பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒட்டாவாவில் உள்ள  கொன்சவேற்றிவ் தலைமையகத்திற்கு உடல் உறுப்புக்களை துண்டித்து அனுப்பியவர் குறித்த போலீஸின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியென சந்தேகிக்கப்படுபவரின் பெயரை கனடிய புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் மொன்றியல் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நடந்த கொலையில் குற்றவாளியென சந்தேகிக்கப்பட்ட லுக்கா ரோக்கோ மக்நோட்டாவை இதனை செய்திருக்க வேண்டும் என பொலிஸ் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

குற்றவாளியைப் பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது. 29 வயதாகும் லுக்கா ரோக்கோ மக்நோட்டா ரொறோன்றோவை பூர்வீகமாகக் கொண்டவர். பல இடங்களில் வசிப்பதாக போலியாக இணைய தளங்களில் உலவி வரும் இவர் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகளிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

துப்புத் துலக்கிய பொலிஸாருக்கு அதே தினத்தில் மொன்றியல் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் கொலை ஒன்று நடந்துள்ளதும் கொலை செய்யப்பட்டவரின் தலையற்ற உடல் முண்டப் பகுதி மட்டும் பெட்டி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஒட்டவா கொன்சவேற்றிவ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட துண்டிக்கப்பட்ட கால் பகுதியும் , ஒட்டவாவில் கண்டெடுக்கப்பட்ட பிற உடல் பகுதிகளும் கொலை செய்யப்பட்டவரின் உடல் உறுப்புக்களே என்பதை போலிஸ் உறுதி செய்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த கொலைகளை உறுதிப்படுத்தும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் உலவ விடப்பட்டுள்ளதையும் மொன்றியல் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமே கொலையாளி உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.  கொலை செய்யப்பட்ட நபர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக குடும்ப உறுப்பினர்களால் புகாரளிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த ஆணாக 33 வயதான லின் யன் என தெரியவந்துள்ளது.