ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179ஆவது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.

 •  1651 – 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
 • 1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 • 1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.

முதல் உலகப்போர்: ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.

போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[2]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[2]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

 •  1919 – முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
 • 1940 – சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
 • 1950 – வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
 • 1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
 • 1994 – ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
 • 2004 – ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

பிறப்புகள்

 • 1703 – ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
 • 1907 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)

கலாநிதி தாவீது அடிகள் (1907 – ஜூன் 2, 1981) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர். யாழ்ப்பாணம் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவீது அடிகள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்று பின்னர் லண்டன் மெட்ரிக்குலேஷன் சோதனையில் சித்தி அடைந்து அதன் பின் லண்டன் பல்கலைக்கழக இளங்கலைமாணிப் பரீட்சையில் தோற்றி சிறப்புத்தரத்தில் சித்தியடைந்தார்.

புனித பேர்னாட் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அங்கு குருத்துவக் கல்வியை முடித்த பின் 1931 திசம்பர் 19 இல் கொழும்பு பேராயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு அப்போஸ்தரிக்க பணியாளனாக குருத்துவப் பணியை ஆரம்பித்தார். தன் தந்தையார் படிப்பித்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிலேயே 1936 தொடக்கம் 1967 ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழாய்வுநல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் உந்துதலால் சமஸ்கிருத மொழியைக் கற்று புலமை அடைந்து அதில் முதுகலைமாணிப் பட்டத்தினை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கீழைத்தேசத்தில் முக்கியமாக வாழும் மொழிகளையும் மேலைத்தேசத்தில் முக்கிய வாழும் மொழிகளையும் கற்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியை மையமாக வைத்து மற்றைய மொழிகளோடு ஒப்பீடு ஆய்வு செய்து, சுவாமி ஞானப்பிரகாசர் ஆரம்பித்து வைத்த ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளைப் பின்பற்றி தானும் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் பல பாகங்களாக வெளியிட்டுள்ளார். அவற்றை விடத் தனி நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று “We stand for…’ என்பதாகும்.

மறைவுஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தன் வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் தான் கற்பித்த பத்திரியார் கல்லூரியிலேயே மேல்மாடியில் ஓர் அறையில் தங்கி இருந்தார். 1981 மே 31-சூன் 1 நள்ளிரவில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற பின் அடிகளார் உறக்கத்திற்குச் சென்றார். நித்திரைக்குச் சென்ற அவர் அடுத்தநாள் 1981 சூன் 2 விடியற்காலை காலமானார். நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியினாலேயே அடிகளார் உயிர் நீத்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

 • 1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
 • 1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995)

எஸ். எஸ். கணேசபிள்ளை (ஜூன் 28, 1937 – ஆகத்து 30, 1995) வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகாசிரியருமாவார். யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை ‘வரணியூரான்’ என்று வைத்துக்கொண்டார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார்.

இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார் கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர்.

இவர் எழுதி நடித்த புளுகர் பொன்னையா, விளம்பர நிகழ்ச்சியாக ஒருவருடம் ஒளிபரப்பான ‘இரைதேடும் பறவைகள்’ நாடகம் ஆகியன பலரது அபிமானத்தைப் பெற்றது. இரைதேடும் பறவைகள் நாடகம் பின்னாட்களில் புத்தக வடிவில் வெளிவந்தது. 1995 இல் நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு ‘தாத்தாவின் ஆசை’ என்ற நாடகத்தைக் கனடாவில் பல பாகங்களிலும் நடத்தினார். கணேசபிள்ளை 1995 இல் கொழும்பில் காலமானார்.

இறப்புகள்

 • 1836 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)
 • 1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)