காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்டதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் போன விமானத்தோடு தொடர்புடையதா என்பதும் தெரியவில்லை.

தேடுதலை ஒருங்கிணைத்து நடத்தி வரும் ஆஸ்திரேலியாவும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரி இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால் அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விமான தேடல் பணியின் ஒருங்கிணைப்பாளர் ஆங்கஸ் அவுஸ்டன் கூறும்போது, “இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் நீர்மூழ்கி கப்பலும், ஆஸ்திரேலிய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலும் இணைந்து இன்று கடலுக்கடியில் விமானத்தின் கருப்புப் பெட்டி மூலம் வெளிவரும் சிக்கனல்களை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது” என்றார்.

விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள பேட்டரி ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் செயலிழந்துவிடும் என்று நம்பப்படுகிறது. விமானத்தின் பாகங்களை தேடும் பணி 2,17,000 சதுர கீ.மீ அளவில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்தத் தேடலில் எந்த லாவகமான தடயங்களும் கிட்டவில்லை என்பதால் தேடல் பகுதி ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் சுருக்கிக் கொள்ளப்பட்டு, குறுகிய எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்டது. தேடல் பணியில் மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஈடுப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பெர்த் ராணுவத் முகாமில் அந்நாட்டின் பிரதமர் டோனி அபாட் கூறுகையில், “காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை எமது நாடு கைவிடப் போவதில்லை.

எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில் நாங்கள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளோம்” என்றார் அவர்.