‘உயிரைப் பணயம்வைத்துக் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வயிறு வளர்க்கும் மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என்பதே இன்றைய உண்மை. நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை நாடுகளுமே மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கின்றன. அதனால்தான், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வருவதில்லை. வங்க தேசப் பகுதியில் மீன் பிடித்தார்கள் என்று மேற்கு வங்க மீனவர்​களை வங்க தேச ராணுவம் சுட்டது கிடையாது.

ஆனால், தமிழக மீனவர்கள் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து விரட்டப்பட்டு, மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டுக் கொல்லப்​படுகின்றனர். உடனே தமிழக அரசு சார்பில், நஷ்ட ஈடாக 5 லட்சம் வழங்கப்படும். டெல்லிக்கு தந்தி, போன் பறக்கும். இதுவெல்லாம் நடக்கும்போதே, மீண்டும் இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்து மீண்டும் மீனவர்களின் உயிரைப் பறிக்கும்…  இது என்ன கன்னித்தீவு தொடர்கதையா, முடிவு இன்றி பல ஆண்டுகளாகத் தொடர்வதற்கு? இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளதே… இதற்கான காரணங்கள் கேட்டு இலங்கை அரசிடம் இருந்து, இந்திய அரசு பதில் பெற்றுள்ளதா?

‘இந்தியா வல்லரசாகப்போகிறது. உலக அரங்கில் முதலிடம் பெறப்​போகிறது…’ என்று தினமும் வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால், ஒரு சுண்டைக்காய் நாடு செய்யும் அட்டூழியத்தைக்கூட தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த லட்சணத்தில் சீனாவை விஞ்சுவோம், அமெரிக்காவைத் தாண்டிச் செல்வோம் என்று சொல்வதெல்லாம் எத்தனை வெட்கக்​கேடு. நித்தமும் அப்பாவிகளை அந்நிய நாட்டுக்குப் பலி கொடுத்து, வல்லரசாக மாறி என்ன பயன்?

விகடனில் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருந்தது. நான் கேட்க நினைத்ததை அப்படியே சொன்னது போல இருந்தது. என்ன நியாயமான கேள்விதானே?

ஒரு விடயம்… இந்தக்கொடுமை எல்லாம் தமிழ் மீனவர்களுக்குத்தானே? வேறு ஏதாவது மொழிக்காரனுக்கு நடந்திருந்தால் இன்று நடப்பதே வேறு. உலகிலேயே முதல் முறையாக காலைச்சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்தவர் ஆட்சிசெயும் மக்களைப்பற்றி என்ன ரேஞ்சில் கணித்து வைத்திருப்பான் அடுத்தவன்!!!???

இப்போ புரிஞ்சுதா?