சமீப காலமாக நூதன வழிகளில் திருடி வரும் நகைக் களவு கும்பல்களால் தமிழ் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரொறொன்ரோ நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் தமிழ் சமுதாய மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் எச்சரித்துள்ளார். 
 
இந்த விடயம் தொடர்பாக ராதிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
  
உறவுகளால் கைவிடப்பட்டது போன்று தனியாக வரும் பெண் ஒருவர் சமுதாயத்தில் உள்ள மக்கள் பலரை சந்தித்து வியப்பூட்டும் வகையில் தங்கம் போன்றே தோற்றமளிக்கக் கூடிய கழுத்துமாலையை உங்களுக்கு அணிவிப்பார். பின்னர் தான் அணிவித்த நகையைக் கழற்றுவதாகக் கூறும் பெண்மணி ஏற்கனவே நீங்கள் ணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் சேர்த்து கொள்ளையடித்துச் சென்று விடுவார். பெரும்பான்மையான நேரங்களில் நூதனமான வழியில் நடத்தப்படும் இந்த களவு சம்பவத்தில் தங்கள நகைகளை பரிகொடுத்ததைக் கூட உடனடியாக மக்களால் உணர முடிவதில்லை. 
 
பெரும்பாலும் காரினை ஒட்டி வரும் ஆண்களிடம் இந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் மயக்குவது போல் பேசி கொள்ளையடித்துச் செல்வது அதிகரித்துள்ளது. அதனால் தமிழ் சமுதாய மக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் நடக்கும் இது போன்ற களவுகள் குறித்து விழிப்புடன் இருப்பதோடு உங்கள் சொந்த விடயங்களில் பிறர் தலையிட இடம் கொடுக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற களவு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் 911 என்ற எண்ணில் காவல்துறையினையும், தங்களுக்கு அருகாமையில் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதாக சந்தேகம் ஏற்பட்டால் 416 808-2222 என்ற எண்ணிலும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.