற்படுத்துவார்களா?