தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இரு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்க சாத்தியம் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.

மார்ச் 8-ஆம் தேதி மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370-ஐ தேடுதல் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் கடத்தப்பட்டது, நொறுங்கிவிட்டது என வெவ்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இன்னும் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் , மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிடம் விமானத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இரு பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்புத் துறைக்கு இத்தகவல் கிடைத்துள்ளது. படங்களை நிபுணர்களின் ஆய்வு செய்ததில், மாயமான விமானத்தின் பாகங்களாக அவை இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராயல் ஆஸ்திரேலியன் விமானப் படையும் அந்த கடல் பகுதிக்கு திருப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து மேலும் மூன்று விமானங்கள் அந்த இடத்திற்கு தீவிர தேடுதலில் ஈடுபடவுள்ளன” என்று டோனி கூறியதாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

இரு பாகங்கள் கண்டறியப்பட்ட இடத்தைத் துல்லியமாக டோனி குறிப்பிடவில்லை.எனினும், செயற்கைக் கோள் படங்களைக் கொண்டு விமான பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பது மிகக் கடினமான வேலை என்றும், ஒருவேளை அந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையதாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

239 பயணிகளுடன் கோலாலம்பூர் விமான நிலையித்திலிருந்து மார்ச் 8-ஆம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் கண்காணிப்பிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தேடுதல் பணிகள் நடக்கிறது. இன்னும் விமானம் மாயமான மர்மம் விலகாத நிலையில் பல்வேறு நாடுகளும், பொது மக்கள் குழுக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements