அட ஏன் அப்படி என்று நினைகின்றீர்களா…?

கொலம்பசஸ் ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது அமெரிக்கா. இதனை அவர் இந்தியா என்றே நம்பினார்.

அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாக அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொலம்பஸ் யார் என்று நம் பள்ளிக் குழந்தைகளைக் கேட்டால் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் என்று பதில் சொல்வார்கள். அப்படித்தான் நம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். கொலம்பஸ் அமெரிக்காவைக் “கண்டுபிடிக்கும்” முன்பே வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் பல லட்சக் கணக்கான மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள், முதல் முதலாக ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை மட்டும் தான் கொலம்பஸைச் சேரும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை.

உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கே ஐரோப்பாவிலிருந்து வந்த குடியேறிகள் இங்குள்ள மனிதர்களைப் பல நாணயமற்ற வழிகளில் போரில் வென்று, பலரைக் கொன்று குவித்து அவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களைத் தள்ளி வைத்து, அவர்கள் சுதந்திரத்தைப் பறித்து, அவர்கள் வாழ்க்கையைச் சூறையாடியவர்கள் என்பது தெரியாது. கொலம்பஸைப் பின்பற்றி இங்கு வந்த குடியேறிகள் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து வந்த மனிதர்களை நடத்திய விதம் பற்றிப் பள்ளிப் பிள்ளைகளுக்கான அமெரிக்கச் சரித்திரப் பாடப் புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

columbus_1772950b

கொலம்பஸ் முதன் முதலாக வந்திறங்கியது இப்போதைய ஹெய்த்தி (Haiti டொமினிகன் ரிபப்ளிக் (Dominican Republic) ஆகிய நாடுகள் அடங்கிய ஒரு தீவில்தான். பின்பு பல முறை கொலம்பஸ் இந்தத் தீவிற்கு வந்திருந்தும் அமெரிக்கக் கண்டத்தின் பெரும் நிலப்பரப்பிற்கு (main land) ஒரு போதும் வரவில்லை. அப்படி இருக்க அமெரிக்காவில் கொலம்பஸ் நாளைக் கொண்டாட வேண்டுமா என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் இருந்த ஆதிவாசிகள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்து போவதற்குக் காரணமாக இருந்தவனை வீரனாகக் கொண்டாட வேண்டுமா என்று சிலர் எதிர்க்கிறார்கள். இன்னும் சில காரணங்களுக்காக இதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

1452இல் அப்போதைய போப்பாக இருந்த ஐந்தாவது நிக்கலஸ், போர்ச்சுகல் அரசன் செய்ய ஆரம்பித்திருந்த அடிமை வணிகத்திற்கு (இவன் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து ஜனங்களைப் பிடித்து வந்து அடிமைகளாக விற்றான்) ஆதரவு அளிக்கச் சர்ச்சிலிருந்து ஒரு ஆணை பிறப்பித்தார். அதன்படி போர்ச்சுகல் அரசன், கிறிஸ்தவர் அல்லாத எந்த நாட்டிற்கும் சென்று அங்குள்ளவர்களை வென்று, அடிமைப்படுத்தி, அவர்கள் பொருள்களையும் அவர்கள் நாட்டையும் எடுத்துக்கொள்ளலாம்; அவர்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி ”நாகரீக” மனிதர்களாக மாற்றலாம் என்று ஆணை பிறப்பித்தான்.

கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசனிடமும் அரசியிடமும் தன் பயணத்திற்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு வழியில் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவில் வந்து இறங்கியபோது போப் நிக்கலஸ் வெளியிட்ட ஆணை அமுலில் இருந்தது. அதைப் பின்பற்றிக் கொலம்பஸும் அந்தத் தீவில் வாழ்ந்து வந்த மனிதர்களைத் தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டும்படியும், தேடித் தரும்படியும் கட்டளையிட்டுப் பல விதமாகத் துன்புறுத்தினான்.

அவர்களை எந்த அளவுக்குத் துன்புறுத்தினான் என்பதற்கு இரண்டு உதாரணங்கள்:

  1. தங்கள் கத்திகளைப் பதம் பார்ப்பதற்கு ஆதிவாசிகளின் உடம்பை உபயோகிப்பார்களாம்.
  2. ஒரு முறை இரண்டு ஆதிவாசிகள் ஒரு கிளியைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது குடியேறிகள் கிளியை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு அவர்கள் தலைகளைக் கொய்துவிட்டுச் சென்றார்களாம்.

அந்தத் தீவைச் சேர்ந்த மக்கள் அன்பு நிறைந்தவர்களாகவும், பேராசை அற்றவர்களாகவும் தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளுபவர்களாகவும் இருந்தார்கள் என்று கொலம்பஸே பின்னால் கூறியிருக்கிறான். அவர்களைப் போன்றவர்களை அதுவரை தான் பார்த்ததில்லை என்றும் அவர்கள் தங்களைப் போல் பிறரை நேசிப்பதாகவும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பதாகவும் கூறியிருக்கிறான். இப்படிப்பட்ட ஜனங்களை அவன் மனிதர்களைப் போல நடத்தவில்லை. அவன் அங்கு வந்தபோதெல்லாம் அவனால் பலர் உயிர் இழந்தனர். முதலில் எண்பது லட்சமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை, கொலம்பஸ் அங்கு வந்த எட்டே ஆண்டுகளில் ஒரு லட்சமாகக் குறைந்துவிட்டது.

massacre13

கொலம்பஸைப் பின்பற்றி ஐரோப்பாவிலிருந்து வந்த மற்ற குடியேறிகள், அமெரிக்கக் கண்டத்தின் பெரு நிலப்பரப்புக்கும் வந்தனர். முதலில் அமெரிக்காவின் கிழக்குப் பகுதிக்கு வந்து, பின் படிப்படியாகக் கண்டம் முழுவதும் பரவினர். அமெரிக்க அரசு இவர்கள் நிலத்தை எடுத்துக்கொள்ளப் பல தடவை தானே போட்ட ஒப்பந்தங்களை மீறியிருக்கிறது. அங்கு வாழ்ந்து வந்த பழங்குடி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டதால் இப்போது அவர்கள் அமெரிக்க அரசு அவர்களுக்கென்று தந்துள்ள ஒதுக்கிடங்களில் (reservations) வாழ்ந்து வருகிறார்கள். முதலில் இருந்தவர்களில் 95 சதவிகிதம் இறந்து போய்விட, இப்போது இருப்பவர்கள் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்களும் மற்ற அமெரிக்கர்களைப் போல் வசதியாக வாழவில்லை. அமெரிக்காவில் பல நூறாண்டுகள் வாழ்ந்த பழங்குடி மக்களின் முழு அழிவிற்கு மூல காரணமாக இருந்த கொலம்பஸின் நினைவு நாளைக் கொண்டாட வேண்டுமா என்று பழங்குடி இன மக்கள் உள்படப் பலர் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

dogf

அட்லாண்டிக் கடலை முதல் முதலாகத் துணிச்சலாகக் கடந்து சாதனை புரிந்தவன் என்றாலும் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருந்த பல இனங்களைச் சேர்ந்த மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தான் இந்த கொலம்பஸ்.

இப்ப சொல்லுங்க, இவன் தேடிவந்த இந்தியாவை கண்டுபிடித்திருந்தால் நம்ம கதி என்னவாயிருக்கும்…!!??