தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று விசி வருவதால் எம்.எச்.370 விமானத்தை தேடும் படலத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலிய கடற்படை தற்காலிகமாக கைவிட்டள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றால் தேடலில் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் தேடுதல் குழுக்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறபட்டுள்ளது.

மீண்டும் விமான பாகங்களின் தேடலை ஆஸ்திரேலிய கடற்படை நாளை(புதன்கிழமை)தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.

கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இந்த தொழில்நுட்பம் கொண்ட கருவி அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

அந்த கருவியின் உதவியால் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என ‘பென்டகன்’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்க கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisements