தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை

 

 யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டமன்னர் காலத்திலும் அதற்குப் பின்னரும் வடதமிழீழத்தின் முக்கிய துறைமுக பட்டினங்களில் ஒன்றாகவும் தமிழகக் கோடிக்கரைக்கும் வடதமிழீழத்திற்கும் பாலமாக அமைந்து திரைகடல் ஓடி திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமியே வல்வெட்டித்துறை. இலங்கைத் தமிழர் சரித்திரத்தில் வல்வெட்டித்துறை அன்றும் இன்றும் முக்கிய இடம் பெறுகின்றது.

யுத்தவீரர்கள் குடியேறிய இடம்:

 ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் ஊர் காவலுக்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே. இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை, இரண்டிலும் சேர்ந்திருந்தார்கள். இதனை 100 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் (1829 – 1910) வல்வைக் கலித்துறையில் பின்வருமாறு பாடிச் சென்றுள்ளார்.

  கார்காமர் கடண்டத்து நம் வயித்தியேசர் கருணையினாற்
  றீர்க்காயுளு மிட்டிசித்தியு மெய்திச் செறிந்தருள
  நீர்க்காலெலா முத்தச் சங்கின மூர்ந்து நிறைந்த    வல்வை
  யூர்க் காவலர் வைகிலெங் களுக்கே பெரிதூதியமே.

வல்வையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பம்

வேலுப்பிள்ளையின் பூட்டனாரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் பன்னிரண்டு கப்பல்களுக்கு அதிபதியாக இருந்து முன்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எசமானாக விளங்கி பல நாடுகளுடன் தொடர்புகள் வைத்திருந்த பெரும் கப்பல் வணிகராவார். வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில், மற்றும் காலி சந்திரமௌலீஸ்வரர் கோயில் என்பவற்றை நிர்மாணித்தவர் இவரே.

மேற்படி பாடலில் உள்ள வல்வையில் வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டியும், முத்துமாரியம்மன் கோயில், நெடியகாட்டு பிள்ளையார் கோயில் என்பவற்றைக் கட்டவும் உதவி செய்தார். முல்லைத்தீவில் கடற்கரை ஓரத்தில் விளங்கும் பெரிய மடாலயமும் ஒவ்வொருவரினதும் வர்ணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூபங்களும் இவர் பொறுப்பில் ஆக்கப்பட்டவையே.

 இவரது அடுத்த சகோதரரான குழந்தைவேற்பிள்ளை கொழும்பில் பிரபல வர்த்தகராகவும் இந்துஸ்தான் வங்கிச் சிறாப்பராகவுமிருந்தவர். தற்காலம் கொழும்பில் யாழ்ப்பாணத்தார் கதிரேசன் கோயில் என வழங்கும் சுப்பிரமணியர் ஆலயத்தை ஸ்தாபித்தவர். இன்றும் இவர்கள் குடும்பத்தை எசமான் குடும்பம் என்றுதான் அழைப்பர். வல்வையிலும் முல்லைத்தீவிலும் உள்ள தங்கள் கோயில் காணிகளில் குடியேறிய மக்களுக்கு எதிராக ஊரில் இருக்கும் சட்டத்தரணிகள் உதவ முன்வந்தும் அவர்கள் மீது உரிமை கோராது விட்டுப் பெருந்தன்மையுடன் வாழ்ந்தவர்.

 போர்த்துக்கேயர் ஆட்சியில் கிறிஸ்த்துவ மதம் பரவிவரும் நிலைக்கு எதிராக வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ச.வயித்திலிங்கபிள்ளை (1843 – 1901) வெளியிட்ட “சைவ அபிமானி” என்ற பத்திரிகைக்கு இவர்கள் குடும்பம் பெரும் பங்காற்றியதுடன் அவருக்குப் பின்னணியாகவும் இருந்துள்ளனர். வேலாயுதர் திருமேனியார் குடும்பம் பற்றி வசாவிளானைச் சேர்ந்த திரு.கல்லடி.வேலுப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாணச் சரித்திரமான “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” என்ற 1918ம் ஆண்டு நூலின் 12ம் பக்கத்தில் யாழ்ப்பாண முன்னணிக் குடும்பம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

திருவேங்கடம் வேலுப்பிள்ளை

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மலேசிய நாட்டின் கிளந்தான் என்னும் ஊரில் 10 -01 -1024ல் பிறந்தார். கல்வி கற்று காணிக்கந்தோரில் பணியாற்றி நாகலிங்கம் பார்வதிஅம்மாவைத் திருமணம் செய்து இணையர் ஆகினர். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று காணி அதிகாரியாகினார். மட்டக்களப்பு, அநுராதபுரம், வவுனியா போன்ற இடங்களில் காணி அதிகாரியாக பணிபுரிந் தார். வன்னி மாவட்டத்தில் பணியாற்றியபோது பல தமிழருக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வுக்கு அத்திவாரம் இட்டவர். இவர் அரசாங்க அதிகாரியாக இருந்தவேளை மிகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் கடமை புரிந்ததாக சிங்கள அதிகாரிகள் இவரை மெச்சினார்கள். இவர் வல்வையில் மென்மையாக நடந்து செல்வதைப் பார்க்கும் மக்கள் புற்கள் கூட மடியாது எனக்கூறு வார்கள். இவருக்கு இரு ஆண்பிள்ளைகளும் இரு பெண்பிள்ளைகளும் உள்ளனர். இவருக்கு 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி இணுவில் மகப்பேற்று நிலையத்தில் நான்காவது கடைக்குட்டியாகப் பிறந்த குழந்தையே நமது தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்.

2000ஆண்டுகளில் ஓர் வீரத்தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
– முத்தமிழ்க் காவலன் கி.ஆ.விசுவநாதம்.

 பிரபாகரன் சுத்தமான வீரன் என்பதற்கு அவன் பலம் வாய்ந்த அரசுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறானே! போதாதா? கொண்ட கொள்கைக்காகப் போராடி வருகிற அவன் வீரன்தான்.

 புறநானூற்றுக் காலம் படிக்கிறேன். அந்தத் தமிழ் வீரத்தைப் பற்றிப் படிக்கிறேன். எனக்கு 91வயது. எவ்வளவோ படித்துள்ளேன். 2000 ஆண்டுகளில் தமிழர்களில் இப்படிப் பட்ட வீரர்கள் தோன்றவில்லை.
 
துர்க்கா தூரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி நாம் பெற்ற பெறுபேறு என்று இவரைப் போற்றிப் பெருமைப் படுகிறார்.

ஆத்மஜோதி முத்தையா….
இவர் ஒரு அவதார புருஷர் என்று புகழ்கிறார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இங்கிவனைப் பெற்றிடவே என்ன தவம் செய்துவிட்டோம் என்று போற்றி மகிழ்கின்றனர்.

தேசியத் தலைவர் அவர்களது வரலாற்றுப் பின்புலம்

 தேசியத்தலைவர் அவர்களது வரலாறும் பின்புலமும் இன்றைய சந்ததியினருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் வல்வெட்டித்துறையின் இந்துப் பாரம்பரியத்தைக் கட்டிவளர்த்த பெருமைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்த வர்தான் இவர்.

 இவரின் மூதாதையர் தேவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அத்துடன் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கியதால் சோழப் பேரரசின் தளபதிகளில் ஒருவராக சோழ அரசானால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 சோழப் பேரரசின் ஆட்சியின்கீழ் வழியில் வந்தவரான ஐயக்கதேவரின் சந்ததியை அறிந்து கொள்வதன் மூலம் இன்றைய எமது வீரத்தின் பின்னணியை அறிந்துகொள்ள முடியும். அந்தவகையான ஒரு சந்ததித்தொடர்ச்சியின் ஊடாக இந்த மண்ணுக்கு அளிக்கப்பட்டவர்தான் நமது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்.

இதை இங்கே குறிப்பிடுவதனூடாக இந்த வகையில் நீண்டதொரு வகையில் வரலாற்றுப் பாரம்பரியத்தில் தோன்றிய தலைவர்களில் ஒருவர்தான் நமது தேசியத்தலைவர். அதுவே ஈழத்தமிழரின் முழு நிலையிலான தலைவிதிகளை நிர்ணயிக்கும் ஒரு பொறுப்பினை அவர்மீது சுமத்தியிருந்தது.

முன்ணோர்கள்

ஐயக்கதேவர்
கரியதேவர்
காராளர்
ஐயன்
வேலர்
ஐயம்பெருமாள்
வேலாயுதர்
திருமேனியார்
வெங்கடாசலம் (பெரியவர்)
வேலுப்பிள்ளை
திருவேங்கடம்
வேலுப்பிள்ளை
பிரபாகரன்

உசாத்துணை நூல்கள்:

1. யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 கல்லடி வேலுப்பிள்ளை
2. வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்-1997 ந.நகுலசிகாமணி
3. கூழ்நியாயம் (புரடைன) வரலாறு, வல்வை ந.அனந்தராஜ்
4. சரித்திரம் படைக்கும் ஒருவரின் சரித்திரம் – ஞாயிறு  தினக்குரல்   26 நவம்பர் 2006  தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்.

5. Economic History of Dimeniom, Dr.V.Nithyanandan