வெள்ளி, மார்ச் 25th, 2016


நிகழ்வுகள்

 • 1655 – டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.
 • 1807 – அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.
 • 1857 – பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
 • 1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
 • 1957 – மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
 • 1975 – சவுதி மன்னர் ஃபைசால் தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  1990 – நியூயோர்க் நகரில் சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

பிறப்புக்கள்

 • 1914 – நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009)

இறப்புக்கள்

 • 2014 – தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இயேசு கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். சிலர் இயேசுவின் சாவு கி.பி. 34ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை நற்செய்தி நூல்கள் ஆகும்.

நற்செய்திச் சான்றுப்படி, எருசலேம் கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட இயேசுவை முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.

இயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.

அப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்” என்றார். அதற்கு இயேசு, “நீரே சொல்லுகிறீர்” என்று பதிலிறுக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் “இவன் சாக வேண்டியவன்” என்று பதிலிறுத்தார்கள்.

இதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த பேதுரு கூட “இயேசுவை அறியேன்” என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான இயேசுவை மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.

அதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.

பின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், “சிலுவையில் அறையும்” என்று உரக்கக் கத்தினார்கள்.

இயேசுவை விடுதலை செய்தால் பெரிய கலவரம் நிகழும் என்றும் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து, “இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கூறித் தன் கைகளைக் கழுவினார்.

படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தார்கள். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மீது வைத்து, அவரது வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாட்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். இவ்வாறு ஏளனம் செய்த பிறகு, அவருடைய பழைய ஆடைகளை அவருக்கு மீண்டும் உடுத்தி, அவருடைய தோள்மீது சிலுவையைச் சுமத்தினார்கள். இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு “மண்டை ஓட்டு இடம்” (கல்வாரி – Calvary = the place of the skull) என்னும் இலக்கு நோக்கி நடந்தார்.

சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவினார். பெருந்திரளான மக்கள் இயேசுவுக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக எழ வேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்க்ள் மக்களுக்காகவும் அழுங்கள்” என்றார்.

“மண்டை ஓடு” எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் ஏற்றினார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது:

மிகப் பழைமையான வழ்க்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்:

1) இறைவாக்கு வழிபாடு

 பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும்.

2) சிலுவைக்கு வணக்கம் செலுத்துதல்இயேசு

உயிர்துறந்த சிலுவை கிறித்தவர்களுக்குத் தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும். எனவே, பெரிய வெள்ளிக் கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். எரியும் மெழுகுவத்திகள் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்படும். குருவும் மக்களும் சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம். அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.

3) நற்கருணை விருந்து

இயேசு சிலுவையில் உயிர்துறந்து மக்களுக்கு விண்ணக வாயிலைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அவர் இறந்த நிகழ்ச்சியைத் திருப்பலியாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பெரிய வெள்ளிக்கிழமையன்று தனியாகத் திருப்பலி நிகழ்வதில்லை. ஏனென்றால் இயேசுவே இப்பலியைக் கல்வாரி மலைமேல் ஒப்புக்கொடுத்தார். தம்மையே மனிதரின் மீட்புக்காகக் கையளித்தார். இவ்வாறு தம்மை அன்புக் காணிக்கையாகக் கொடுத்த இயேசுவோடு அன்புறவு கொள்ளும் விதத்தில் கிறித்தவர்கள் இயேசுவின் உடலை அப்ப வடிவில் அடையாளமாக உண்பார்கள்.

பின்னர் அனைவரும் அமைதியாகப் பிரிந்து செல்வார்கள்