காதலர் தினத்திற்கு ஒரு கவிதை கூட இல்லையா என பல காதலர்கள் (கவிதையை காதலிப்பவர்கள்) கேட்டுள்ளனர்.

ஒரு நேயர் ஒரு படி மேலேபோய், “ஏதாவது கவிதையை காப்பியடித்து நம்மாளுக்கு அனுப்பலாம் என்றிருந்தேன் எங்கே ஒன்றையும் காணோமே…? கவிதைக்கு ஏதும் பஞ்சமோ?” என்று கிண்டல் அடித்தார்!

இதோ … இவற்றை கவிதை என்பதைவிட காதல் தத்துவம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

 

‘நீயின்றி நானில்லை’
என்பதல்ல காதல்…
‘எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்’
என்பதுதான் காதல்!

 

 

 

பல திருமணங்கள்
முறிந்துபோவது
கருத்து வேறுபாடுகளால் அல்ல…
கருத்து வேறுபாடுகளை
எதிர்கொள்ளத் தெரியாததே!

 

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ…
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ…

 

 

இந்த உலகத்தில் நான்
யாரோ ஒருவன் இல்லை…
யாரோ ஒருத்திக்கு நானே
உலகமாய் இருக்கின்றேன்!

 

 

காதலர் தினத்தையொட்டி ஏற்கனவே கடந்த காலங்களில் பதியப்பட்டவைகளை கீழே காணலாம்.

காதலர்தினத்தை நீங்கள் எப்படி…?

காதலர்தின மொபைல் போன் !??

Valentine’s day என்பதை நம் தமிழர்கள் காதலர் தினம் என்று மொழி பெயர்த்து விட்டார்கள். ஆங்கிலத்தில் அதை lovers day என்றோ அல்லது அதன் பொருள் படும்படியாகவா அதை கொண்டாடுகிறார்கள்?!

இங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் இந்த தினத்தை நட்புக்கும் அன்புக்கும் உரிய தினமாக கொண்டாடுகிறார்கள்.

தமிழ் ரேடியோ முதல் தொலைக்காட்சி வரை இப்போது முக்கியமான கேள்விகள் “உங்கள் காதலிக்கு/மனைவிக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?”, “முத்தம் தான் சிறந்த பரிசா?”.

கடைகளில் எல்லாம் காதலர்தின படங்களும், அலங்காரங்களும் தான். இதயங்கள், ரோஜாக்கள், சாக்கிலேட்டுகள்….

இரண்டு இதயத்திற்குள் அம்பு பாய்தல், இருண்டு ரோஜாக்கள், கரடிக்குட்டிகள் கட்டிப்பிதித்தல்…இப்படி பல காதலர் தின படங்களுக்கு அளவே இல்லை. இந்த காதலர்தினத்திற்கு இந்து கடவுளே எமக்கு ஒரு அருமையான படத்தை தந்துள்ளனர்?!? (இந்துக்கள் யாரும் கோபிக்க வேண்டாம்)

கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அர்த்தநாரீஸ்வரரை விடவும் சிறந்த எடுத்துக் காட்டு உண்டா என்ன?

 

ஆண் பாதி பெண் பாதியாக.. ஆணே பெண்ணாக.. பெண்ணே ஆணாக.. ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒற்றை உயிராக.. பிரித்தறிய முடியாமல் பிணைந்திருப்பதுதான் தாம்பத்யம்.

ஆனால்,

இரு வேறு தனித்தனி மனிதர்கள்.. தனித்தனி சிந்தனை உள்ளவர்கள்.. தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளவர்கள்.. ஒருவராவது சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியம்தான்!

தினசரி நாம் செய்யும் சமையலே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்!

 மலையில் விளையும் ஏலக்காயும், வட இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியும், கொஞ்சம் முறாஞ்சி மணம் அடிக்கும் ஆட்டு இறைச்சியும், அல்லது கோழி இறைச்சியும், கடல் தரும் உப்பும் இன்ன பிறவும் சேர்த்து பிரியாணி செய்கிறோமே.. கமகமக்கும் அந்த பிரியாணியில் தனித்துத் தெரிவது அரிசியா? ஆடா? கோழியா? உப்பா? ஏலக்காயா? இவையெல்லாம் தனித்தனியே தெரிந்தால் அந்த பிரியாணிதான் வாயில் வைக்க சகிக்குமா?

வெவ்வேறு குணங்களும் மணங்களும் கொண்ட பொருட்கள் சேர்ந்து, தங்களின் சிறப்புகளையெல்லாம் கொடுத்து, முற்றிலும் புதிய சுவை கொண்ட பிரியாணியை உருவாக்குவது போலத்தான் வெவ்வேறு இடங்களில் பிறந்து, வெவ்வேறு எண்ணங்களும் செயல்களும் கொண்டு வளர்ந்த இரு மனிதர்கள் திருமணம் என்கிற பந்தத்தில் இணையும்போது முற்றிலும் புதியவர்களாக மாறுகிறார்கள்.

இங்கு ஒருவரின் தனித்தனி ரசனையையோ,  குணங்களையோ, சுபாவங்களையோ பிரித்து பார்கக்கூடாது. இருவரும் ஒன்றாகிய அந்த இனிய வாழ்வே எம் கண்ணுக்கு தெரியவேண்டும்.

இதுவே இன்றைய காதலர் தினத்தில் நாம் செய்யும் விடயமாகட்டும்!