தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு அதன் ரசிகர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்கு காரணம், அந்த நிறுவனம் தரும் ஒவ்வொரு தயாரிப்பையும் பல புதுமைகளுடனும்,  புதிய, புதிய தொழில் நுட்பங்களுடனும் வெளியிடுவது தான்.

அடுத்தமாதம் சந்தைக்கு வர இருக்கும் இந்த புதிய கைபேசி பற்றி ஒரு பார்வை.

 ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாமும் விலை அதிகமாக இருந்தாலும், அதன் வடிவமைப்பும், உள்ளே புகுத்தப் பட்டிருக்கும் தொழில்நுட்ப வசதிகளும் அதை வாங்குவோருக்கு விலை ஒரு பொருட்டல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும்.

கணினி உலகில் மட்டுமே கால் பதித்து வந்த ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது முதல் ஐ-போன் மூலமாக இப்போது மொபைல் துறையிலும் கால் பதித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து வருகிறது.

சொல்லப்போனால் மொபைலில் “தொடுதிரை” என்ற ஒரு தொழில்நுட்பத்தையே ஆப்பிள் நிறுவனம் தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.அதற்கு முன்பு வரை அந்த துறையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த நோக்கியா சோனிஎரிக்சன்,ப்ளாக்பெர்ரி போன்ற நிறுவனங்கள் கூட இந்த “தொடுதிரை” தொழில்நுட்பத்தை மொபைல் பாவனையாளர்களுக்கு தர முன் வரவில்லை.

ஆனால், ஆப்பிள் நிறுவனம் தொடுதிரை மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்திய பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களின் சந்தை வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அவசர அவசரமாக தொடுதிரை மொபைல் போன்களை சந்தைக்குள் களம் இறக்கினார்கள். இப்போது உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை ‘தொடுதிரை’ வசதி கொண்ட மொபைல் போன்களை கணிசமான அளவில் சந்தையில் விற்பனைக்கு வைத்து வருகின்றன.

ஆப்பிள் நிறுவனம் அன்று செய்த அந்த புரட்சியில் விளைவாக இன்று “தொடுதிரை” மொபைல்கள் மொபைல் ரசிகர்களிடம் ஒரு முக்கிய பாவிக்கும் பொருளாக உள்ளது.

அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் புதிய புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் பிரிவில் புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் மாடல் தான் ” ஆப்பிள் ஐ-போன் 4 “என்ற புதிய மாடல் மொபைல்.

கடந்த 2007 வருடம் தனது முதல் ஐ-போன் மொபைலை உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது  ஆப்பிள் நிறுவனம்.அது ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மொபைல் என்பதால் சில குறைபாடுகள் இருந்தன.ஆனாலும் அதன் அகன்ற திரையும்,மொபைலில் திரையை விரல்களால் தொட்டு இயக்கும் புதிய அனுபவமும்,வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும்,மகிழ்ச்சியையும் கொடுத்தது.

தனது இரண்டாவது கைப்பேசியாக ” ஐ-போன் 3G ” என்ற மாடலை 2008 ஜூலை மாதம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.இந்த மாடலில் அதற்கு முன்பு வெளியிட்ட மாடலில் உள்ள சில குறைகள் தீர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தனது ஐ-போன் பிரிவில் மூன்றாவது மாடலாக ” ஐ-போன் 3GS ” என்ற மாடலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இந்த மாடலில் ப்ளுடூத் வேலை செய்யாமை,பேட்டரி உடனே தீர்ந்து போவது, மொபைல் உபயோகம் மெதுவாக இருந்தது போன்ற மேலும் பல தொழில்நுட்ப குறைபாடுகள் தீர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அதன் பிறகு இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் பிரிவில் வெளியிடும் நான்காவது மாடல் தான் ஐ-போன் 4.

பொதுவாக ஒரு நிறுவனம் ஒரு பிரிவில் எத்தனை வகையான சாதனங்களை வெளியிட்டாலும் அந்தப் பிரிவில் முதலில் வெளியிட்ட சாதனத்துக்கு கிடைக்கும் வரவேற்பு அடுத்தடுத்த சாதனங்களுக்கு கிடைக்காது, ஆனால் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் பிரிவில் வெளியிட்ட அத்தனை சாதனங்களுக்கும் அதன் பாவனை யாளர்களிடையே ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்து கொண்டே வந்துள்ளது. அதற்கு மிகமிக முக்கிய காரணம், புதிதாக அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு சாதனத்திலும் புதிதாக ஏதாவது ஒரு தொழிநுட்பத்தை புகுத்தி வாடிக்கையாளர்களை மகிழ்விக்க முயற்சிப்பது தான்.

 அந்த வகையில் இந்த ஐ-போன் 4 சாதனத்திலும் ஆப்பிள் நிறுவனம் பல புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியுள்ளது.

இனி இதன் தொழிநுட்ப வசதிகளைப் பார்ப்போம்…

ஐ-போன் 4 சாதனத்தின் வடிவமைப்பு இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மூன்று மாடல்களை விடவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதற்கு முன்பு வெளியான ஐ-போன் மாடல்கள் மூன்றுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தது. ஆனால், இந்த மாடல் அதிலிருந்து வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த மொபைலின் திரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘RETINA’ என்ற புதிய தொழில்நுட்பம் இதுவரை மொபைலில் வந்த அத்தனை திரை தொழில்நுட்பங்களை விடவும் மிக மிக உயர்ந்த தொழில்நுட்பமாகும்.சொல்லப்போனால் இதற்கு முன்பு ஐ-போனில் பயன்படுத்தப்பட்ட திரை தொழில்நுட்பத்தை விட இந்த ‘RETINA DISPLAY’ தொழில்நுட்பம் நான்கு மடங்கு சிறந்ததாகும்.

இதன் மூலம் நாம் புகைப்படங்களையும்,வீடியோ காட்சிகளையும் ஒரு ஹச்.டி (HIGH DEFINITION) தரத்தில் காண்பது போன்ற ஒரு உணர்வை பெற முடியும்.மேலும் இந்த திரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 960×640 என்ற அளவிலான பிக்செல்ஸ் ரெசுலூசன்ஸ் நமக்கு மொபைல் திரையில் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

மேலும்,மொபைலை தொடர்ந்து பயன்படுத்துவதால் மொபைலின் திரையில் நமது விரல்கள்  பட்டு சிராப்புகள் ஏற்படுவது,திரை அழுக்கடைவது போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் 5 மெகாபிக்சல்ஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட எந்த மாடலிலும் பிளாஷ்லைட் இருந்ததில்லை.ஆனால் இந்த மாடலில்  தான் முதல்முறையாக பிளாஷ்லைட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரேவு நேரத்திலும் நாம் புகைப்படம் எடுப்பதை ஐ-போன் நமக்கு எளிமையாக்குகிறது.

மேலும் இதில் ஹை-டெப்னீசியன் தொழில் நுட்பத்தில் வீடியோக்களை நாம் ரெக்கார்டிங் செய்ய முடியும்.அதை நாம் ஆப்பிள் நிறுவனம் விரைவில் மொபைலில் தரவிருக்கும் ‘IMOVIE’ என்ற செயலி(APPLICATION) மூலம் எடிட் செய்வது, காட்சிகளை கோர்வையாக அமைத்து அதற்கு பெயர் சூட்டுவது, பின்னணி இசை சேர்ப்பது, அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற வேலைகளையும் செய்ய முடியும்.

இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட இரண்டு ஐ-போன்களும் 3G தொழில்நுட்பத்தில் வெளிவந்திருந்தாலும் அவைகளில் நம்முடன் எதிர்முனையில் பேசுபவரின் முகம் பார்த்தது பேசும் வசதியை தரும் முன்பக்க கேமரா இருந்ததில்லை.அந்த குறையும் இந்த மாடலில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் முன்பக்க வி.ஜி.ஏ கேமரா மூலம் நாம் நம்முடன் எத்ர்முனையில் பேசுபவரின் முகத்தை பார்த்துக் கொண்டே பேசமுடியும்.பொதுவாக அதை VIDEO CALLING என்று பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதற்கு FACETIME என்று புதிய பெயரை சூட்டியுள்ளது.

ஒரே நேரத்தில் பல செயலிகளை(APPLICATIONS) இயக்குவதற்கு ஐ-போன் ஒத்துழைப்பதில்லை.இது ஐ-போனில் ஒரு பெரிய குறைபாடாகவே இருந்து வந்தது,இதற்கு பதிலளித்த ஆப்பிள் நிறுவனம் இதனால் போன் பேட்டரியின் சக்தி வீணடிக்கப்டும் என்று சொன்னது.ஆனாலும் வாடிக்கையாளர்கள் அதை பெரிதும் விரும்பியதால் அந்த வசதியை இந்த மாடலில் ஆப்பிள் நிறுவனம் தந்துள்ளது.இந்த மொபைலில் தரப்பட்டிருக்கும் மல்டிடாஸ்கிங்(MULTITASKING) மூலம் நாம் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட செயலிகளை இயக்க முடியும்.

பொதுவாகவே ஐ-போனில் உள்ள பெரும் பிரச்சனையே அதன் பேட்டரி திறன் தான். தொடர்ந்து ஐ-போனை பயன்படுத்தினால் வெகு சீக்கிரத்திலேயே அதன் பேட்டரி திறன் குறைந்து விடும்,ஆனால் இந்தப் பிரச்சனையும் இந்த மாடலில் நிவர்த்தி  செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஐ-போன் 4 ல் இருக்கும் பேட்டரி திறன் மூலம் 2G அலைவரிசையில் தொடர்ந்து 14 மணி நேரமும்,3G அலைவரிசையில் தொடர்ந்து 7 மணி நேரமும் பேசலாம்.மொபைல் எந்த உபயோகமும் இல்லாமல் இருக்கும் நேரங்களில் இதன் பேட்டரி திறன் 300 மணி நேரம் அப்படியே இருக்கும்.3G மூலமாக இணையதளப் பயன்பாட்டை தொடர்ந்து 6 மணி நேரமும்,வை-பை மூலமாக இணையதளப் பயன்பாட்டை தொடர்ந்து 10மணி நேரமும் மேற்கொள்ள முடியும்.வீடியோ காட்சிகளை தொடர்ந்து 10 மணி நேரமும்,இசையை தொடர்ந்து 40 மணி நேரமும் பார்த்தும்,கேட்டும் ரசிக்க முடியும்.

மற்றுமொரு புதிய வசதியாக ஐ-போனின் வெளிப்புறத் தோற்றதுக்கு விதவிதமான வண்ணங்களில் நாம் ஆடைகளை(உறைகள்)  மாற்றிக்கொள்ள முடியும். வெள்ளை, கருப்பு,  நீளம், பச்சை, ஆரஞ்சு, ரோஸ் ஆகிய நிறங்களில் ஆப்பிள் நிறுவனம் பிரத்தியேகமாக வடிவமைத்து வெளியிடும் ஆடைகளை வாங்கி நாம் பயன்படுத்த முடியும்(இந்த ஆடைகள் ஐ-போனுடன் இலவசமாக வருவதில்லை.தனியாக விற்பனைக்கு தான் கிடைக்கும்.)

ஐ-போன் 4 – ல் புகுத்தப்பட்டிருக்கும் மற்றுமொரு புதிய தொழில்நுட்பம் தான் 3-axis gyro என்ற சென்ஸார் தொழில்நுட்பம்.இதன் மூலம் நாம் போனில் விளையாட்டுகளை விளையாடும் போது வலப்பக்கம் திருப்புதல்,இடப்பக்கம் திருப்புதல்,கீழ்பக்கம் திருப்புதல்,மேல்பக்கம் திருப்புதல்,முன்பக்கம் செல்லுதல்,பின்பக்கம் செல்லுதல் போன்ற திசைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் மிக உயரிய மல்டிமீடியா கேமிங் அனுபவத்தை நம்மால் பெற முடியும்.

கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் :

* Folders for Apps என்ற வசதி மூலம் நாம் பிரிவு வாரியான செயலிகளுக்கு தனி போல்டர்கள் அமைத்து அதற்கு தனித்தனி பெயரிட்டு மிக எளிதாக பயன்படுத்தலாம்.

* iBooks மூலம் இணையத்தில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை படிக்கலாம்.

* Home Screen மூலம் முன்பக்க திரையின் புகைப்படங்களை நமது அப்போதைய சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

* iMovie செயலி மூலம் நாம் எடுக்கின்ற வீடியோ காட்சிகளை எடிட் செய்யலாம்,இதற்கு இசை சேர்க்கலாம்,அதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம்(இந்த செயலி இன்னும் வரவில்லை,விரைவில் APPLICATION STORE மூலமாக தரப்படுமாம்)

* Gift apps வசதி மூலம் நீங்கள் பயன்படுத்தும் அல்லது உங்களுக்கு பிடித்தமான செயலிகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பமுடியும்.

* மொபைலில் பதிந்து தரப்பட்டிருக்கும் Spell checking வசதி மூலம் இ-மெயில்,குறிப்புகள்,
குறுஞ்செய்திகள் மற்றும் இதர செயலிகளில் உள்ள வார்த்தைப் பிழைகளை நீக்கிக் கொள்ள முடியும்.

இவைகளுடன் இணையதளத்தில் தேடுதல்,குரல் மூலம் ஓடிக்கொண்டிருக்கும் பாடலை கட்டுப்படுத்துவது,அல்லது வரும் அழைப்புகளுக்கு பட்டனை அழுத்தாமலேயே பதிலளிப்பது,தனி குறுஞ்செய்திகளை மாற்றிவிடுவது மற்றும் நீக்கிவிடுவது,செய்தி மற்றும் குறிப்புகள், சபாரி பிரவுசருக்கு பாதுகாப்பான கடவுச்சொல், போனை அசைத்து அதன் மூலம் அடுத்த பாடல் அல்லது அடுத்த படத்தை இயக்குவது, பலான சேனல் காட்சிகளுக்கு கட்டுப்பாடு, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திரைப்படங்கள் மற்றும் செயலிகளைப் பெறுதல், வை–பை இணைப்புள்ள இடங்களில் தானாக இணைப்பு பெறுதல், குரல் குறிப்புகள் அமைத்தல், வீடியோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங்,
பாதுகாப்பான இ-மெயில் செயல்பாடு என ஐ-போனின் வழக்கமான வசதிகளும் உள்ளன.

இந்த ஐ-போன் 4 மாடலை ஆப்பிள் நிறுவனம் வழக்கம் போல ஒரே நேரத்தில் எல்லா நாடுகளிலும் வெளியிடவில்லை. இதன்படி இந்த ஐ-போன் 4  மாடல் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ்,ஜெர்மனி, மற்றும் ஜப்பான் நாடுகளில் வரும் ஜூலை மாதம் 24 ம் தேதி வெளிவருகிறது. மற்ற 88 நாடுகளிலும் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது.

ஏற்கனவே ஐ-போனின் முதல் மாடல் வெளிவந்தபோது அது மற்ற நிறுவனங்களுக்கு எப்படி ஒரு சவாலாகவும்,போட்டியாகவும் விளங்கியதோ அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் பிரிவில் வெளிவர இருக்கும் இந்த மாடல் மொபைலும் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு சவாலாகவும் போட்டியாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆப்பிள் நிறுவனம் பிரத்தியேகமாக வடிவமைத்த A4 processor மூலம் இதற்கு முன்பு வந்த ஐபோன்களை விட இந்தி புதிய ஐபோன் 4 வேகமாக இயங்க துணை புரிகிறது இதன் மூலம் நாம் மொபைலை வேகமாகவும்,எளிதாகவும் பயன்படுத்த முடியும். மேலும் இதன் முழுமையான தொழிநுட்ப விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள்.