நாளை (21.07.2009) ஆடி அமாவை தினமாகும்.

இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை  விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கமுறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

இன்னமும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால்,

 நாம் செய்யும் சடங்குகள் எல்லாம் சரி தானா? இல்லை பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. 

பொதுவாக இந்துக்களின் வழக்கங்கள் ஒரு மன நம்பிக்கையை ஊட்டுவனவாக இருக்கின்றன. ஆடி அமாவாசையன்று, பித்ரு எனப்படும் முன்னோருக்கு  செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவையும்  மனிதர்களுக்கு நம்பிக்கையை தருவதற்காகவே செய்யப்படுகிறது.

தாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய்  விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக  தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா  என்பது பலரது சந்தேகம்.

ஏனெனில்,

எள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.

பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும்  சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.

யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள்.

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர்.

திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர்.

ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.