கன்னி ராசி

இந்த 2012-ல் பிறக்கப்போகும் புத்தாண்டு ,உங்களுக்கு இரண்டும் கலந்ததாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ஏழரைச் சனியில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தவகையில் பார்த்தால், இனி வரப்போகும் காலம் நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரம்தான். ஏழரைச் சனி முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்றாலும், இறுதி இரண்டரை ஆண்டில் இருக்கிறீர்கள். எனவே இது உங்களுக்கு ‘அப்பாடா ‘ என்று பெருமூச்சு விடவேண்டிய நேரம்தான்.

இனி கிரக சஞ்சார பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், குரு பகவான் மே மாதம் 16-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும், சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மே மாதம் 17-ம் தேதியன்று உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கு மாறி சஞ்சரிக்கப் போகிறார்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து, உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுப்பார். ஏனென்றால், ராகுவுக்கு 3-ம் இடம் என்பது ஸ்தான பலம் உள்ள இடமாகும். மனதில் தைரியம் மிகுந்து எந்த பிரச்சினையும் சந்தித்து எதிர்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பல துணிச்சலான காரியங்களில் இறங்கி, அவற்றை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள், செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியே அடைவீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். தற்போது உங்கள் முகத்தைப் பார்த்தாலே உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட உங்களுக்குத் தேவையானதை செய்துகொடுக்கத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். பயணங்கள் உங்களுக்கு அலைச்சலைக் கொடுத்தாலும், அந்தப் பயணங்களால், வாழ்க்கைக்கு உதவும் முன்னேற்றங்களும், வெற்றிகளும் கிடைக்கும்.  தொழில், வியாபாரம் மேன்மை அடையும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார வசதி அதிகரிக்கும். வாழ்க்கையில் அந்தஸ்து கூடும். சிலருக்கு புதிய பதவிகள், பட்டங்கள், கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால், உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். அதுபோல தற்போது சில புதிய அரசியல்வாதிகள் , பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகமும் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். போட்டிகள், பந்தயங்கள், பங்குச் சந்தைகள் முதலியவற்றில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு  வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.  சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பார்கள். அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து அவர்களது கனவுகள் நனவாகும். வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணி உயர்வு, வேண்டிய பணியிடமாற்றம் இவைகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் உங்கள் மதிப்பு உயரும். உங்களது சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சிலர் விருந்து ,கேளிக்கைகள் என்று மகிழ்ச்சியில் திளைப்பார்கள். மாணவர்கள் படிப்பில் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். நிறைய மதிப்பெண்கள் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நேரம். புதிய ஒப்பந்தங்கள் உருவாகி முன்னேற்றம் கிடைக்கும்.  குடத்துக்குள் இருக்கும் விளக்கு போல இவர்களுடைய திறமை இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கும். இனி இவர்க்ள் குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பார்கள். இவர்கள திறமையை அனைவரும் உணர்ந்து பாராட்டுவார்கள். இதன் காரணகமாக இவர்களுக்கு நல்ல வெகுமதிகளும் பாராட்டுகளும் கிடைக்கும். உடன்பிறந்த சகோதர –சகோதரிகள் மேன்மை அடைவார்கள். வேண்டிய சமயத்தில் அவர்களால், உங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உடன்பிறந்தவர்கள் இப்போது உங்களைத் தேடி வருவார்கள். உங்களுடன் உறவாட விரும்புவார்கள்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட நிலம் இப்போது பல மடங்கு விலை உயர்ந்து கோடிகளைக் கொட்டிக்கொடுக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் தீரும். இதுவரை தாமதப்பட்டுவந்த நல்ல காரியங்கள் இப்போது தடைகள் நீங்கி நல்லபடியாக முடிவடையும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டினை தொடரும் நிலை உண்டாகும். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். நீங்கள் இழந்த பொருட்கள் திரும்பக் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கென்று தனி மரியாதை ஏற்படும்.

இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். இதுவரை ஒரு குறிக்கோள் இல்லாமல் சென்றுகொண்டிருந்த உங்களது வாழ்க்கை இப்போது ஒரு குறிக்கோளுடன் செல்ல ஆரம்பிக்கும். வாழ்க்கை நல்ல முன்னேற்றமான பாதையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். எதையும் தர்மப்படி, நியாயப்படி செய்யவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணமும் உயர்ந்த குறிக்கோளும் மனதில் உதயமாகும். வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு லட்சியம் பிறக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தந்தை மட்டுமல்லாது உங்களைச் சேர்ந்த மற்றபெரியவர்களுக்கும் இப்போது உடல்நலம் பாதிக்கக் கூடும். தடைப்பட்டுப்போன குலதெய்வவழிபாடு இப்போது நல்ல முறையில் நடைபெறும். மனம் ஆன்மீகத்தில் லயிக்கும். சிலருக்கு கோவில்,மடம் போன்ற இடங்களில் கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள், சாதுக்கள் ஆகியோரின் சந்திப்புகளும் ஆசிகளும் கிடைக்கும்.  இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது பெருமை இப்போது யாவருக்கும் புரிய ஆரம்பிக்கும். உலகியல் விஷயங்களில் ஆர்வம் குறையும். பொருள் சேர்க்கவேண்டும் என்று நினைப்பதைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சிலர் உத்தியோகம் காரணமாகவோ அல்லது வியாபாரம் காரணமாகவோ குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிற்கு செல்லவேண்டியிருக்கும். கட்டுமானப் பணிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி  கட்டுமானப் பணிகள் இனிது முடிவாடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பேச்சில், சாந்தமும், பொறுப்பும், நிதானமும் பெருகும். அதனால், யாரிடமும் எந்தக் காரியத்தையும் சாதித்துக்கொள்வீர்கள். கோர்ட் கேஸ்களில் வெற்றி உண்டாகும். மனைவிவழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும் வாய்ப்பு உண்டாகும்.

இனி குரு பகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது, இந்த வருடம் 2012-ல் குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எட்டாம் இடம் என்றதும் நீங்கள் பயம் கொள்வது புரிகிறது. நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு பகவான் உங்கள் ராசிக்கு 4,7-ம் வீடுகளுக்கான கேந்திர அதிபதியாகிவிட்டதால், உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும். சிலருக்கு வீடு மாற்றும் யோகம் உண்டாகும். குருபகவான் உங்கள் ராசிக்கு அந்த இடங்கள் சிறப்படைகின்றன. வாக்கு வன்மை அதிகரிக்கும். தங்களின் பேச்சுக்கு வெளியில் நல்ல மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள்மிகுதியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். 4-ம் இடம் குருவின் பார்வை பெறுவதால், தாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தங்களுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் அதிகரிக்கும். சிலருக்கு புதுமனை வாங்கும் யோகம் உண்டாகும். ஏற்கெனவே கட்டி பாதியில் நின்றுவிட்ட வீடு, கட்டிடங்களை கட்டி முடிக்க முயற்சி செய்து கட்டி முடிப்பீர்கள். தாயை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.  12-ம் இடம் குருவின் பார்வை பெறுவதால், தாங்கள் செய்யும் அனைத்து செலவுகளும், சுபவிரயங்களாக இருக்கும். அனைத்து செலவுகளும் தங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். தகப்பனாரின் உடல்நலனில் அக்கறை எடுதுக்கொள்ள வேண்டியது அவசியம். பிறரிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாகவும் யோசித்தும் பேசுவது நல்லது. பிறருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நலம். இளைய சகோதரருடன் சிறு சிறு பிரச்சினை உண்டாகலாம். தொழிலில் மாற்றம் உண்டாகும். மனைவியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பீர்கள். தொழில் புரிபவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவது நலம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். லாபம் ஒரே சீராக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். வெளியூர் பிரயாணங்கள் அதிகம் ஏற்படும். இப்படிப்பட்ட பலனாக அளித்துவந்த குருபகவான், வருகிற 17-ம் தேதி மே மாதம் 2012-ல் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்ரிக்கப் போகிறார்.

குருவின் 9-ம் இட சஞ்சாரம் என்னேன்ன பலன்களைக் கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த சஞ்சாரம், உங்களுக்கு பல யோகங்களை உண்டாக்கும். பணப் பிரச்சினை பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து புது மனிதனாவீர்கள். தந்தை வழியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகன்று, ஒன்று சேர்வீர்கள். தந்தையின் பேச்சுக்கு மதிப்பளித்து அவர் சொற்படி நடந்தால், ஒரு சில பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். ஆன்மீகத்தில் மனம் அதிகம் ஈடுபடும். கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே முடியும். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தத் துறையில் பகழடைவீர்கள். இதுவரை பிறரிடம் வேலை செய்து வந்தவர்கள் இனி சொந்தத்தில் தொழில் தொடங்குவார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும் லாபகரமாகவும் அமையும். இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்தவர்கள்கூட உங்கள் முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மற்றவர் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடை ஆபரணங்கள் , ஆடம்பரப் பொருள்கள் அத்தனையும் வாங்கி மகிழ்வீர்கள். படிப்பில்  மந்தமாக இருந்த பிள்ளைகள்  படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.

இனி சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிப்பதற்கான பலன்களைப் பார்ப்போம். கடந்த 5 வருடமாக நீங்கள் பட்டு வந்த துயரமெல்லாம் நீங்கப் போகிறது. வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் சந்திக்கக்கூடாது என்று நினைத்தீர்களோ அதையெல்லாம் சந்தித்து எல்லாவற்றிலும் துன்பம், துயரம், தோல்வி, ஏமாற்றம், குடும்பத்துக்குள் போராட்டம், தொழிலில் இழப்பு, தீராப் பகை என்று பலவித கஷ்ட  நஷ்டங்களையும் பார்த்து நொந்து போய்விட்ட சமயத்தில்தான் இந்த சனிப்பெயர்ச்சி, கோடை காலத்தில் மழைபோல வந்துள்ளது. இப்போது இரண்டாம் இடத்துக்கு வரப்போகும் சனி உச்ச சனியாக வரப் போகிறார். இதனால், உங்கள் தனமும், வாக்கும், குடும்பமும் உச்சமாகிக் கொடுக்கப் போகிறார். கூடுதல் அனுசரணையாக மேஷ ராசியில் இருக்கும் குருபகவானும் தன்னுடைய சுபப் பார்வையையை சனியின் மீது வீசுகிறார். வீடு, நிலம், தொழில் பூர்வீகச் சொத்தில் இருந்துவரும் கடன், வம்பு வழக்குகளில் இருந்து முற்றிலும் விடுதலை ஏற்படும்.  . இதனால் மன நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாமதமாகிவரும் திருமண பாக்கியம் சுப முடிவு சொல்லும். கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த அத்தனை பிரச்சினைகளும் விலகி பதவி உயர்வு, சம்பள உயர்வு, வழக்கில் வெற்றி முதலியவை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொந்தத் தொழிலில் இருந்துவரும் தொய்வு நிலை நீங்கி, விறுவிறுப்பை எட்டும். கடலில் தத்தளிப்பவனுக்கு கை கொடுப்பதுபோல உங்களுக்கு உதவி செய்ய பல பெரிய மனிதர்கள், நண்பர்கள் முன்வருவார்கள். அவர்களில் சிலருக்கு உள்நோக்கம் வேறு மாதிரியாகக்கூட இருக்கும். அவர்களில் சிலரால் குடும்பத்தில் குழப்பம் வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் உங்களை வஞ்சிக்கக் காத்திருப்பவர்களின் நய வஞ்சகத்தைப் புரிந்து அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அறிவையும் குருபார்வையிலிருந்தும் குருவின் சஞ்சாரத்தின் மூலமும் நீங்கள் பெறலாம். இனிமேல் வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை கிடைக்கும். பணவரவு பெருகிஉங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் எதிர்பார்த்தபடியே வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து திடீர் அழைப்புகல் வந்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் குளிப்பாட்டும். கணவன் –மனைவி உறவில் ஏகாந்தமான சூழ்நிலை உருவாகும். வெறுப்புடன் இருந்துவந்த மனைவிகூட தமது கணவர் நல்லவர்தான் என்று மெச்சும்படியான நேரம் வந்துவிட்டது. இதுவரை பொட்டுத் தங்கம்கூட இல்லாத வீட்டில்கூட தங்க நகைகளை வாங்கும் சூழ்நிலை யில் செல்வம் கொழிக்கும். கடன்கள் குறையும். கணவன்—மனைவி உறவில் நாளடைவில் மகிழ்ச்சி பெருகும். மனதில் இருந்துவரும் பயம் தன்னம்பிக்கைக் குறைவு நீங்கும். உத்தியோகத்தில் புதிய மதிப்பு, மரியாதை உண்டாகும். மூளையை மூலதனமாக்கி செய்யும் அத்தனை வேலையிலும் ஜொலிப்பீர்கள். முயற்சிக்குத் தகுந்த அளவு குறைவின்றி வருமானமும் புகழும் கிடைக்கும்.

இப்படியாக உங்களுக்கு இந்தப் புத்தாண்டு மிக நல்ல பலன்களை வழங்கும். ஆண்டின் தொடக்கமான முன்பாதியில் குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதைத் தவிர மற்ற கிரகங்களான சனி, ராகு, கேது, ஆண்டுப் பின்பகுதியில் குரு என்று அனைத்து கிரகங்களும் உங்களுக்கு நற்பலன்களைத் தரப்போவதால், இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் நன்றாகவே இருக்கும்.

பரிகாரம்:

ஏழரைச் சனியின் இறுதிப் பகுதியில் இருப்பதால், நீங்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபடவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யுங்கள். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் ‘ஹனுமான் சலீஸா’ பாராயணம் செய்யவும்.  குருபகவான் ஆண்டின் முற்பகுதியில் எட்டில் இருப்பதால்,  வியாழக்கிழமைகளில் குருதட்சிணாமூர்த்தியைகொண்டக் கடலையையும், மஞ்சள் நிற மலர்களும் கோண்டு மாலை சாத்தி வழிபடவும்.

வாழ்க பல்லாண்டு. ! மகிழ்வுடன் கொண்டாடுங்கள் இந்த இனிய புத்தாண்டை!