ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும் போதும், இந்தவருடம் நான் இதுசெய்யவேண்டும், அது பண்ணவேண்டும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு/பல தீர்மானங்கள் எடுப்போம்.

ஆனால் இறுதிவரை அது தீர்மானமாகவே இருந்துவிடுகின்றது. அல்லது தீர்மானத்திலிருந்து பின்வாங்கி விடுவோம்.

உதாரணத்திற்கு;

“சென்ற ஆண்டு ஜனவரி முதல் சிகரெட்டை நிறுத்திவிடுவது என்று தீர்மானம் செய்தேன்”
“அப்படியா? இந்த ஆண்டு என்ன தீர்மானம் செய்வதாக இருக்கிறீர்கள்?”
“இந்த ஆண்டும் அதே தீர்மானத்தைத்தான் எடுக்கவிருக்கிறேன்.” என்ற உரையாடல் பிரசித்தம்.

அப்போ எப்படி இந்த புத்தாண்டு தீர்மானத்தை நிஜமாக்குவது?

  • ஒரே ஒரு தீர்மானம் என்று முடிவு செய்யுங்கள்: விதவிதமான நோக்கங்களைக் கொண்ட பட்டியலை வைத்துக் கொண்டு எதையும் தொடரவும் முடியாமல், முடிக்கவும் முடியாமல் தோல்வியடைய வேண்டாம். ஒரே ஒரு தீர்மானம் போதும். அதை வெற்றிகரமாக முடியுங்கள்.
  • குறிப்பிட்ட உண்மையான இலக்கை தீர்மானியுங்கள். பெரும்பாலும் நிறைய பேர் எடுக்கும் தீர்மானம் போதைப் பழக்கத்தை விடுவது.அல்லது உடல் எடையைக் குறைப்பது போன்றவைதான். ஆனால் பலரும் அதை கடைபிடிப்பதில்லை.சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு இலக்கைக் கைக் கொள்ளுங்கள்.அதில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.உறுதியான சாதிக்கக்கூடிய இலக்கை தீர்மானிக்கும்போது அதற்காக நீங்கள் எப்படி திட்டமிட்டு முடிக்க முடியும் என்ற வழியையும் கண்டுபிடிப்பீர்கள்.
  • டிசம்பர் 31ம் தேதிவரை காத்திருக்க வேண்டாம். திட்டமிடுதல் என்பது இலக்கை அடைவதற்கான முக்கிய பகுதியாகும். உங்கள் நடத்தையில் முக்கிய மாற்றத்தை எப்படி ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் வழிமுறையை தீர்மானியுங்கள்.அதற்கு வரக்கூடிய தடைகளையும் முன் கணிப்பு செய்யுங்கள்.இதெல்லாம் ஜனவரி 1ம்தேதிக்கு முன் செய்துவிடுங்கள்.
  • முதல் அடியை எடுத்து வையுங்கள்: ஒரேயடியாக எல்லாவற்றையும் முடித்துவிடவேண்டும் என்பதுபோல் ஆர்பாட்டமாக கிளம்பி விரைவில் சோர்ந்துவிட வேண்டாம்.உடல் எடையைக் குறைக்கிறேன் என்று முழு பட்டினி கிடந்துவிட்டு ‘அய்யையோ நம்மால் முடியாது’ என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு பழையபடி உடல் எடையைக் கூட்டுவது என்று போய் விடாமல் ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவதற்கு கல்லை சிறிது சிறிதாக உடைத்து எடுப்பதுபோல் உங்கள் உடல் வடிவத்தை செதுக்குங்கள். இந்த உதாரணம் உங்களின் எல்லா தீர்மானங்களுக்கும் பொருந்தும்.ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது. இந்த ஆண்டுக்கும் 365 நாட்கள் இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு நாளையும் பயன் படுத்துங்கள்.
  • தோல்வியடைந்த தீர்மானத்தை மீண்டும் எடுக்காதீர்கள்:கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் எடுத்த தீர்மானங்களை நிறைவேற்ற முடிய வில்லை என்றால் இந்த ஆண்டும் அதையே தீர்மானிக்காதீர்கள்.ஏனென்றால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான மனவலிமை அல்லது சூழல் இல்லை என்பதை அறிக. மாறாக வேறு ஒரு செயல் திட்டத்தை எடுத்து அதை இந்த ஆண்டு நிறை வேற்றுங்கள். இந்த அனுபவத்தை வைத்து மனவலிமையுடன் அடுத்த ஆண்டு முன்பு தோல்வியடைந்த பழைய தீர்மானத்தைக் கையில் எடுங்கள்.நிச்சயம் நிறைவேறும்.
  • சிறிய மாற்றங்கள் போதும்: உங்களுடைய ஆரோக்கியமற்ற சில நடவடிக்கைகளை நிறுத்திவிட தீர்மானித்திருக்கிறீர்கள் என்றால் அது நடைமுறைக்கு வர சில காலம் பிடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஏனென்றால் உங்களுடைய அந்த விரும்பத்தகாத பழக்கம் என்பது உங்களுடன் நீண்ட காலமாக ‘பழகிப்’ போயிருக்கிறது! இது ஒன்றும் இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியது.அதனால் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.
  • சிறிய தடுமாற்றங்களால் பின் வாங்க வேண்டாம்: தீர்மானங்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்கள் புத்தாண்டு தீர்மானத்தை முற்றிலும் கைவிடக் காரணமாகி விடுகின்றன. ஒரு வேலை சில காரணங்களால் உங்கள் விரும்பத் தகாத பழக்கத்திற்கு மீண்டும் செல்ல நேரிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். இலக்கை நோக்கிச் செல்லும் பாதை எப்போதும் நேராக இருப்பதில்லை. அவை எப்போதும் சவால் நிறைந்தவைதான். புதிய படிப்பினையைக் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

கண்திறந்து கனவு காண வேண்டும். நிஜ பிம்பங்கள் கண்ணில் நிழலாட வேண்டும். சும்மா பேச்சுக்கு மட்டும் இல்லாமல் நிஜமாகவே உறுதியாக இருக்கவேண்டும்.

தீர்மானத்தை நித்தம் எண்ணி எண்ணி மனதில் உருவேற்றி நனவாக்கவேண்டும்.

பிறக்கப்போகும் ஆண்டு இனிய ஆண்டாய் அமைய இனிய வாழத்துக்கள்!