திதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும்.
சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள்.

பவுர்ணமி அன்று நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள்.
சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை.
திதி என்ற சொல்லே பிறகு தேதி என்று பெயரானது.

அமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன.

இந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும். அவை :
1. பிரதமை, 2. துவிதியை, 3.திருதியை, 4.சதுர்த்தி, 5.பஞ்சமி, 6.சஷ்டி, 7.சப்தமி, 8.அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை.
30 திதிகளில் பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் மட்டும் பெயர் உள்ளது.

மற்ற 28 திதிகளும் ஒன்று, இரண்டு என்ற வடமொழிச் சொற்களால் வழங்கப்படுகின்றன.
வளர்பிறை திதிகள் (அமாவாசைக்கு அடுத்த நாள் முதல்) 14 ஆகும்.
தேய்பிறை திதிகள் (பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல்) 14 ஆகும்.
அமாவாசை 1, பவுர்ணமி -1
ஆக மொத்த திதிகள் 30
பதினான்கு திதிகளில் அமாவாசைக்கு அடுத்த நாள் ஆரம்பித்து பவுர்ணமிக்கு முதல் நாள் முடியும் திதிகள் சுக்ல பட்ச திதிகள் அல்லது வளர்பிறை திதிகள் எனப்படும்.

பவுர்ணமிக்கு அடுத்த நாள் ஆரம்பித்து அமாவாசைக்கு முதல் நாள் முடியும் திதிகள் கிருஷ்ண பட்ச திதிகள் அல்லது தேய்பிறை திதிகள் எனப்படும்.