சினிமா


குழந்தைகளின் உலகுக்குள்

அனுமதிக்கப்படாத அந்நியர்கள்

தங்களை பெரிய மனிதர்களாக

எண்ணிக்கொள்வது பிழையல்ல

பேதமை!

காலையில் விகடனில் படித்துவிட்டு ‘அட!’ போடவைத்த இந்த வரிகள் மாலை தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தபோது அப்படியே மனதில் ஆழப் பதிந்துபோனது.

Vikram, Baby Sara in Deiva Thirumagan

கிருஷ்ணா – நிலா என்ற இரண்டு குழந்தைகளின் உலகம். இந்தக் குழந்தைகளின் குடும்பத்தின் ஐந்து வயதுக் குட்டி ஏஞ்சல் நிலாவாக பேபி சாரா. அவருக்குத் தகப்பனாக, தாயாக ஏன் சமயத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னுமொரு குழந்தையாக ஒரு மனநிலை குன்றியவரின் பாத்திரத்தில் சற்றும் அலட்டலில்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். இந்த இருவருக்கும் இடையிலான விளையாட்டு, குறும்பு, பாசம், பிரிவு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் இதுதான் தெய்வத் திருமகள்.

கலகலப்பாக ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் சிரித்துச் சிரித்து கண்ணில் வந்த கண்ணீர் காயுமுன்னரேயே மகளைப் பிரிந்து கிருஷ்ணா கதறும் காட்சி உறையவைக்க உணர்வுகளின் கலவையாக, ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் முழுமையாக உணரவைக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அடித்துச்சொல்லியிருக்கிறது தெய்வத்திருமகள்.

படத்தில் இசையே பேசப்படாத பல வசனங்களைப் பேசிவிட, பல இடங்களில் பாத்திரங்களது மௌனமும் உடல் மொழிகளுமே புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் இசை காதுகளில் நுளைந்து மனதைக் கட்டிப்போட்டு விடுகின்றன. சரியான பாத்திரத் தெரிவுகள், அலட்டலில்லாத நடிப்பு, மனதைக் கவரும் இசை என்று எல்லாவற்றையும் தாண்டி படம் முடிந்து பல மணி நேரம் ஆகியும் இன்னும் மனதுக்குள் நிற்பது – நிலா!

sara-11

அடர்ந்த புருவங்கள், கதை பேசும் கண்கள், மெல்லிய புன்னகை என்று ஒருமுறை பார்த்தாலே மனதோடு ஒட்டிக்கொள்ளும் அந்தச் சின்ன முகமே படத்தின் பாதி இடங்களில் நடித்துவிடுகிறது. பாடசாலைக்கு வரும் தகப்பனிடம் சைகை மொழியில் உரையாடி வீட்டுக்குப் போகுமாறு கையெடுத்த்துக் கும்பிடுவதாகட்டும், இடிக்குப் பயந்து இருவரும் ஒடுங்கிக் கிடந்துவிட்டு கைகளில் தண்ணீர் ஏந்தி விளையாடுவதாகட்டும், தகப்பனைப் பிரிந்து ஏங்கும் காட்சிகளாகட்டும், இறுதி நேர நீதிமன்றக் காட்சியில் தகப்பனும் மகளுமாக சைகைகளிலேயே கோபித்துக்கொள்வதும் பின் சமாதானமாகி கதைபேசி உரையாடுவதும் அன்பைப் பரிமாறுவதும் என ஒவ்வொரு காட்சிகளுமே ஒவ்வோர் வார்த்தையில்லாக் கவிதைகள். மழலைக் குரலும், காட்சிக்கேற்ப மாறிமாறிக் கதைபேசும் கண்களுமாக அந்தக் குட்டி ஏஞ்சலுக்கு ஐந்து வயதுதான் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. காட்சிக்குக் காட்சி பாசம், பிரிவு, ஏக்கம், வேதனை என்று மாறி மாறிக் காட்டி இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா? வீட்டுக்குப் போய் முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?

படம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.

குட்டி நிலாவின் பாசப் போராட்டம் முடிந்து வெளியேறும்போது அடர்ந்த மௌனம், கனத்த மனத்துடன் கொஞ்சம் கண்ணீரையும் சேர்த்தே தந்துவிடுகிறது தெய்வத்திருமகள்

மாங்கனி  என்றவுடன்  இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம். காரமும், புளிப்பும்  சேர்ந்து அருமையாக இருக்கும். காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.

தேவையான பொருட்கள்:
=========================
பழுத்த மாம்பழம் – ஒன்று
புளி – எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – அரை கப்
பச்சை மிளகாய் – பன்னிரண்டு
மிளகாய் தூள் – இரண்டு  டீஸ்பூன்
தக்காளி – நான்கு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – கால் கப்
கடுகு – கால் டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – கால் கப்

எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:
=====================================
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
அரிசி – ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
============
* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.

* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.

* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

ஒரு சின்னத்தாமரை என் கண்ணில் பூத்ததே… ஒரு இனிய பாடல். அதுவும் பாடகர் கிருஸ் மற்றும் சுசித்ரா ஆகியோர் அருமையாக பாடியுள்ளனர்.

தோழியா என் காதலியா போல் ஒரு பாடல் எதிர்பார்த்தேன். ஏமாற்றவில்லை. தமிழ்சினிமாவின் தற்போதைய விதிப்படி ஒரு சின்ன ராப்போடு தொடங்குகிறது. கிருஷ் மற்றும் சுசியின் குரலில் பல்லவி முதல் தடவை கேட்கும்போதே வசீகரிக்கிறது. பல்லவி முடிந்ததும் மீண்டும் அந்த ராப் என விதி காப்பற்றப்படுகிறது. பின் விஜய் ஆண்டனியின் டிரேட்மார்க் ஹம்மிங். பின் சரணம், மீண்டும் நடுவில் ராப் என சென்று முடிவில் மீண்டும் ராப்போடு முடிகிறது.

இந்த பாடலை Download செய்ய இங்கு கிளிக்பண்ணவும்

அந்த வீடியோ காட்சி அண்மையில் சன் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. பார்க்காதவர்கள் இங்கு பாருங்கள்

 

நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

 ‘உலகம் அழிய நேர்ந்தால்…’ என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012.

உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் ‘ருத்ரம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்… என்று போகிறது கதை.

அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட். நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமாத்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக் காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்…

இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள். படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது!

படம் பார்க்கச் சென்ற நேயர்கள் தமது செல்பேசிகளையும், உடமைகளையும் மெய்மறந்து நழுவவிட்டு, படம்முடிந்ததும் தியட்டர்களினுள் நின்று தேடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து…

 பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் எப்படி பணமுதலைகளைப் பந்தாடுகிறார் என்பதே கந்தசாமி.

ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன் பட வரிசையில் மற்றுமொரு படம்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததே படத்தின் ப்ளஸும், மைனஸுமாகிவிட்டது. ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானை சேவலாய்ப் பறந்து வந்து பந்தாடும்போதிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை விக்ரம் உழைத்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு முறை சேவல் கெட்டப் போடும்போதும் நடை, கண்கள், முகத்தை ஆட்டுவது என்று துவங்கி கொக் கொக் கொக் கொக் என்று குரல் குடுத்து, க-ந்-த-சா-மி என்று எதிரிகளை துவம்சம் செய்யும்போதும், சி.பி.ஐ. ஆஃபீஸராக மிடுக்குடன் நடமாடும்போதும் விக்ரம் ஜொலிக்கிறார்.

ஸ்ரேயா – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரேயா! அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது! அதுவும் அலேக்ரா பாடலில் கிட்டத்தட்ட ஷில்பா ஷெட்டிக்கு போட்டிபோடுகிறது அவரது ஹிப் மூவ்மெண்ட்ஸ்!

 

பாடல் காட்சிகளில் ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் போகும் உதடு, விக்ரமை கிறங்கடிக்க கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கிறது! ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை! ஸ்ரேயாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்!

வடிவேலு கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதுதான் படத்தின் ஒரு சில நித்திரை நிமிடங்களைக் கடக்க உதவுகிறது என்பது நிஜம்! குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி! மற்றவை சுமார்.

டைட்டில் போடும்போது கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் என்று ஒட்டு மொத்தமாகப் போடாமல் கதை – சுசி கணேசன், இசை – தேவி ஸ்ரீபிரசாத், திரைக்கதை –சுசி கணேசன்.. இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார். படத்திலும் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்து சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஏதோ செய்கிறார். வேறு இடங்களில் இயக்குனர் ஒன்றும் ஸ்பெஷலாகத் தெரிவதில்லை.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது திரையில் பார்க்கும்போது மைனஸாகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாச்சு என்பது போன்றவொரு சலிப்பு வருகிறது.

கிராபிக்ஸ் வேலைகள் பிரமாதம். படத்தின் பல இடங்களில் ஒருவித யெல்லோ டோனிலேயே எடுத்திருப்பது சில நேரங்களில் கண்ணுக்கு எரிச்சலைத் தருகிறது.

க்ளைமாக்ஸ் – மிகப் புதுமையான இதுவரை யாருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி……

என்று சொல்லலாமென்று ஆசைதான். ம்ஹ்ம்! அதே ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன்……

கந்தசாமி – ஒருதடவை பார்க்கலாம்..

ஓர் உண்மையான, உன்னதமான காதல், சம்பந்தப்பட்டவர் இறந்த பின்னும் வாழும், வாழ்விக்கப்படும் என்பதை சொல்லி வந்திருக்கும் படம்தான் பொக்கிஷம்.

கொல்கத்தா துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரியும் சேரனுக்கும், நாகப்பட்டினம்- நாகூரை சேர்ந்த இலக்கியம் படிக்கும் இஸ்லாமிய பெண் பத்மப்ரியாவுக்கும் இடையே சென்னையில் உள்ள மருத்துவமனையில் மலரும் 1970ம் வருடத்திய நட்பு, பின் மெல்ல மெல்ல காதலாக கசிந்து உருகுவதும், ஜாதி, மதம் கடந்து பின் அது கை கூடியதா? இல்லையா? என்பதும்தான் ‌பொக்கிஷம் படத்தின் மொத்த கதையும்!. இதை எத்தனை வித்தியாசமாக சொல்ல முடியுமோ, அத்தனை வித்தியாசமாக சொல்லி இருக்கும் சேரன், விறுவிறுப்பு காட்டாமல் வித்தியாசத்தை மட்டுமே காட்டியிருப்பதும், படத்தின் பாதி நேரம் கடிதமாக எழுதி தள்ளுவதும், மவுத்ஆர்கன் வாசித்தபடி பயணமாக செய்வதும் சற்றே வருத்தம்!


சேரன் லெனின் எனும் பாத்திரத்தில் விஜயகுமாரின் பொறுப்பான பிள்ளைகளில் ஒருவராகவும், பத்மப்ரியாவின் நண்பர் – கம் காதலராகவும் அழகாக வித்தியாசம் காட்டி அசத்தலாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சிவாஜி காலத்து நடிப்பை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே மாதிரி, அடிக்கடி மவுத்ஆர்கனும் கையுமாக.. என்னதான் 1970 காதல் என்றாலும் கமல் – மோகன் மாதிரி நமக்கு ஒத்து வருமா? என்பதையும் யோசித்திருக்கலாம் இயக்குனர் சேரன்!

இலக்கியம் படிக்கும் இஸ்லாமிய பெண் நதீராவாக பத்மப்ரியா, நாகூர் நதீராவாகவே வாழ்ந்திருக்கிறார். ஓல்டு கெட்-அப்பில் உடம்பிலும் இன்னும் சற்றே முதுமையை காட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். எனினும் பத்மப்ரியாவிற்கு விருதுகள் நிச்சயம்.

லெனின் – சேரனின் அப்பா தாமோதரனாக விஜயகுமார், மகனாக மகேஷாக ஆர்யன் ராஜேஷ் இந்த இருவரும் படத்தில் வரும் எண்ணற்ற பாத்திரங்களில் குறிப்பிட்து சொல்ல வேண்டியவர்கள். இந்த இருவரைப் போன்றே நதீரா – பத்மப்ரியாவின் அம்மாவாக வரும் ஹேமாவும் பிரமாதம். அதிலும் அப்பாவின் காதல் கடிதங்களை படித்து விட்டு அவரது காதலியை தேடி மலேசியா சென்று, மீதம் அப்பா அனுப்பாமல் விட்ட கடிதங்களை கொடுத்து ஆறுதல் அடையும் கமன் ஆர்யன் ராஜேஷின் கேரக்டரில் தெரிகிறார் டைரக்டர்.

1970ம் வருடத்திய அரசுபஸ், அதற்கான டிக்கெட், போஸ்டர் சீல், லெட்டர்ஸ், போஸ்ட் பாக்ஸ், சினிமா போஸ்டர்கள், கொல்கத்தா டிராம் வண்டி, குதிரை வண்டி, கூண்டு வண்டி, டாக்ஸி என ஏகமாக மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் சேரன், கொல்கத்தா பக்கத்து போர்ஷன் இளவரசுவின் மனைவி கல்பனா பேசும் டயலாக்குகளில் கோட்டை விட்டிருப்பது கொடுமை. 1970களில் ஆண்களே பேசத் தயங்கும், என்ன உங்களுக்கு அந்த மூன்று நாளா? முத்தமா, மொத்தமா?, போன்ற வசனங்கள் தேவைதானா? யோசித்திருக்கலாம் சேரன்!

சேரன்  – பத்மப்ரியாவின் நட்பு – காதலாக மாறும் என்பதையும், மதத்தை கடந்து இவர்களது காதலுக்கு பத்மப்ரியாவின் அப்பா சம்மதம் தெரிவிப்பதில் பின்னால் ஏதோ ப்ளான் இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே யூகிக்க முடிவது… உள்ளிட்ட இன்னும் சில பலவீனங்கள் இருந்தாலும் ராஜேஷ் யாதவின் ஓவிய ஒளிப்பதிவும், சபேஷ் முரளியின் காவிய இசையமைப்பும் அந்த பலவீனங்களை மறக்கடிக்க செய்யும் பெரும் பலங்கள். ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் பாலங்களும் கூட!

மொத்தத்தில் சேரனின் எழுத்திலும், இயக்கத்திலும், நடிப்பிலும் பொக்கிஷம் கோபுரத்தில் தூக்கி வைக்கும் உச்சமும் அல்ல.. குப்பையில் தூக்கிப் போடும் மிச்சமும் அல்ல…! காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனதில் ஓட்டும் பாதரசம்!

நன்றி: தினமலர்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »