உலக நாடுகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 22) சர்வதேச பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1969ம் ஆண்டு கலிபோர்னியாவை ஒட்டிய கடலில் மிகப்பெரிய எண்ணெய்க்கசிவு விபத்து ஏற்பட்டிருந்தது. மக்களிடையே இவை பற்றி விழிப்புணர்வு கொண்டுவரும் வகையில் 1970ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் திகதி முதன்முறையாக கலிபோர்னியாவில் பூமிக்கென ஒரு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த குழுவினர், எண்ணெய்க்கசிவுகள், சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் கழிவுகள், பூச்சிக்கொல்லி பாவணை, காடழிப்பு என்பவை தொடர்பில் ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றது.

1990ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி, சர்வதேச நாடுகளும் இந்நிகழ்வை கடைப்பிடிக்க தொடங்கின. சுமார் 141 நாடுகளிடையே 200 மில்லியன் மக்கள் அன்றைய பூமிதினத்தை கடைப்பிடித்தனர்.

2000ம் ஆண்டு 30 வது சர்வதேச பூமி தினத்தின் போது பூமியை சுத்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட உலக மக்களுக்கு அழைப்பு விடப்பட்டது. 2010ம் ஆண்டு பூமி தினத்தின் போது சுமார் ஒரு மில்லியன் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வருடம் 45 வது பூமி தினமாகும். இன்று 175 க்கு மேற்பட்ட நாடுகளில் 500 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இப்பூமி தினத்தை கொண்டாடிவருகின்றனர். இவ்வருடத்திற்கான அழைப்பாக சுமார் ஒரு மில்லியன் பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

உங்களது நாளாந்த நடவடிக்கைகளில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் இப்பசுமை நடவடிக்கையில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளலாம் என இவ் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கார் பிரயாணங்களை குறைத்தல், மின் விளக்கு பாவணயை கட்டுப்படுத்தல்,  சமைத்த உணவுகளை உண்ணல், பிளாஸ்டிக் போத்தல்களில் வெளி இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை தவிர்த்தல், குளிர்ந்த நீரில் நீங்களே உங்கள் ஆடைகளை சலவை செய்தல், செல்லவேண்டிய வெளியிடத்துக்கு நடந்து செல்லல் என நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு சிறிய  நடவடிக்கையும் இங்கு Pledge செய்வதன் மூலம் இந்த ஒரு பில்லியன் பசுமை நடவடிக்கைக்கு உங்களது பங்களிப்பையும் தெரிவிக்கலாம். இன்றைய தினத்தை நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்க போகிறீர்கள்?

மீடியா உலகில் என் நண்பி ஒருவர் சொல்கின்றார், கேட்டுப்பாருங்கள் (அவ சொன்னா கேட்பீங்க 🙂

இப்போதே முடிவெடுங்கள்.

முடிந்தால் அதை நாள் தோறும் செயற்படுத்துங்கள்!!!