சிறுவயதில் கடலை, அவல் வாங்கவென்றே இந்தநாட்களில் கடைகளில் முன்னாலும், வாகன தரிப்பிடங்களின் முன்னாலும், சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் திரிந்த ஞாபகம் தான் வரும்!

பள்ளிநாட்களில் வாணிவிழா என்றாலே இயல் இசை நாடகங்களுடன் நடக்கும் இந்த இனிய காலம் நம்மால் நமக்காக கொண்டாடப்படும் விழா என்ற நினைப்பே எமக்குள் தோன்றி – தோரணங்கள் கட்டி, அலங்கரித்து… , ம்….  நடந்து முடிந்ததெல்லாம் இப்போ நாம் இரைமீட்கும் நிலையில் தான்…

ஒரு தனி மனிதனின் சமூக நல்வாழ்வு கருதி நமது முன்னோர்கள் பல பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள். பண்டிகைகளைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் நமக்கு இறைவனிடம் நீங்கா பக்தி பிறக்கவேண்டும் என்பதே! பக்தியே முக்தியைக் கொடுக்கும். ஒவ்வொரு தினமும் இறைவனை ஆராதிப்பதற்கே என்றாலும் பண்டிகையின் போது பலரும் ஒன்றாகக் கூடுவதால் நட்பும் உறவும் கூடும்.

புராணங்களில்:-

கைடவன், மது என்னும் இரு அரக்கர்கள் விஷ்ணுவின் செவி துவாரத்திலிருந்து தோன்றி விஷ்ணுவை எதிர்த்தனர். மேலும் செருக்குடன் விஷ்ணுவிடம் “வேண்டிய வரம் கேளுங்கள்” என்று கூற, திருமாலும் உங்கள் இருவரையும் கொல்ல வரம் வேண்டும் எனக் கேட்டார். இதைக் கேட்டு அசுரர்கள் திகைத்தனர். எனினும் வாக்குத் தவறாமல் வரம் கொடுத்து, ‘எங்களைத் தண்ணீர் இல்லாத இடத்தில் கொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதன்படியே விஷ்ணுவும் தமது தொடையை பெரிதாக்கி அதில் வைத்து , சக்ராயுதத்தால் அவர்களைக் கொன்றார். இவ்வசுரர்களை திருமால் அழித்த தினம்தான் நவரத்திரியின் முதல் நாள் என்று சொல்லப்படுகிறது.

மற்றொரு புராண வரலாறு:-

 மகிடாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான் என்றும், அதைப் போக்க தேவர்கள் தவம் செய்தனர் என்றும், அதன் பலனாக தேவியின் அருளும் பலமும் பெற்று அசுரர்களைக் கொன்றார்கள் என்றும் கூறுகிறது. அதை நினைவு கொண்டு தேவியை போற்றுவதே நவராத்திரி என்றும் கூறுவர்.

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

உருவாய் அருவாய் உள்ள பரம் பொருளை அடைய பல வழிகள் இருப்பினும், உருவ வழிப்பாடே முதற் படியாய் விளங்குவதை உணர்த்த நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிக் கொடுத்த பல விழாக்களில் ஒன்றான நவராத்திரியை நாமும் சிறந்த முறையில் கொண்டாடி , இளம் தலைமுறைகளும் நன்கு ஆன்மீக வழிகளை அறியுமாறு செய்வோம். இப்பெரும் நாட்களிலே முப்பெருந்தேவியர்களின் அருள் முழுமையாய் பெற்று முப்பெரும் செல்வத்தினையும் பெற்று, துக்கம், பயம், சோம்பல் நீக்கி, செம்மையாய் வாழ்வோமாக!

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று என்று ஐதீகம் சொல்லுகின்றது.

இதுசம்பந்தமாக முன்னர் இட்ட பதிவுகள்

சரஸ்வதி சபதம் – முழுத்திரைப்படம்

வாணிவிழாவும், சுண்டலும்!