சமையல்
தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் பொடி செய்தது – 3/4 கப்
நெய் – 1/2 கப்
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 5 அல்லது 6
தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை:

கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி, மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத்தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும். மாவு சிறிது நேரத்தில், வெல்லப்பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்) ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.

நன்றி: கமலாவின் அடுப்பங்கரை.தேவையானப்பொருட்கள்:

பால் – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
நெய் – 1/2 கப்
ரவா – 1/4 கப்

செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.

ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும்.

இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. பால் கோவா போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.

குறிப்பு: இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். எல்லப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு (மைக்ரோ அவனில் வைக்கக் கூடிய பாத்திரம்) 8 முதல் 10 நிமிடங்கள் வரை அல்ல்லது அல்வா சரியான பதம் வரும் வரை வைத்திருந்து எடுக்கவும். ஆனால் இடை இடையே இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பாத்திரத்தை வெளியே எடுத்து கிளறி விடவும்.

நன்றி: கமலா

பொங்கல் பண்டிகையன்று செய்வது…

தேவையான பொருள்கள்:

பச்சைஅரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1/4 கப்
மிளகு –  2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி –  ஒரு துண்டு
முந்திரிப் பருப்பு – 10
உப்பு –  தேவையான அளவு

ஹோட்டல் சுவைக்கு:

பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை –  சிறிது
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை

venpongal

செய்முறை:

 • பயத்தம் பருப்பைக் கழுவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
 • வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

*  சாதாரண நாள்களில் பாதி நெய்யும், பாதி ரிஃபைண்ட் எண்ணையும் கலந்து செய்யலாம். உண்மையில் எண்ணணயில் தாளித்து, கடைசியில் நெய்யை சூடாக இருக்கும் பொங்கலில் கலந்து செய்வதே சுவை அதிகமாக இருக்கிறது.

venpongal.JPG

நன்றி – Jayashree Govindarajan

பொங்கல் பண்டிகையன்று செய்யும் இனிப்பு வகை..

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப் (*)
வெல்லம்  – 2 1/2 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20
கிஸ்மிஸ் – 20
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
தேங்காய் – சிறிது
பச்சைக் கற்பூரம் – சிறிது

sarkkarai-pongal11.JPG

செய்முறை:

 • அரிசி, பருப்புகளைக் கழுவி நீரை வடித்துவிட்டு, லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
 • பின்னர் பால், 3 கப் தண்ணீருடன் சேர்த்து குக்கரில்(அல்லது பானையில்) குழைய வேக விடவும்.
 • வாணலியில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
 • லேசான பாகு வந்தவுடன் பொங்கலை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மாதிரி பாகு வைத்துக் கிளறினால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
 • இறுதியில் நெய் சேர்த்து, கெட்டியாகிச் சுருண்டு வரும்வரை நன்றாகக் கிளறவும்.
 • ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்தாலும் அல்லது இரண்டும் சரிசமமாகச் சேர்த்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

sarkkarai pongal

நன்றி – Jayashree Govindarajan

 

சர்க்கரைப்பொங்கல்


தேவையானப் பொருட்கள்:

அரிசி – 1 கப்
வெல்லம் பொடி செய்தது – 2 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப்பருப்பு – 5
காய்ந்த திராட்சை – 5
ஏலக்காய் – 4

செய்முறை:

அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் வெல்லப் பாகை விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சாதமும் பாகும் நன்றாகக் கலந்தபின், முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

இந்த ஆண்டின் பெயர் சர்வதாரி.

தமிழ் புத்தாண்டு அன்று, மிக முக்கியமாக சமையலில் எல்லா விதமான சுவைகளும் சேர்க்கப்படும். நம் வாழ்க்கையும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்று அனைத்தும் கலந்த கலவைதான் என்பதை நமக்கு உணர்த்துவதுடன், அதை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

வெல்லம் (இனிப்பு), மாங்காய் (புளிப்பு), வேப்பம்பூ (கச‌ப்பு), மிளகாய் (காரம்) சேர்த்து பச்சடி செய்வது வழக்கம்.

சில‌ர், மாங்காய் ப‌ச்ச‌டியும், வேப்ப‌ம்பூ ர‌ச‌மும் செய்வார்க‌ள். அத்துடன், வடை, பாயசம், இனிப்பு போளி மற்றும் மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை மூன்றும் கலந்த சாம்பார் ஆகியவை புத்தாண்டு சமையலில் இடம் பெறும்.

சுவையாகச் சமைத்துப் படைத்து, பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

மாங்காய் பச்சடி


தேவையானப் பொருட்கள்:

மாங்காய் -‍ 1 பெரியது
வெல்லம் பொடித்தது ‍- 1/2 கப்
சாம்பார் பொடி -‍ ‍ 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ‍- ஒரு சிட்டிகை
உப்பு ‍- ஒரு சிட்டிகை
எண்ணை ‍- 1 டீஸ்பூன்
கடுகு ‍- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ‍- சிறிது

செய்முறை:

மாங்காயை தோல் சீவிவிட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும்.

காய் நன்றாக வெந்தவுடன், ஒரு கரண்டியால் மசித்துக் கொள்ளவும். வெல்லப் பொடியைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து, காயுடன் சேர்ந்தப்பின், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு:சாம்பார் பொடிக்குப் பதில், வெறும் மிளகாய்த்தூளையும் சேர்க்கலாம். வெறும் மிளகாய்த்தூள் சேர்ப்பதானால், அளவை சிறிது குறைத்துக் கொள்ளவும். மேலும், மாங்காயின் புளிப்புத் தன்மைக்கேற்ப, வெல்லத்தை, சிறிது கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும்.

மசால் வடை


தேவையானப் பொருட்கள்:

கடலைப்பருப்பு -‍‍ 2 கப்
பெரிய‌ வெங்காய‌ம் ‍‍‍- 1
ப‌ச்சைமிள‌காய் – 2 அல்ல‌து 3
காய்ந்த‌ மிள‌காய் – 1
இஞ்சி – ஒரு சிறுத்துண்டு
க‌றிவேப்பிலை – சிறிது
தேங்காய்த்துருவ‌ல் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணை – பொரிப்பத‌ற்கு

செய்முறை:

கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மீதி பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து ச‌ற்று கொர‌கொர‌ப்பாக‌ அரைத்துக் கொள்ள‌வும். அரைக்கும் பொழுது த‌ண்ணீர் சேர்க்க‌ தேவையில்லை.

வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை பொடியாக‌ ந‌றுக்கிக் கொள்ள‌வும். இவை எல்லாவ‌ற்றையும் அரைத்த‌ ப‌ருப்புட‌ன் சேர்க்க‌வும். அத்துட‌ன் தேங்காய்த்துருவ‌லையும் சேர்த்து பிசைந்துக் கொள்ள‌வும்.

ஒரு வாண‌லியில் எண்ணையைக் காய‌ வைக்க‌வும். எண்ணை காய்ந்த‌ பின், எலுமிச்ச‌ம் ப‌ழ‌ அள‌வு மாவை எடுத்து உருட்டி, இட‌து உள்ள‌ங்கையில் வைத்து அத‌ன் மேல் வ‌ல‌து உள்ள‌ங்கையால் லேசாக‌ அழுத்த‌வும். அதை எடுத்து காய்ந்த‌ எண்ணையில் போட்டு பொன்னிற‌மாக‌ பொரித்தெடுக்க‌வும்.

க‌வ‌னிக்க‌: சோம்பு வாச‌னை பிடிக்க‌வில்லை என்றால், அதை த‌விர்த்து விட்டு, அத‌ற்குப் ப‌தில் சிறிது பெருங்காய‌த்தூளைச் சேர்த்து செய்ய‌லாம். விருப்ப‌மில்லையென்றால், தேங்காயையும் த‌விர்த்து விட‌லாம்.

பழப் பாயசம்

வெறும் பால், பழம் போன்றவற்றை சாப்பிடுவது என்றால், பலருக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால், இதையே சுவையாக சமைத்துக் கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானப் பொருட்கள்:

பால் – 5 கப்
சர்க்கரை – 1 கப்
கஸ்டர்ட் பவுடர் – 2 டீஸ்பூன்
பழத்துண்டுகள் – 2 கப்
உலர்ந்த பழங்கள் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரைத்துக் கொள்ளவும். மீதி 4 கப் பாலை நன்கு காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கும் பொழுது, தீயைக் குறைத்து விட்டு, கஸ்டர்ட் பவுடர் கலவையை அதில் ஊற்றவும். அத்துடன் சர்க்கரையை சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு, திரும்பவும் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும்.

ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, பேரிக்காய் அல்லது தங்களுக்கு விருப்பமான பழங்களை, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஆறிய பாலையும், பழத்துண்டுகளையும், தனித்தனியாக, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

பரிமாறுவதற்கு சற்று முன்னதாக, இரண்டையும் ஒன்றாக கலந்து, கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றிக் கொடுக்கவும்.

நன்றி: கமலா

தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
பால் – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்

paruppu paayasam

செய்முறை:

 • வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.
 • இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.
 • வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.
 • 2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.

* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோங்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.

* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.

* ஆறியதும் அதிகமாக இறுகும்.

நன்றி ஜெயஸ்ரீ

எம்மில் நூற்றுக்கு அறுபது பேருக்கு சர்க்கரை வியாதி என ஒரு ஆய்வு கூறுகின்றது. இந்த சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் குணம் பாகற்காயிற்கு உண்டு. எனவே இன்று ஒரு பாகற்காய் பதார்த்தம்  செய்வதைப்  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – பொடியாக நறுக்கியது
வெங்காயம்
இஞ்சி, பூண்டு விழுது
எண்ணை தேவையான அளவு
உப்பு – ருசிக் கேற்ப
காய்ந்த மிள்காய், கடுகு, உளுத்தப் பருப்பு – தாளிக்க
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை:

முதலில் சிறிது எண்ணெய் விட்டு சூடானபின் கடுகு, உளுத்தப் பருப்பு, மிளகாய் இவற்றை விட்டு வதக்கவும்.

பிறகு வெட்டிவைத்த வெங்காயத்தையும் சேர்த்து வெங்காய வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்… கூடவே இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்.

இப்போது வெட்டிவைத்த பாகற்காயை சேர்த்து மஞ்சள் தூள் தூவி அரை டம்ளர் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வேக விடவும்.

இப்போ மிளகாய்த்தூள், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அடிப்பிடிக்காத வாறு கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

நல்லா வதங்கிய பின் பார்த்தால்… நம்ம பாகற்காய் தொக்கானது ரெடியாக சுடச்சுட இருக்கும்.

இதனை தோசை, சப்பாத்தி, சோறு, இடியப்பம் .. எதுவானாலும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்..

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »