தனுசு ராசி

 

இந்த 2012-ம் ஆண்டு, உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த ஆண்டின் கிரக சஞ்சாரங்களைப் பார்க்கும்போது, சனி உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவானும் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராகு 12-ம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இதில் சனி, கேது, குரு போன்ற கிரகங்கள் மே மாதம் 16-ம் தேதி வரையிலும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கிறார்கள். ராகுவும், குருவும் மே மாதம் 17-ம் தேதி முதல் செய்யப்போகும் சஞ்சாரங்களும், உங்களுக்கு சாதகமாக இருக்காது.  ஆனால், சாதமகமற்ற பலன்களையும், குரு பகவானின் சாதக சஞ்சாரம் மாற்றி விடும். இனி பலன்களைப் பார்க்கலாம்.

கேதுவின் 6-ம் இடத்து சஞ்சாரமும் சனியின் 11-ம் இடத்து சஞ்சாரமும், குருவின் மே 16-ம் தேதிவரையிலான சஞ்சாரமும், தக்க அளவில் தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகளையும், போட்டியாளர்களையும் அழித்தொழிப்பார்கள். சிலருக்கு பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் தொழிலை வளப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பு உண்டாகும் .வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைப்பதற்கும் வாய்ப்புகள்  உள்ளன. சிலர் நூதனமான பொருள் விற்பதன் மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். இதுவரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தொல்லை கொடுத்துவந்த உடல்நலிவுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். அதே சமயம் இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகள் இனிமேல் இருக்காது. உங்கள் கௌரவம் உயரும். தேவைக்கேற்ற பணம் கிடைப்பதால்,கொடுக்கல்-வாங்கலில் நல்ல சூழ்நிலை நிலவும். எப்படியாவது உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள்,பொதுத்துறையில் உள்ளவர்கள், மக்கள் மத்தியில் பணிபுரிபவர்கள்,பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். தொலைத் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் பெயரும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய பட்டம், பதவிகள் கிடைக்கும். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். அவர்களுக்கு பதவி உயர்வுகள், பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். இதுவரை சுபகாரியபங்களில் ஏற்பட்டிருந்த தடை நீங்கி சுகாரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். இதுவரை விடை தெரியாமல் இருந்த பிரச்சினைகள் வெளிப்பட்டு நல்ல தீர்வுக்கு வரும். வேலைப்பளு அதிகமாகி அதற்குரிய வருமானம் கிடைக்கும். தாயார் உடல்நலம் பெறுவார். தாய்வழி உறவினர்களால், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு, மண், மனை, நிலம், வீடு இவைகளை வாங்கும் பாக்கியத்தை அடைவார்கள். பொழுதுபோக்கு அம்சங்களான விருந்து கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதிற்குள் அசாத்தியமான துணிவு ஏற்படும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். கோர்ட் கேஸ்களிலிருந்து தற்போது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். எந்தச் செயல் செய்தாலும் அதில் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் ,நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். புத்திர-புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகளும், நல்ல மதிப்பும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும்.

மேலும் இந்த சனிப்பெயற்சியில் மிகுந்த நன்மையை அடையப்போவதில் நீங்களும் ஒருவர்தான். உத்தியோகத்தில் வர வேண்டிய உயர்வுநிலைகள் தானாகவே வந்து சேரும். சிலருக்கு உயர் பதவிகளும், உயர்ந்த சம்பளமும் வந்துசேரும். அலுவலகத்திலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடிய கௌரவமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பணம் இல்லையே என்று கவலைப்படுவோருக்கு தேவையான விதத்தில் தக்கசமயத்தில் மூலதனமும் வந்துசேரும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு உயர்வான கம்பெனியிலிருந்து நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு அழைப்பு வரும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிக்கொண்டு ஓடிவரும். தொழிலில்கூடுதலான அபிவிருத்தியும், புதிய மாற்றுத் தொழில்களும் அமையும். நீங்கள் உங்கள் உள் மனதில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற அதிர்ஷ்டமான வாய்ப்புகள், உங்கள் வாய்ச் சொல்லுக்குப் புகழ் ஆகியவை கிடைக்கும். நடைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு சிறப்பைத் தரும். கணவன்- மனைவி பிரிவால் வாடுபவர்கள்கூட உறவினர்கள் முயற்சியில் ஒன்று சேருவார்கள். வாடகை வீடு ,இனி கிடையாது. சொந்த வீட்டுக்குப் போகும் நேரம் வந்துவிட்டது. சொந்த வீட்டை இன்னும் வசதியாக மாற்றி கட்டிக்கொள்வீர்கள். தீராத நோய்களான சர்க்கரை நோய், இருதயநோய், ரத்த அழுத்தம் முதுகுவலி, மூட்டுவலி போன்ற நோய்கள் படிப்படியாகக் குறைந்து ஆரோக்கியம் ஏற்படும். புதிய குடும்ப உறவுகள் இணைவார்கள். பலவிதத்திலும் , பல திசைகளிலிருந்தும் இருந்துவந்த தொல்லைகள் குறையும். நல்ல மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உங்கள் முன்னேற்றம் உங்கள் எதிரிகளை பயமுறுத்தி அலற வைக்கும். கடுமையான போராட்டத்துக்குப்பிறகு கிடைக்கவேண்டிய நன்மைகள்கூட வெகு எளிதில் உங்களுக்கு கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் அனைத்திலுமே நீங்கள் வகுக்கும் திட்டம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். சரியான பணியாட்கள் அமைவார்கள். தள்ளிப் போன குல தெய்வ வழிபாடுகளை இப்போது தொடருவீர்கள். சிலர் குலதெய்வங்களுக்கு அல்லது இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டுவார்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக இருந்துவந்த உங்கள் திறமைகளும் புகழும் இனிமேல் வெளிஉலகுக்குத் தெரிய ஆரம்பிக்கும். கடந்த காலத்தைப்பொல் அல்லாமல் குடும்பத்தாரின் தேவையறிந்து அவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இதன் காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரின் பிரியத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத் துணை உடல்நலிவுற்றிருப்பார்களேயானால், அவர்கள் அந்த நலிவு நீங்கி இப்போது ஆரோக்கியம் பெறுவார்கள். பெரியோர்கள், சாதுக்கள், குருமார்கள் இவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

இனி சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் மே மாதம் 17-ம் தேதிக்குப் பிறகு சஞ்சரிக்கப்போகும் குரு இவர்களால் சாதகமற்ற பலன்கள் நிகழும். ஆனால்,  மேலே கூறப்பட்ட சாதகமான கிரகங்கள் நல்ல திருப்பங்களைக் கொடுத்துக் காப்பாற்றிவிடும். இனி சாதமற்ற நிலைகள் என்ன என்று பார்த்து அதற்குரிய உஷார் நிலைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். ராகுவின் 12-ம் பயணம் உங்களுக்கு அலைச்சலைக் கொடுக்கும். இதன் காரணமாக உங்களுக்கு அலைச்சல் அதிகமாகுமே தவிர ,வேலைப்பளு கூடுமே ஒழிய அந்தப் பயணங்களால், உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படும். அடிக்கடி அலைவானேன் என்று சிலர் வெளியூரிலேயே தங்கிவிடுவர். பூர்வீகச் சொத்தில் தற்சமயம் வில்லங்க விவகாரங்கள் ஏற்பட்டு, பின்னர் பஞ்சாயத்து மற்றும் உடன்பாடுகள் மூலம் பிரச்சினை நிவர்த்திஆகும். குழந்தைகள் ,பேரன்-பேத்திகள், புத்திர-புத்திரிகளின் வகையில் செலவு ஏற்படும். இந்த நேரத்தில் சிலருக்கு அரசாங்கத்தால், அரசியல்வாதிகளால், அரசு ஊழியர்களால், விரயச் செலவு ஏற்பட்டு மன வருத்தத்தைக் கொடுக்கும். மறைமுக எதிரிகளால் ஆபத்து இருந்துகொண்டிருக்கும். இருப்பினும் ஆண்டு முற்பகுதியில் குருபலத்தாலும், ஆண்டு முழுவதும் சனி பலத்தாலும் அவர்கள் ஏதும் செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பார்கள். பெண்கள் தாம் தூமென்று செலவு செய்து மிக அவசியமான செலவுக்கு பணமின்றித் தவிப்பார்கள். சிலர் மனக் குழப்பத்தால் சரியான தூக்கமின்றித் தவிப்பார்கள். பெண்களுடன் சிலருக்கு வேண்டாத தொடர்புகள் ஏற்பட்டு ஆடம்பரப் பொருள்களை இழப்பீர்கள். சிலருக்கு அவர்களுடைய அனாவசிய ஆடம்பரத்துக்கும், பந்தாவுக்குமே செலவாவதால், உங்கள் நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு வருவீர்கள். சிலர் அரசாங்கத்தின் தண்டனைக்கு ஆளாகி தண்டம் கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு தீர்ப்பு சாதகமாக இருக்காது. உழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல்போகும். உங்களிடம் கடனுக்குப் பொருள்களைப் பெற்றிருந்த வியாபாரிகளிடம் பனத்தை வசூல் செய்ய முடியாமல் போய், உங்களுக்கு திரும்ப முதலீடு செய்ய முடியாமல் தொழில் நலிவடையும். வரவேண்டிய பணமோ அல்லது தொழிலில் லாபமோ கிடைக்காததால், உங்களால் நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் போகும். உங்கள் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும். குடும்பத்தினர் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி, அதன் மூலம் வீட்டுக்குள் பிரச்சினை ஏற்பட்டு, உங்கள் கடுகடுப்பு அதை மேலும் அதிகப்படுத்தும். குடும்ப மகிழ்ச்சி குறையும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் வரும். கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை தோன்றும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு கூட்டாளிகள் பிரிவர். நண்பர்களும் உங்கள் சிடுசிடுப்பால் பிரிவார்கள். மனோதைரியம் குறையும். சகோதரர்களால் விரயச் செலவுகளும் தொல்லைகளும் வரும். உடல்பொலிவு குறையும். தாயாரின் உடல் நலம், மருத்துவ செலவு வைக்கும். மனம் எப்போதும் ஒரு சோகத்திலேயே இருக்கும். காரணம் தெரியாத , இனம் புரியாத கவலை மனதை அரித்துக்கொண்டே இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரின் பேச்சும் செயலும் உங்களுக்கு துக்கத்தைக் கொடுக்கக்கூடியதாகவே இருக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமும் உண்டாகும். இந்த காலக் கட்டத்தில் பண விஷயத்தில் யாருக்காவது ஜாமீன் கொடுத்துவிட்டு முழிப்பீர்கள். பல சமயங்களில் நீங்களே அவர்களது கடனை அடைக்க வேண்டியிருக்கும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும். உங்களுடைய புத்திசாலித்தனம் இந்த சமயத்தில் கை கொடுக்காது. பூர்வீகச் சொத்தை விற்கும் நிலைக்கு வருவீர்கள். உங்கள் கைக்கு வரவேண்டிய பூர்வீகச் சொத்துகள் உங்கள் கைக்கு வராது. குல தெய்வ வழிபாடு , தெய்வ காரியங்கள் பிதுர் காரியங்கள் , தீர்த்த யாத்திரைகள் போன்றவை தடைப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படலாம். புத்திர- புத்திரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமண காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். இந்த சமயத்தில் சுபச் செலவு செய்யக்கூடும் என்பதால், கொஞ்சம் முய்ற்சி செய்தால், உங்கள் பிள்ளைகளின் சுப காரியங்கள் நிறைவேறவும் கூடும். மாமன் வகை உறவு உள்ளவர்கள் இப்போது விரோதம் காட்டுவார்கள். கால்நடைகள், வீடு, வாகனம் முதலியவற்றில் விரயச் செலவு ஏற்படும். தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படும்.

இப்படியாக ஆண்டின் பிற்பாதியில் குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் போவதால், எதிலும் எச்சரிக்கை தேவை. ஆனால், மிகவும் ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனியின் லாப சஞ்சாரம்  திகழ்வதால், ஆண்டு  முழுவதுமே கவலையில்லை.  கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்துகொண்டால், கவலை ஏதும் இல்லாமலே போய்விடும். இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருக்கும்.

பரிகாரம்:

உங்களுக்கு கோச்சாரப்படி ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை யும் மஹலக்ஷ்மியையும் வெள்ளிக்கிழமைகளில் பூஜிக்கவும்.கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குருபகவானின் சஞ்சாரம் ஆண்டின் பிற்பாதியில் சரியில்லை. எனவே, தக்ஷிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று,  வியாழக்கிழமைகளில்,கொண்டக்கடலை மாலையும் , செவ்வந்திப்பூ மாலையும் போட்டு வழிபடவும்.துன்பங்கள் பறந்துவிடும்.

இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு சுபமான ஆண்டாகப் பிறக்கும். வாழ்க பல்லாண்டு!