மேலை நாடுகளில் Halloween என்னும் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்படுகின்றது.

நாம் பேயை விரட்ட படாத பாடுபட்டுக்கொண்டிருக்கும் போது, இவர்கள் பேயை பிடித்து வீட்டில் வைத்து கொண்டாடுகின்றனர்!

இந்தவிடயத்தில் நாம் காத்துக்கறுப்பு அண்டக்கூடாது என்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள்… தாயத்துக்கட்டுதல், விபூதி பூசுதல், சிலுவை அணிதல், வாசலில் எலுமிச்சை-காய்ந்தமிளகாய் -உப்பு கட்டுதல், கோலம் போடுதல், சாம்பிராணி ஊதுபத்தி கொளுத்துதல்… அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை.

பத்தாததுக்கு பேயை விரட்டுகின்றேன், ஆவியை ஓட்டுகின்றேன் என்று ஒருபக்கத்தில் வேறு…

இப்படியெல்லாம் இருக்க இவர்கள் ஏன் பேயுடன் விளையாடுகின்றனர்?

சொல்லப்போனால் பேய்களையும், பிசாசுகளையும், விகாரமான ஜந்துக்களையும் வீட்டில் வைத்துக்கொண்டாடுகின்றனர்!

பத்தாததுக்கு சிறுவர்களுக்கு பேயைப்போலவே உடை உடுத்தி, சிலர் கன்னா பின்னா என்று மேக்கப்புகள் போட்டு, வனவிலங்குகள் போல் வேடமிட்டு… இன்னும் எத்தனையோ கூத்துக்கள்.

நாகரீகத்தில் தளைத்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் – இந்த விடயம் அவர்களுக்கு மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தவில்லையா?

ஒருவேளை சிறுவர்களுக்கும், பேய் என்றால் பயம் உள்ளவருக்கும் ஒரு மனத்தைரியம் உண்டாக்க இப்படி Halloween Day கொண்டாடுகின்றனரா?

அல்லது வியாபாரிகள் எல்லோரும் சூழ்ச்சியுடன் ஆசைகாட்டி(???) halloween Day costume களையும், சாக்கிலேட்டுக்களைபும் விற்பனை செய்ய இது போன்ற விழாக்களை கொண்டாட தூண்டுகின்றனரா?