பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட செய்யும் கத்திரிக்காயா…அதை செய்ய ரொம்ப எண்ணெய் ஊற்ற வேண்டுமே..கூட கத்திரிக்காயினை எண்ணெயில் வேறு பொரிக்க வேண்டுமே என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்…இந்த செய்முறையில் செய்து பாருங்க…

பொதுவாக பிரியாணிக்கு செய்யும் கத்திரிக்காயினை எண்ணெயில் போட்டு பொரிப்பாங்க. ஆனால், எண்ணெயில் கத்திரிக்காயினை போட்டு ஒருபொழுதும் பொரிக்ககூடாது. அப்படி எண்ணெயில் பொரித்தால் கத்திரிக்காயின் calorie அளவு 3 மடங்காக உயர்ந்து இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

 • · குட்டி கத்திரிக்காய் – 1/2 கிலோ
 • · எண்ணெய் – 1 தே.கரண்டி
 • · உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :

 • · எண்ணெய் – 2 தே.கரண்டி
 • · பட்டை – 1 ,கிராம்பு – 2, ஏலக்காய் – 1
 • · வெங்காயம் – 1
 • · இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
 • · கருவேப்பில்லை – 4 இலை

சேர்க்க வேண்டிய பொடி வகைகள் :

 • · மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
 • · தனியா தூள் – 1/2 தே.கரண்டி
 • · சீரகம் தூள் – 1/2 தே.கரண்டி
 • · மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :

 • · வேர்கடலை – சிறிதளவு
 • · காய்ந்த தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி

கரைத்து கொள்ள வேண்டியவை :

 • · புளி – பாதி எலுமிச்சை அளவு
 • · தண்ணீர் – 1 கப்

செய்முறை :

 குட்டி கத்திரிக்காயினை நான்காக வெட்டவும். கம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர்பக்கம் நான்காக பிளந்து வைக்கவும்.( இப்படி வெட்டும் பொழுது கத்திரிக்காய் உடையாமல் பார்த்து வெட்டவும்.)

 வெங்காயத்தினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியினை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

 வேர்க்கடலையினை நன்றாக வறுத்து கொள்ளவும். தேங்காய் துறுவல் + வறுத்த வேர்க்கடலை + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். (வேர்க்கடலையின் தோலுடனே சேர்த்து அரைக்கலாம்.)

நான்காக பிளந்து வைத்துள்ள கத்திரிக்காயினை, 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நாண்-ஸ்டிக் பனில் 2 – 3 நிமிடங்கள் அதிக தீயில் வைத்து வதக்கி கொள்ளவும். இதனை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே நாண்-ஸ்டிக் கடாயில், முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில்,எண்ணெய் ஊற்றி பட்டை+ கிராம்பு + ஏலக்காய் சேர்த்து தாளித்து பின் வெங்காயம்+ கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் சேர்க்க வேண்டிய பொடிவகைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அத்துடன் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவிடவும்.

அதன்பின்னர், அரைத்து வைத்துள்ள கலவை + உப்புவினை இதில் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.

இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

கடைசியில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயினை போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி கத்திரிக்காய் ரெடி. இதனை புலாவ், பிரியாணி,சாதம்,சாப்பத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

நன்றி : கீதா ஆச்சல்