வடக்குக் கிழக்கில் நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்று பேசப்படுகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொணடிருக்கின்றது.

பல இலட்சக் கணக்கான தமிழ் உறவுகளை வயது, பால் வேறுபாடின்றிக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்து, எமது வாழ்விடங்களை நாசம் செய்து பல இலட்சம் மக்களை ஏதிலிகளாக்கி புலம் பெயரச்செய்தும், பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கியும், பலரை மானபங்கப்படுத்தியும் எமது மண்ணிலே வெறியாட்டம் நடத்தி, ஈழத் தமிழரின் துயரத்தில் சிங்கள தேசமெங்கும் வெற்றி விழாக் கொண்டாடியவர்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முகாமிட்டு வாக்குகளைக கபளீகரம் செய்வதற்குக் காத்திருக்கின்றனர்.

சிங்கள தேசத்திற்கும், தமிழீழ தேசத்திற்கும் இடையிலான மாபெரும் போராகவே இது நோக்கப்படுகின்றது. கொழும்பில் நாட்டை நிர்வகித்து சமமாக நல்லாட்சி செய்யவேண்டியவர்கள், சிங்களப்படைகளுடனும், பல்லாயிரம் சிங்களவர்களுடனும் எமது மண்ணில் வந்து முகாமிட்டு எமது மக்களை இன்னுமொரு போருக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வெட்கம் கெட்டவிடயம், அற்ப சலுகைகளுக்காக எமது மக்களின் தன்மானத்தை விலை பேசுவதற்காக ஜனாதிபதி தொடக்கம், அமைச்சர்கள், சிற்றமைச்சர்கள், ஆளுனர் என படையெடுத்து வந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காக உறுதியுடன் எமது மக்கள் இருக்கின்றார்கள். வாழ்வா சாவா என்ற நிலையில் சிங்கள தேசத்தின் முற்றுகையை முறியடிப்பதற்கு எமது மக்கள் தயாராகிவிட்டார்கள்.

நேற்று, இன்று, நாளை என எமது மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதற்காக வந்திருக்கும் கொலைகார அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக எமது உறவுகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் எமது புலம் பெயர் உறவுகள் ஈழத்தில் உள்ள உறவுகளின் வெற்றிக்குப் பலம் சேர்க்கவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உலகத் தமிழர்களின் வெற்றி. அந்த வெற்றி எமது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். இதற்கு உலகத் தமிழ் உறவுகள் தாயகத்தில் வாழ்கின்ற தமது உறவுகளுக்குத் தகவல்களை உடனடியாக அனுப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு அனைவரும் சென்று நேரத்துடன் வாக்களிக்கச் செல்ல உற்சாகப்படுத்தவேண்டும்.

ஒரு நூறு மீன்பிடி வலைகளையும், துவிச்சக்கர வண்டிகளையும், நீர் இறைக்கும் இயந்திரங்களையும் கொடுத்து பல லட்சம் மக்களை ஏமாற்றி சர்வதேசத்திற்குத் தமது போர்க்குற்றங்களை மறைத்து தமிழ் மக்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து விட்டனர் என்று காட்டுவதற்கான கபட நாடகத்தை முறியடித்து, தமிழ் தேசிய உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்குக் காட்டவும்,

தாயகத்தை மீட்டெடுத்து சுதந்திரமான நாட்டில் தன்மானத்துடன் வாழ இந்தத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கும், ஆற்றலுள்ள தலைமைத்துவத்தையும் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களையும், ஒரே கொள்கையுடன் செயற்படும் ஆற்றல் மிக்கவர்களையும் தெரிவு செய்யும் வகையில் அவர்களது விருப்பு இலக்கத்திற்கும் வாக்களித்து நூறு வீதமான வாக்குகளும் தமிழ் தேசியத்தை நோக்கியே அளிக்கப்படவேண்டும்.

எனது அன்பான உறவுகளே விரைந்த செயற்பட்டு குறுந் தகவல்கள் மூலமாகவோ, தொலைபேசி தொடர்பாடல் மூலமோ, மின்னஞ்கல் மூலமோ வீட்டுச் சின்னத்திறகு வாக்களிக்கத் தூணடுங்கள்.

யூலை 24 ம் திகதி வடக்குக் கிழக்கின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என்ற அந்தச் செய்தி சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவேண்டும்.

அன்புடன்
உங்கள்
வல்வை.ந.அனந்தராஜ்
வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்பாளர்