பெப்ரவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 35 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 நாட்கள் உள்ளன.
 • 1783 – ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
 • 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
 • 1834 – இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
 • 1859 – கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1899 – பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
 • 1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
 • 1948 – இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1957 – திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
 • 1966 – ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1969 – பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
 • 1976 – குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
 • 1978 – இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
 • 2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய “பிரமாஸ்” ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
 • 2007 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பிறப்புகள்

 • 1921 – கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005)

பெயர் : கே.ஆர்.நாராயணன், பிறந்த தேதி : பிப்ரவரி 4, 1921 பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார்.குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின் காவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது வழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.

இறப்புகள்

 • 1747 – வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1746) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்பதாகும். ( Constantine Joesph Beschi ). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிருத்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

 1. தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் ‘அடியார் வரலாறு’ என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.
 2. இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் ‘ஏ’ ‘ஓ’ போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் ‘எ’ ‘ஒ’ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது. 
 3. எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. ‘தேம்பாவணி’ என்னும் பெருங்காப்பியமும், ‘திருக்காவலூர் கலம்பகம்’ முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும். 
 4. திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார். 
 5. தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண ‘நிகண்டு’களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த ‘சதுரகராதி’ முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது. 
 6. இது தவிர, ‘தமிழ் – இலத்தீன் அகராதி’, போர்த்துகீசியம் – தமிழ் – இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் – இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் – தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது. 
 7. வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்
 • 1928 – ஹெண்ட்ரிக் லோரெண்ட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1853)
 • 1974 – சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894)

சிறப்பு நாள்

 • இலங்கை – விடுதலை நாள் (1948)