சரஸ்வதி பூஜை என்றதும் உடனே ஞாபகம் வதுவது சுண்டலும் அவலும் தான்!

காலையின் பள்ளிக்கூடங்களில் தோரணம், ஊதுபத்தி, பூமாலை என ஆரம்பித்து வில்லுப்பாட்டு, பக்திப்பாடல், சமயப்பேச்சு என தொடர்ந்து புத்தகங்களை எல்லாம் சரஸ்வதி படத்திற்கு முன்னால் வைத்துவிட்டு கடைசியாக சுண்டல் அவலுடன் முடியும் இந்த வாணிவிழாவை சிறுவயதில் அனைவருமே சிறப்பாக கொண்டாடிணோம்.

பேருக்கு எமக்கிருந்த சைக்கிள்களை தேய் தெய் என்று தேய்து கழுவி, பொட்டு வைத்து பூவைத்து தொரணங்கள் கட்டிய அந்த இனிமையான நினைவுகள்…!

இரவு ஒவ்வொரு கடைகளின் முன்பும் கடலைக்கும் அவலுக்கும் நின்று – பெற்று – உண்டு, அதன் பின் இன்ன கடை சுண்டல் தான் சூப்பர்! இன்ன கடை அவல் தான் அம்சம் என்றுவேறு சான்றிதழ் கொடுத்த எம் நண்பர்கள்…. 

எல்லாமே இப்போ நினைத்துப்பார்கக மட்டும் இனிமை!

சரி ஒரு சுவையான சுண்டல் செய்வதைப் பார்ப்போம்,

தேங்காய், மாங்காய் பட்டானிச்சுண்டல்

தேவையானப்பொருட்கள்:காய்ந்த வெள்ளைப் பட்டாணி – 1 கப்

அரைக்க:

பச்சை மிளகாய் – 1
இஞ்சி – ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அலங்கரிக்க:

பச்சை மாங்காய் – துருவியது அல்லது பொடியாக நறுக்கியது – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – பொடியாக நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் போட்டு, பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் சிறிது உப்பையும் போட்டு, 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் சற்று ஆறியவுடன், திறந்து, பட்டாணியை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் (மிளகாயைக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெந்தப் பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே இறக்கி வைக்கவும். (அடுப்பில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அதிக நேரம் வைத்துக் கிளறினால், பட்டாணி அழுத்தமாகி விடும்).

பின்னர் அதன் மேல் தேங்காய், மாங்காய் துண்டுகளைத் தூவி விடவும்.

குறிப்பு: இதில் சில துளி எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம். சிலர் தாளிக்கும் பொழுது, சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்ப்பார்கள். விருப்பமானால் வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

தேங்காய் அதிகம் விரும்பாதவர்கள், தேங்காயை அரைத்து சேர்ப்பதை தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக, வெந்தப் பட்டாணியில் சிறிது எடுத்து நன்றாக மசித்து விட்டு அதைச் சுண்டலில் சேர்த்துக் கிளறினால், சுண்டல் சேர்ந்தால் போல் இருக்கும். இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் நசுக்கி அல்லது அரைத்து தாளிப்பில் சேர்க்கலாம்.