நவம்பர் 2013


கிரிகோரியன் ஆண்டின் 321ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.

  • 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
  • 1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
  • 1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
  • 1869 – எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
  • 1903 – ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
  • 1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
  • 1950 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
  • 1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
  • 1970 – டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
  • 2003 – ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.

பிறப்புக்கள்

  • 1909 – சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
  • 1920 – ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)

ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.

திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணி ஆற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்!

அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் “காதல் மன்னன்” என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது. அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்

1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், திரையுலகத்தின் பொற்கதவுகள் அவருக்கு உடனடியாகத் திறந்து விடவில்லை. பலரது கவனத்தையும் ஈர்த்து மஞ்சள் ஒளி அவர் மீது விழ வைத்தது 1952ஆம் ஆண்டின் வெளியீடான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் காண்பவர் மனம் மயங்கும் வண்ணம் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான “பெண்”. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் “மனம்போல மாங்கல்யம்”. இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்ரியை அவர் மணந்து கொண்டார்.

காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது.

ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய “கற்பகம்”, “சித்தி”, “பணமா பாசமா”, “சின்னஞ்சிறு உலகம்” ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.

புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், “மீண்ட சொர்க்கம்”, “சுமை தாங்கி” போன்ற பல படங்களை இயக்கினார்.

கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். “தாமரை நெஞ்சம்”, “பூவா தலையா”, “இரு கோடுகள்”, “வெள்ளி விழா”, “புன்னகை”, “கண்ணா நலமா”, “நான் அவனில்லை” எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. “நான் அவனில்லை” திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. “பாசமலர்”, “பாவமன்னிப்பு”, “பார்த்தால் பசி தீரும்”, “வீரபாண்டியக் கட்டபொம்மன்” போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.

எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன் “முகராசி” என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.

தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன். முத்துராமன் ஆகியோருடனும் அவர் பல படங்களில் இணைந்து நடித்தார்.

ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.

ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.

ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.
தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “வல்லவனுக்கு வல்லவன்”. இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய “இதயமலர்” திரைப்படத்தில் “லவ் ஆல்” என்று துவங்கும் இரு வார்த்தையை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் (இரு வார்த்தை)  இதுதான்.

ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.

இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.

ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகவில்லை அல்லது புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.

ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.

இறப்புகள்

  • 1558 – இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)
Advertisements

நவம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 317ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.

  • 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
  • 1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நான்கு தசாப்தங்களாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.
சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த “டொக்டர்” என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். கலைமாமணி பட்டம் பெற்ற இவருக்கு ஐந்து தடவைகள் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.
1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

இறப்புகள்

  • 1989 – ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)
  • 2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)
வெகு விரைவில் Google Mapல் வர இருக்கும் மாற்றங்களையும், Guelph நகரில் South End என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள வீதிகளில் பிரதான மாற்றங்களையும் இங்கு பார்க்கலாம்.
  • Clair Road இல் இருந்து Hwy6 (Hanlon Pkwy) க்கு செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.
  •  Hwy6 (Hanlon Pkwy) க்குச் செல்ல இனிமேல் Laird Road மூலம் உள்ள ramp line கள் உபயோகத்தில் புதிதாக வந்துள்ளது. Hwy6 North க்குச் செல்ல Laird Roadன் வலதுபுறமாக- பாலத்திற்கு முன்னர் உள்ள ramp line மூலம் வெளியேறவேண்டும். Hwy6 Southக்குச் செல்ல,  Laird Roadல் பாலத்தில் ஏறி முதலில் வரும் வலப்பக்கத்து ramp line மூலம் வெளியேறவேண்டும்.
  • Hwy6 (Hanlon Pkwy) க்கில் இருந்து Clair Road க்கு வரும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. 
  • . Hwy6 Southல் இருந்து வருபவர்கள் Laird Roadக்கு முன்னர் வரும் ramp line மூலம் பாலத்தின் மீது ஏறி, வரும் signal lightல் இடப்புறம் திரும்பி Laird Roadமூலம் Clair Roadஐ அடையலாம்.  Hwy6 Northல் இருந்து வருபவர்கள்  Laird Roadக்கு முன்னர் வரும் ramp line மூலம் பாலத்தின் மீது ஏறி, வரும் signal lightல் வலப்புறம் திரும்பி Laird Roadமூலம் Clair Roadஐ அடையலாம்.

 

 
தற்போது  உள்ள Google Mapல் உள்ள வரைபடத்தை கீழ் உள்ள படத்தில் காணலாம். இவ் வீதி அமைப்பு மாற்றி அமைக்கும் வரை மேல் உள்ள வரைபடத்தை கவனத்தில் கொள்ளலாம்.

 

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் “ஒப்பரும் விரதம்” என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை” (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) செய்வதையும் தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வுநலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.
இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் “ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்” எனப்படுகிறது.

பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.

விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

கந்த சஷ்டி கவச பாடலை இங்கு சென்று கேட்கலாம் + பாடலாம்

கந்த சஷ்டி கவசம்

சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு:

இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:

சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:

தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

  • ‘புக் நம்பர்ஸ்’
  • ‘பெர்ஃபெக்ட் மர்டர்’
  • ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’
  • ‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’
  • ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’

போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

இறப்பு

சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.

பெயர்க் காரணம்

‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தோற்ற மரபு

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.

புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி

மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை 3 மணிக்கு எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம் ஆச்சா” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

 

 

அடுத்த பக்கம் »